
இல்லத்தரசிகள் பலரும் முட்டைகளை குளிர்சாதனப் பெட்டியின் கதவில்தான் வைத்திருப்பார்கள். ஏனென்றால், பெரும்பாலான குளிர்சாதனப் பெட்டிகள் முட்டை வைப்பதற்கென கதவிலேயே தனி இடத்துடன் வருகின்றன. இதனால், பலரும் அதுதான் முட்டையை வைப்பதற்கான சிறந்த இடம் என்று நம்புகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், முட்டைகளை குளிர்சாதனப் பெட்டியின் கதவில் வைப்பது சரியல்ல என்கிறார்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
ஏனெனில், குளிர்சாதனப் பெட்டியின் கதவு அடிக்கடி திறக்கப்படுவதாலும் மூடப்படுவதாலும் வெப்பநிலையில் அடிக்கடி மாறுபாடு ஏற்படும் பகுதியாகும். இந்த நிலையற்ற வெப்பநிலை முட்டைகள் விரைவில் கெட்டுப்போவதற்கு வழிவகுக்கும். கதவைத் திறக்கும்போதும் மூடும்போதும் ஏற்படும் அதிர்வுகள் முட்டையின் தரத்தையும் குறைத்துவிடும். அதுமட்டுமின்றி, நிலையற்ற வெப்பநிலையில் பாக்டீரியாக்கள் எளிதில் பெருகி, முட்டை ஓட்டின் பாதுகாப்பு அடுக்கை பலவீனப்படுத்திவிடும். இதனால், முட்டைகள் மாசுபட்டு சீக்கிரம் கெட்டுப்போகும் அபாயம் உள்ளது.
முட்டைகளை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லதுதான். ஆனால், அதை சரியான இடத்தில் வைப்பது மிகவும் முக்கியம். முட்டைகளை வைப்பதற்கு சிறந்த இடம் குளிர்சாதனப் பெட்டியின் மத்தியப் பகுதி. அங்கு வெப்பநிலை பெரும்பாலும் நிலையாக இருக்கும். முட்டைகளை எப்போதும் மூடிய தட்டிலோ அல்லது டப்பாக்களிலோ போட்டு வைக்க வேண்டும்.
இவ்வாறு வைப்பதன் மூலம், முட்டைகள் குளிர்சாதனப் பெட்டியில் உள்ள மற்ற உணவுகளின் வாசனையை உறிஞ்சுவதைத் தடுக்கலாம். குளிர்சாதனப் பெட்டியின் உட்பகுதியில் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸுக்கு குறைவாகவும் நிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்வது நல்லது.
வெளியே அறை வெப்பநிலையில் வைப்பதைவிட குளிர்சாதனப் பெட்டியில் முட்டைகளை வைப்பது மிகவும் சிறந்தது. அறை வெப்பநிலையில் முட்டைகள் சில நாட்களிலேயே தரத்தை இழக்கக்கூடும். ஆனால், குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் முட்டைகள் இரண்டு மடங்கு அதிகமான நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
இருப்பினும், நிபுணர்கள் முட்டைகளை 3 முதல் 5 வாரங்களுக்குள் பயன்படுத்திவிட பரிந்துரைக்கின்றனர். அதற்கு மேல் பயன்படுத்தினால், முட்டைகள் பழையதாகிவிடும். ஆகையால், முட்டைகளை குளிர்சாதனப் பெட்டியில் சரியான இடத்தில் வைத்து, குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.