
திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். நிறைய எதிர்பார்ப்புகளுடன் நடைபெறும் திருமணத்தில் சவால்களை சந்திக்கவும், சமாளிக்கவும் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடனும், நம்பிக்கையுடனும், ஆதரவுடனும் இருப்பது அவசியம். திருமணத்திற்குப் பிறகு எதிர்ப்படும் சவால்களும் அதை சமாளிப்பதற்கான வழிகளையும் இப்பதிவில் காணலாம்.
1. குடும்ப உறவில் பிரச்னை: கணவன், மனைவி இருவரது குடும்பத்தினர்களின் தேவையற்ற தலையீடு தம்பதிகள் இருவருக்கிடையே பிரச்னைகளை ஏற்படுத்தலாம். எனவே, குடும்பத்தாரின் தலையீட்டைத் தவிர்க்க முயற்சி செய்யலாம். அத்துடன், திருமணத்திற்குப் பிறகு கணவன், மனைவி இருவருடைய குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் சுமுகமான சூழ்நிலையை உருவாக்குவதும் வீட்டில் அமைதியும், நிம்மதியையும், சந்தோஷத்தையும் தரும்.
2. பொருளாதார சிக்கல்: திருமணத்திற்குப் பிறகு இருவரும் சேர்ந்து செலவுகளை சமாளிக்க வேண்டி வரும். வரவு, செலவுகளை பகிர்ந்து கொள்வதில் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தம்பதிகளுக்குள் ஏற்படும் நிதி சிக்கல் பெரும்பாலும் பதற்றத்தை ஏற்படுத்தும். நிதி திட்டமிடல் என்பது மிகவும் அவசியம். தம்பதிகள் இருவரும் தங்கள் நிதி இலக்குகளை ஆராய்ந்து ஒருவருக்கொருவர் ஆழமான புரிதலைப் பெற்று திறம்பட கையாள வேண்டியது அவசியம். இதன் மூலம் தேவையற்ற மோதல்கள் மற்றும் சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.
3. தாம்பத்தியத்தில் சிக்கல்: நீண்ட கால உறவில் தாம்பத்தியம் என்பது மிகவும் இன்றியமையாதது. இணக்கத் தன்மையின்றியும், உறவில் திருப்தியின்றியும் இருப்பது பிரச்னைக்கு வழிவகுக்கும். இதற்கு இருவரும் மனம் விட்டுப் பேசி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட வேண்டியது அவசியம். உறவின் நெருக்கம் என்பது உணர்வு ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும், அறிவுப்பூர்வமாகவும், பாலியல் ரீதியாகவும் ஏற்பட வேண்டியது. இதில் சிக்கல் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இல்லையெனில் திருமண உறவில் பிளவுகளை ஏற்படுத்தலாம்.
4. சுதந்திரம் சார்பாக எழும் சவால்கள்: திருமண பந்தத்தில் யாரும் யாரையும் அடக்கி வைக்கவோ, ஒருவர் மற்றவர் பேச்சை கேட்டுத்தான் ஆக வேண்டும் என்ற கண்டிப்போ, அடிமைத்தனமான எண்ணமோ இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். அதிகக் கட்டுப்பாடுகள் இருந்தால் அதனை மீறத் தூண்டும். தம்பதிகள் இருவருமே பேச்சிலும் செயல்களிலும் சுதந்திரமாக செயல்பட வேண்டியது அவசியம்.
5. வேலை மற்றும் குடும்பப் பொறுப்புகள்: இன்றைய காலகட்டத்தில் இருவரும் வேலைக்குச் செல்வதால் வீட்டு வேலைகளை பகிர்ந்துகொள்வது என்பது அவசியம். ஒருவரே வீட்டு வேலைகள் மற்றும் குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதும், மற்றொருவர் சுதந்திரமாக எந்தப் பொறுப்பும் இல்லாமல் இருப்பதும் தவறு. இது இருவரிடையே கசப்பான உணர்வு ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.
6. நம்பிக்கையின்மை: திருமணமான தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம். ஆனால், சில வேறுபாடுகள் புறக்கணிக்க முடியாத அளவுக்கு தோன்றும்போது சிக்கல்கள் ஏற்படும். ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைக்காவிட்டால் அது திருமண வாழ்வை சீர்குலைத்து விடும். தம்பதிகளுக்குள் அடிப்படை நம்பிக்கை என்பது மிகவும் அவசியம். இருவருக்குள்ளும் பரஸ்பர நம்பிக்கை ஏற்படுவது என்பது ஒரு பாதுகாப்பு உணர்வை அளிக்கும்.
7. சலிப்பு: தம்பதிகளுக்குள் காலப்போக்கில் சலிப்பு ஏற்படுவது என்பது இயற்கை. உறவுக்குள் நடக்கும் சில விஷயங்களால் அவர்கள் எளிதில் சலிப்படையக்கூடும். ஒவ்வொரு நாளும் எந்தவிதமான மாற்றங்களும் இல்லாமல் ஒரே மாதிரியான விஷயங்களைச் செய்வதும், பேசுவதும் சலிப்பை உண்டாக்கும். இந்த சலிப்பைப் போக்க எதிர்பாராத நடவடிக்கைகள் மூலம் வாழ்க்கையில் சுவாரசியத்தை உண்டு பண்ணலாம். எதிர்பாராத சமயத்தில் பரிசுகளை பகிர்ந்து கொள்வதும், திடீர் பயணம் மேற்கொள்வதும், சர்ப்ரைஸ் செய்வதும் சலிப்பை விரட்டும்.
8. ஒருவரை ஒருவர் மாற்ற முயற்சிப்பது: தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் நேசிப்பது உண்மையாக இருந்தாலும் அவர்களின் எல்லைகளை மதிக்கவும், தேவையான சுதந்திரம் கொடுக்கவும் மறுக்கக் கூடாது. அவர்களை சில விஷயங்களில் மாறும்படி கட்டாயப்படுத்துவதும், வற்புறுத்துவதும் தவறு. இணக்கமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட லட்சியங்களைப் புரிந்து கொள்வதும், இலக்குகளை அடைய உதவியாக இருப்பதும் அவசியம். அவர்களின் எண்ணங்களுக்கு குறுக்கே நிற்காமல் ஆதரவாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
9. வேலைப்பளு: வேலைப்பளு காரணமாக தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் போதுமான நேரத்தை ஒதுக்க முடியாமல் போகலாம். இதனால் ஒருவருக்கொருவர் அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் போகலாம். இதற்கு தம்பதிகள் இருவருமே போதுமான அளவு நேரத்தை செலவிட வேண்டும். பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதும், பயணம் செய்வதும், மனம் விட்டு வெளிப்படையாகப் பேசுவதும், ஒருவர் உணர்வுகளை மற்றொருவர் புரிந்து கொள்ளவும் முயல வேண்டும். ஆலோசனை தேவைப்படும் நேரங்களில் தயங்காமல் திருமண ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவதும் அவசியமாகும்.
10. குழந்தை பெற்றுக்கொள்ளுதல்: குழந்தை பெற்றுக் கொள்வதில் தம்பதிகள் இருவருக்குமே ஆர்வம் இருக்க வேண்டும். இதில் ஒருவருக்கு விருப்பம் இல்லையென்றாலும் பிரச்னை தலை தூக்கும். அடுத்தது, குழந்தை பிறந்த பிறகு தம்பதிகளுக்கு நிறைய பொறுப்புகள் வந்து சேரும். அதனை கணவன், மனைவி இருவருமே பகிர்ந்துகொள்ள வேண்டியது அவசியம். குழந்தை வளர்ப்பு விஷயத்திலும் பொறுப்பெடுக்க வேண்டும். இல்லையெனில் கருத்து வேறுபாடுகளும், பிரச்னைகளும் தலைதூக்கும்.