

அன்றாடம் தினமும் காலையில் இந்த பாலை காய்ச்சாமல் நமக்கு இருக்க முடியாது. தினமும் டீ, காபி என இரண்டுக்கும் இந்த பால் முக்கியமானது. இந்த பாலை காய்ச்ச அடுப்பில் வைக்கும் போது தான் ஏதாவது போன் வரும் இல்லை, யாராவது கூப்பிடுவார்கள், இல்லை என்றால் நாமே மறந்தும் கூட விடுவோம். இப்படிப்பட்ட தருணங்களில் அந்த பால் தினமும் பொங்கி வழிவது சகஜமாகிவிட்டது. அப்படி பால் தினமும் பொங்கினால் நல்ல சகுனமா?? கெட்ட சகுனமா??
ஜோதிட சாஸ்திரத்தின் படி பால் பொங்குவது நல்லதல்ல என கருதப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தின் படி பாலை சந்திரனோடு ஒப்புகிறார்கள். பாலை சூடு படுத்த பயன்படுத்தப்படும் நெருப்பானது செவ்வாயோடு தொடர்புபடுத்தப்படுகிறது. செவ்வாயும் சந்திரனும் ஒன்றுக்கொன்று எதிரியாக கருதப் படுகிறது. இதன் காரணமாக பால் அடிக்கடி பொங்கி விழுந்தால் வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. பொருளாதார நிலையும் பாதிக்கப் படலாம்.
ஆனால் அதே சமயம் நாம் பொங்கல் திருநாளில் பாலை பொங்க விடுகிறோம். ஏனென்றால் அதைப் போலவே நம் வாழ்விலும் இன்பமும் பொங்கி வழிய வேண்டும் என்று. ஆகவே, என்றைக்காவது ஒரு நாள் பால் பொங்கினால் அதாவது வீடுகளில் விசேஷத்தின் போதோ அல்லது புது வீட்டில் குடி போகும் போதோ அல்லது ஏதாவது விசேஷ நாளன்றோ பாலை நாம் பொங்க விட்டால் அதைப்போன்று அந்த வீட்டிலும் இன்பம் பொங்கும் என்று பொருள். ஆனால் தினமும் பால் பொங்கி வழிந்தால் வீட்டில் சண்டைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அது மட்டுமில்லாமல் அடுப்பும் வீணாகலாம். ஆகவே முக்கியமான பண்டிகை நாளை தவிர மீதி நாளில் பாலை பொங்க விடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
இதை தடுப்பதற்கான சில வழிமுறைகளை இப்பதிவில் கூற இருக்கிறேன். பால் பொங்கி கீழே சிந்துவதை தவிர்க்க உதவும் நான்கு டிப்ஸ்களை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1. பெரிய பாத்திரத்தில் பாலை காய்ச்சவும்:
பெரிய பாத்திரத்தில் பாலை காய்ச்சுங்கள். பொதுவாக நாம் எல்லோருமே சிறிய பாத்திரத்தில் தான் பால் காய்ச்சுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இதனால் பால் பொங்கி வழியும் போது அது பொங்கி அடுப்பில் வழியலாம். இதனால் பால் வீணாவது மட்டுமில்லாமல், அடுப்பும் அழுக்காகிவிடும். எனவே பால் காய்ச்சும் போது எப்போதும் பெரிய பாத்திரத்தில் பால் காய்ச்சுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது பால் சூடாகும் போது விரிவடைய போதுமான இடத்தை வழங்குகிறது. அதனால் பால் பொங்கி வர போதிய இடம் கிடைக்கும்.
2. பாத்திரத்தின் மேலே மர கரண்டியை வைத்தல்:
பாலை காய்ச்சும் போதும் பால் காய்ச்சும் பாத்திரத்தில் கிடைமட்டமாக ஒரு மரக்கரண்டியை வைக்கலாம். இதனால் பால் காய்ந்த உடன் பால் பொங்கி கீழே வழியாது. இப்படி ஒரு மரக்கரண்டியை வைக்கும் போது அந்த கரண்டி பால் பொங்கி வரும் போது அதை கீழே விழ விடாமல் தவிர்க்கும்.
3. தண்ணீரை பக்கத்தில் வைத்திருக்க வேண்டும்:
பாலை கொதிக்க வைக்கும் போது, ஒரு கிளாஸ் தண்ணீரை அருகில் வைத்திருக்க வேண்டும். பாலை காய்ச்சும் போது, பால் பொங்கி வரும் தருணத்தில் சிறிது தண்ணீர் தெளிக்கவும். இப்படி செய்வதால் பால் கீழே சிந்தாது.
4. பால் காய்ச்சும் பாத்திரத்தில் வெண்ணை அல்லது நெய் தடவவும்:
பால் கொதிக்கும் முன், பால் பாத்திரத்தில் நெய் அல்லது வெண்ணெய் தடவவும். பாத்திரத்தில் நெய் தடவினால் பாத்திரம் மிருதுவாகும். இதன் காரணமாக பால் கொதித்த பிறகும் வெளியேறாமல் பாத்திரத்திலேயே இருக்கும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக பாலை அவ்வப்போது கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால், வெப்பம் சீராக பரவுகிறது. இது பால் பொங்கி கீழே சிந்துவதை தடுக்கிறது. மேலும் பால் காயும் வரை மொபைலை உபயோகிக்காமல் அங்கேயே நின்று கவனிப்பது மிகவும் அவசியம்.
பால் பொங்குவது தொடர்பான வாஸ்து உண்மைகளையும், அதனைச் சமையலில் எளிதாகத் தடுத்து அடுப்பை சுத்தமாகப் பராமரிக்க உதவும் எளிய வழிமுறைகளையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.