மனித உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால்தான் இதயமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். சிலருக்கு மோசமான இரத்த ஓட்டத்தினால் உடலில் வலி, தசைப்பிடிப்பு, செரிமானப் பிரச்னைகள், கை கால்களில் குளிர்ச்சி, உணர்வின்மை போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
1. ஃபிளாவனாய்டுகள் நிறைந்த உணவுகள்: வெங்காயம் மற்றும் மாதுளை போன்ற ஃபிளாவனாய்டுகள் நிறைந்த உணவுகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன. வெங்காயம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
2. நைட்ரிக் ஆக்சைடு நிறைந்த உணவுகள்: சிவப்பு மிளகாய், பூண்டு, இலவங்கப்பட்டை, பீட்ரூட் மற்றும் பச்சை இலை காய்கறிகளில் நைட்ரிக் ஆக்சைடு சரியான அளவில் உள்ளன. இந்த உணவுகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதில் உதவுகின்றன. அதேபோல மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற பொருள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
3. வைட்டமின் சி நிறைந்த பழங்கள்: வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளி, சாத்துக்குடி போன்ற பழங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். இவை இரத்த நாளத்தை விரிவுபடுத்தவும் உடலின் வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றன. தர்பூசணியில் உள்ள லைகோபின் இரத்த சுழற்சியை மேம்படுத்துகிறது.
4. உலர் பழங்கள்: பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன. ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன.
5. தக்காளி மற்றும் பெர்ரி பழங்கள்: இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. தக்காளியில் உள்ள லைக்கோபீன் இருதய நோய்களுக்கு எதிராக உடலை பாதுகாக்கிறது. இதில் உள்ள வைட்டமின் கே இரத்தப்போக்கு மற்றும் இரத்தம் உறைவதை கட்டுப்படுத்துகிறது. அதே சமயத்தில் இரத்த சுழற்சியை மேம்படுத்துகிறது. அவுரி, நெல்லி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இரத்த ஓட்டத்தை இவை மேம்படுத்துகின்றன.
6. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் வகைகள்: ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சால்மன் மத்தி போன்ற மீன் வகைகள் மாரடைப்பு மற்றும் இரத்த ஓட்ட அபாயத்தை குறைக்கிறது.
மேலும் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். நடைப்பயிற்சி. உடல் பயிற்சி போன்ற வாழ்க்கை முறைகளை ஆரோக்கியமாக அமைத்துக் கொள்வதும் முக்கியம். புகை பிடிப்பது, மது போன்றவற்றை அறவே தவிர்ப்பது நலம்.