
உயிர் இல்லாத ஆடம்பரப் பொருட்களின் மீதுதான் இன்றைக்கு பலரும் அளவற்ற பாசத்தையும் அக்கறையையும் வைத்திருக்கிறார்கள். அந்தப் பொருட்களுக்கு கொடுக்கும் கவனத்தில் 10 சதவிகிதம் கூட மனிதர்கள் தங்களின் உடல் நலனுக்குக் கொடுப்பதில்லை.
நேரத்திற்கு சர்வீஸ், டைம் டு டைம் இன்சுரன்ஸ் என நாம் வைத்திருக்கும் பொருட்களுக்கு செலவு செய்ய யாருமே அஞ்சுவதுமில்லை, தயங்குவதுமில்லை. ஆனால், நம் உடலுக்கு ஏதாவது பிரச்னை என்றால் நாம் டாக்டரிடம் போவதற்கு யோசித்து யோசித்துதான் போகிறோம். மூன்று மாதத்திற்கு ஒரு முறை நாம் ஓட்டும் வண்டி, ஏசி, குளிர்சாதனப்பெட்டி, சிம்னி என எல்லாவற்றிற்கும் தவறாமல் சர்வீஸ் செய்யும் நாம், குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை நம் உடம்பை செக்கப் செய்து கொள்கிறோமா? இல்லவே இல்லை. வண்டியோ அல்லது வேறு ஏதாவது பொருளோ சிறிது பிரச்னை பண்ணினால் உடனே அதைத் தூக்கி கொண்டு ஓடுகிறோம். ஆனால், நமக்கு உடம்பில் ஏதாவது பிரச்னைக்கான அறிகுறி தெரிந்தால் கூட அதை பெரிதுபடுத்தாமல், விட்டு விடுகிறோம்.
வீட்டில் உள்ள ஆண்களுக்கு ஏதாவது கொஞ்சம் உடல் பிரச்னை தென்பட்டால் உடனே அம்மாவோ அல்லது மனைவியோ பதறியடித்துக் கொண்டு மருத்துவரிடம் செல்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் வெளியே கூட காட்டிக் கொள்வதில்லை. வேலைக்குப் போகும் பெண்களாவது, தான் சம்பாதிக்கிறோம் என்ற தைரியத்தில் காசை பற்றிக் கவலைப்படாமல் உடம்பிற்கு ஏதாவது ஒன்று வந்து விட்டால் உடனடியாக மருத்துவரை நாடுகிறார்கள்.
ஆனால், பொழுது விடிந்ததில் இருந்து இரவு படுக்கச் செல்லும் வரை ஓயாது ஓடி ஓடி உழைக்கும் குடும்பத் தலைவிகளின் நிலைமைதான் மிகவும் மோசம். அவர்கள் வீட்டிலுள்ள யாரிடமும் தனது உடல்நிலையை பற்றி பகிர்ந்துகொள்வதே இல்லை. ஏதாவது உடலுக்குப் பிரச்னை வந்தால் கூட, ‘நாம் வீட்டிலேதானே இருக்கிறோம், மருத்துவரிடம் சென்றால் அவர் ஏதாவது டெஸ்ட் எல்லாம் எடுக்கச் சொல்லி விட்டால் செலவு அதிகமாகி விடும். இந்தப் பிரச்னை தானாகவே சரியாகி விடும்’ என்று எத்தனையோ பெண்கள் இன்றளவும் நினைத்துகொண்டுதான் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.
சிலர் வீட்டிலேயே 365 நாளும் ஓடாமலேயே கேரேஜில் நின்று கொண்டிருக்கும் காருக்கு தவறாமல் சர்வீஸும் இன்சுரன்ஸும் கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், வீட்டிலேயே இருக்கும் மனைவிக்கோ அல்லது அம்மாவிற்கோ ஏதாவது பிரச்னை என்று வந்து விட்டால் செலவு செய்ய யோசிக்கிறார்கள்.
இன்னும் சிலர் மனைவி என்று மட்டுமல்லாமல், தனக்கென வரும்போது கூட செலவு செய்ய யோசிக்கிறார்கள். நமக்கு கார், ஏசி, வண்டி இவை எல்லாமே மிக மிக அத்தியாவசியப் பொருட்கள்தான். அவற்றிற்கு நேரத்திற்கு சர்வீஸ் செய்யாவிட்டால் சரியாக இயங்காது. அவை இல்லாவிட்டால் நமக்கு வேலையும் ஆகாது. ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம்தான். ஆனால், அதே சமயத்தில் நாம் உயிரோடு இல்லை எனில் அந்தப் பொருட்களால் நமக்கென்ன லாபம். நாம் உயிரோடிருந்தால்தானே அவற்றை உபயோகிக்க முடியும்.
ஒரு காருக்குக் குறைந்தபட்சம் வருடத்திறகு 20,000 இன்சுரன்ஸ் செலுத்தும்போது நாம் ஏன் நம்முடைய ஆரோக்கியத்தை கணக்கில் கொள்வதில்லை. எப்படிப் பொருட்களுக்கு நேரத்திற்கு சர்வீஸ் செய்கிறோமோ, அதைப்போல மூன்று மாதத்திற்கு ஒரு முறை உடலை செக்கப் செய்து கொண்டாலே போதுமே. உடலுக்கு ஏதாவது பிரச்னை இருந்தால் கூட முளையிலேயே கிள்ளி எறிந்து விடாலாமே. நாம் ஏன் இவ்வாறு யோசிப்பதில்லை.
இனியாவது, எல்லோரும் தன்னுடைய உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். அவ்வப்போது உடலை செக்கப் செய்து கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்!