தற்போதைய காலக்கட்டத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த வகையில் நாடு முழுவதும் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு நேற்று அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் உஜ்வாலா திட்டத்தில் மூலம் பயன் பெறுபவர்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும். இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது ரூ.818.50 விற்பனை செய்யப்பட்டு வரும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை இனி ரூ.868.50க்கும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும் கேஸ் சிலிண்டர் ரூ.50 உயர்ந்து ரூ.550-க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமானமே வராத போது சமையல் கேஸ் விலையை மட்டும் உயர்த்தினால் மக்கள் எப்படி வாழ்க்கையை நடத்த முடியும். தற்போது நகரங்கள் மற்றும் கிராங்களில் அனைவரது வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கேஸ் விலை உயர்வு சாமானிய மக்கள் முதல் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். எல்லா பொருட்களின் விலையையும் உயர்த்தி விட்டு, தற்போது சிலிண்டர் விலையையும் உயர்த்தி இருப்பது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். கேஸ் சிலிண்டர் விலை ஏறும் போது அதனுடன் சேர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.
இப்படி சிலிண்டர் விலை உயர்ந்துகொண்டிருப்பது அடித்தட்டு மக்களுக்குச் சமாளிக்க முடியாத அளவு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி, சிலிண்டர் விநியோக ஊழியர்களுக்கான டிப்ஸ்ஸையும் சேர்த்தால் வீட்டு மாத பட்ஜெட்டில் சிலிண்டருக்காக மட்டும் ஆயிரத்து நூறு ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இல்லத்தரசிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.350-க்கு விற்பனையானது. 2014ம் ஆண்டு முதல், சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.410ல் இருந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே போய் தற்போது ரூ.820 என்ற அளவில் உயர்ந்துள்ளது. தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையான கேஸ் சிலிண்டர் விலையை இன்னும் ரூ.50 உயர்த்தி அடித்தட்டு மக்களின் தலையில் பேரிடியை இறக்கியுள்ளது மத்திய அரசு. ஏற்கனவே வீட்டு வாடகை, பெட்ரோல், உணவு, குழந்தைகளின் படிப்பு என்று அத்தனை செலவுகளையும் சமாளிக்க முடியாமல் திண்டாடி வரும் நிலையில், சமையல் கேஸ் விலை உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் குடும்பத்தலைவிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குடும்ப செலவுகளை பட்ஜெட் போட்டு செலவு செய்பவர்களுக்கு, கேஸ் காலியான உடனே வாங்க முடியவில்லை. விலை அதிகம் என்பதால், அதற்கு தனியாக பணத்தை ஒதுக்க வேண்டி உள்ளது. வாடகை வீட்டில் இருப்பவர்கள், விறகு அடுப்பு பயன்படுத்த முடியாது. கியாஸ் மற்றும் மின்சார அடுப்பை தான் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வு காரணமாக வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பெண்கள் திண்டாடி வருகின்றனர்.
இந்த சமையல் கேஸ் விலை உயர்வால் 3 வேளை உணவருந்திய ஏழை எளிய மக்கள் இனி 2 வேளை மட்டுமே உணவருந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அன்றாட கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அன்றாட செலவுகளை தாண்டி சமையல் கேஸ் சிலிண்டருக்கு அதிக செலவிட வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக இந்த விலை உயர்வால் பாதிக்கப்படுவது ஏழை, எளிய மக்கள் தான். எனவே இதை கருத்தில் கொண்டு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.