
ஒவ்வொருவரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் அவர்கள் சமையலில் பயன்படுத்தும் எண்ணெய்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. சிலர் ஆரோக்கியம் கருதி ரைஸ் பிராண்ட் எண்ணெய்களைத் தவிர்த்து, நல்லெண்ணெய், கடலை எண்ணெய் எனப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த எண்ணெய்களில் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையில் கலப்படம் செய்து விற்பனை செய்கின்றனர். அந்த வகையில் ஆரம்பத்திலேயே எண்ணெய்களில் கலப்படம் உள்ளதைக் கண்டறியும் வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
கடலை எண்ணெய்: கடலை எண்ணெயில் கலப்படம் உள்ளதா? இல்லையா என்பதை அதனுடைய நறுமணத்தை வைத்தே கண்டறிந்து விடலாம். கடலையை அரைத்து எண்ணெயை எடுக்கும்போதே கடலை எண்ணெயின் மணம் ஊரையே மணக்கச் செய்யும். கடலை எண்ணெயில் ஃபிளேவர்ட் ஸ்ப்ரேக்கள் கலப்படத்திற்காக தெளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இத்தகைய கலப்படமான கடலை எண்ணெயில் இயற்கையான வாசனையை விட, பிளேவர் ஸ்ப்ரேக்களின் வாசனை அதிகமாக வீசும். அவ்வாறு இருந்தால் அது கலப்படமான கடலை எண்ணெய் என்று கண்டறிந்து விடலாம்.
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயில் கலப்படத்தை அதன் உறையும் நிலையை வைத்துதான் கண்டறிய முடியும். தேங்காய் எண்ணெயில் சூடாக்கும் வெப்பநிலை அளவு அதிகமாக இருப்பதால் குறைந்த வெப்பநிலை அல்லது அறையின் வெப்பநிலை சற்று குறைவாக இருந்தால் கூட அது உறைந்து கட்டியாகி விடும். கலப்பட எண்ணெயாக இருந்தால் அது கட்டியாகாமல் இருக்கும்.
உடனடியாக தேங்காய் எண்ணெயில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய ஃப்ரிட்ஜில் வைத்துப் பார்த்தால் முற்றிலும் உறைந்து இருந்தால் ,அது ஒரிஜினல் தேங்காய் எண்ணெய். பாதி உறைந்து பாதி எண்ணெய் மிதந்து இருப்பதைக் கண்டால் அது கலப்பட தேங்காய் எண்ணெய் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நல்லெண்ணெய்: நல்லெண்ணெயில் கச்சா எண்ணெயிலிருந்து வெளியாகும் கழிவு எண்ணெய்யான பாமாயில் கலக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. நெய்க்கு அடுத்து பொதுவாகவே நல்லெண்ணெய்தான் விலை அதிகம். ஒரு கிலோ எள்ளை அரைத்தாலும் அதிலிருந்து கால் லிட்டர் எண்ணெய்தான் கிடைக்கும் என்பதால் நல்லெண்ணெய் விலை அதிகம். குறைந்த விலைக்கு நல்லெண்ணெய் கிடைக்கிறது எனில், அதில் கலப்படம் இருக்கக்கூடும். எனவே, நல்லெண்ணெய் வாங்கி அதை ஃபிரிட்ஜில் வைத்து உறைந்து வாசனை குறைந்து இருந்தால் அது கலப்படமான எண்ணெயாகும். ஏனெனில் நல்லெண்ணெய் உறையாது.
எண்ணெய் சமையலுக்கு மிகவும் அவசியம் என்றாலும், அதை அளவோடுதான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மீறிய எண்ணெய் மாரடைப்பிற்கு வழிவகுக்கும். எண்ணெய் பயன்படுத்துவதே ஆபத்தாக இருக்கும்போது கலப்பட எண்ணெய் இரண்டு மடங்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் மேற்கூறிய வழிமுறைகளை கையாண்டு கலப்படமற்ற எண்ணையை பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வு வாழுங்கள்.