
சிறுவர்களுக்கு வீடியோ கேம்கள் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். கிட்டத்தட்ட அதற்கு அடிமையாகவே மாறி விடுகின்றனர். அதற்கான காரணங்கள், தீர்வுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
சுதந்திரம்: வீடியோ கேம்கள் ஒரு மெய்நிகர் உலகத்தை வழங்குகின்றன. அங்கு சிறுவர்கள் சுதந்திரமாக செயல்படவும், முடிவுகளை எடுக்கவும் முடியும். நிஜ வாழ்க்கையில் அவர்களுக்கு சுதந்திரம் கிடையாது. பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் எப்போதும் கட்டுப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். ஆனால், வீடியோ கேம்களில் அவர்களுக்குத் தேவையான சுதந்திரம் இருக்கிறது. அவர்கள் அடுத்த மூவை எப்படி எடுக்க வேண்டும் என்கிற சுதந்திரமான செயல்பாடுகளைச் செய்ய முடியும்.
சவால்கள்: வீடியோ கேம்கள் பலவிதமான சவால்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. கை, கண் ஒருங்கிணைப்பு அங்கே மிக முக்கியம். மிகக் கடினமான ஒரு நிலையைக் கடக்கும்போது ஏதோ சாதித்த உணர்வு சிறுவர்கள் மனதில் வருகிறது. அவர்கள் அந்த விளையாட்டில் வெற்றி பெறும்போது அதற்கான வெகுமதியாக ஸ்டார்கள் கிடைக்கின்றன. இது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஊக்குவிப்பையும் வழங்குகின்றன.
ஹார்மோன்கள் அதிகரித்தல்: வீடியோ கேம்களை வெற்றிகரமாக விளையாடும்போது அவர்கள் உடலில் டோபமைன் என்கிற ஹார்மோன் அதிகமாக சுரக்கின்றன. இந்த இன்பமான உணர்வை அனுபவிக்க அவர்கள் மீண்டும் மீண்டும் வீடியோ கேம்களை நாடுகிறார்கள்.
தப்பிக்கும் டெக்னிக்: சிறுவர்களுக்கு பள்ளியில் கொடுக்கும் வீட்டுப்பாடம், படிக்கச் சொல்லி பெற்றோர்கள் தரும் அழுத்தமெல்லாம் சேர்ந்து ஒருவிதமான மன அழுத்தத்தை உண்டாக்குகின்றன. அவர்கள் எதார்த்த நிலையிலிருந்து தப்பித்து ஒரு கற்பனையான உலகில் சிறிது நேரம் இருக்க வீடியோ கேம்கள் உதவுகின்றன. வசீகரிக்கும் காட்சிகள், கவர்ச்சிகரமான, ஈர்க்கக்கூடிய கதைக்களங்கள் வீரர்களை வெவ்வேறு உலகங்களுக்கு அழைத்து சென்று ஒரு புதிய மனநிலையை அவர்களுக்கு தருகிறது. அதனால் தங்கள் கவலைகளை தற்காலிகமாக மறந்து ஆர்வத்துடன் அவர்கள் அதை விளையாடுகிறார்கள்.
நண்பர்கள்: சில சிறுவர்கள் தங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்க, ரிலாக்ஸ் செய்ய தங்கள் பிரச்னைகளை மறக்க, தனிமையைப் போக்க வீடியோ கேம் ஆடுகிறார்கள். புதிய நண்பர்கள், பலதரப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகள் சமூகத் தொடர்புக்கு காரணமாக அமைகின்றன. ஆனால், அதிகப்படியாக வீடியோ கேம்களை விளையாடுவதன் விளைவுகள் மிகவும் மோசமானவை. போதைப் பழக்கம் போன்றே ஆன்லைன் வீடியோ விளையாட்டுகளும் சிறுவர்களை அடிமையாக்குகின்றன. இது பள்ளிப் பாடம், உடற்பயிற்சி, பெற்றோர் மற்றும் நேரடி சமூக தொடர்புகள் போன்ற பிற முக்கிய செயல்பாடுகளைப் புறக்கணிக்க வைக்கும்.
விளையாட்டு, உணவு, தூக்க முறைகளை சீர்குலைக்கும். அதிக நேரம் உட்கார்ந்தபடி விளையாடுவது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். சில விளையாட்டுகளில் வன்முறை நிறைந்ததாக இருக்கும். இது அவர்களது மனநிலையை பாதிக்கும். ஆன்லைன் கேமிங்கில் வீரர்களை கொடுமைப்படுத்துதல், துன்புறுத்தல் போன்றவை எதிர்மறை சமூகத் தொடர்புகளுக்கு ஆளாக்கும். எனவே, சிறுவர்கள் வீடியோ கேம் பழக்கத்திற்கு அடிமையாகாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
பெற்றோர்கள், பிள்ளைகளை இந்தப் பழக்கத்திலிருந்து எப்படி விடுவிக்கலாம்?
வீடியோ கேம்களுக்கு அடிமையான பிள்ளைகளை கையாள்வதற்கு பெற்றோர்களுக்கு மிகவும் பொறுமை அவசியம். முழுக்க முழுக்க அவர்களை வீடியோ கேம் விளையாடக் கூடாது என்று சொல்லக்கூடாது. படிப்படியாகத்தான் குறைக்க வேண்டும். வீட்டுப் பாடத்தை முடித்த பிறகு தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே விளையாடச் சொல்லலாம்.
உணவு மேசை, படுக்கையறை, படிக்கும் அறையில் கட்டாயமாக செல்போன் கூடாது என்று சொல்ல வேண்டும். அருகில் அமர்ந்து கதை சொல்லுதல், அன்றைக்கு பள்ளியில் நடந்ததை விசாரித்தல், அவர்களது மன உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு கம்பெனி தர வேண்டும். வெளியில் அழைத்துச் செல்லலாம். வேறு ஏதாவது புதிய விளையாட்டுகளை விளையாடலாம்.
அவர்களுக்கு முன்னுதாரணமாக பெற்றோரும் செல்போன் பயன்பாட்டை மிகக் குறைவாக உபயோகிக்க வேண்டும். அன்பாக, அணைத்துப் பாராட்டி, விளையாட்டை விட பெற்றோர் முக்கியம் என்று கருதுமாறு நடந்துகொள்ள வேண்டும்.