ஸ்கிப்பிங் செய்தால் உயரம் அதிகரிக்குமா?

Skipping
Skipping
Published on

சற்று குட்டையா இருப்பவர்கள், ‘ஸ்கிப்பிங் போடு. ஹைட் ஆகிருவ’ என்ற டிப்ஸை பல தடவை, பல பேரிடம் இருந்து பெற்றிருப்பார்கள். உண்மையில் ஸ்கிப்பிங் போட்டால் உயரம் அதிகரிக்குமா? என்பதற்கான விடையை இந்தப் பதிவில் காணலாம்.

ஸ்கிப்பிங் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விளையாட்டுகளுள் ஒன்று. இதை விளையாட்டு என்று சொல்வதை விட எளிய உடற்பயிற்சி என்றே சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி செய்யக்கூடிய ஒரு உடற்பயிற்சி தான் இந்த ஸ்கிப்பிங். இதற்கு ஜிம் செல்லவேண்டிய அவசியமும் இல்லை. ஆயிரக்கணக்கில் செலவு செய்து பொருள் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு 5 அடி அல்லது 10 அடி கயிறும், சிறிதளவு இடமும் இருந்தால்  ஒட்டுமொத்த  உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். உடலை ஃபிட்டாகவும்  வைத்துக் கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் நம்மால் heighta வளர முடியாது. ஏன் தெரியுமா?
Skipping

ஸ்கிப்பிங் உடலுக்கும் மனதுக்கும் சிறந்த பயிற்சியாக இருந்தாலும், அது உயரத்தை அதிகாரிக்குமா? என்று கேட்டால், ஆம். ஆனால், குறிப்பிட்ட வயது வரை மட்டுமே.  அதுவும் ஓரிரு அங்குலம் மட்டுமே அதிகரிக்க முடியும். ஏனெனில், 18 வயதிற்குப் பிறகு எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும்  எபிஃபைசல் தட்டுகள் செயல்பாடாது.  ஒருவரின் உயரத்தை தீர்மானிப்பது அவரின் மரபணு அமைப்பு, உடல் அமைப்பு  மற்றும் வளரும்போது அவர் எடுத்துக்கொள்ளும் சத்தான உணவுகள், சில சமயங்களில் அவரது வாழ்வியல் முறை ஆகும். அதோடு, உயரமானது மரபியல் சார்ந்தது. எனவே, ஸ்கிப்பிங் போன்ற பயிற்சிகள் ஒருவரின் உயரத்தைப்  பெருமளவில் பாதிக்காது.

ஸ்கிப்பிங் பற்றி இன்னொரு தவறான கருத்தும் நிலவி வருகிறது. பெண்கள் ஸ்கிப்பிங் அதிகமாக செய்யும்போது அவர்களின் கர்ப்பப்பை கிழிறங்கும் என்பதுதான் அது. ஆனால், கர்ப்பப்பையில் எந்தவொரு பாதிப்பும் இல்லாதவர்கள் தாராளமாக ஸ்கிப்பிங் செய்யலாம். இதனால் கர்ப்பப்பை கீழிறங்காது என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். 

அதேசமயம், தினமும் ஸ்கிப்பிங் செய்வதால் இதய ஆரோக்கியம் மேம்படும். இது   ஒரு சிறந்த கார்டியோ ஒர்க்அவுட் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் செய்வதால் 1000 கலோரிகளுக்கு மேல் எரிக்கப்படும். எனவே, விரைவாக உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த உடற்பயிச்சியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், 10 நிமிடம் ஸ்கிப்பிங் செய்வது 2 கிலோமீட்டர் ஓடுவதற்குச் சமமானது என்கின்றனர் உடற்பயிற்சி வல்லுநர்கள். ஸ்கிப்பிங் பயிற்சி உடல் உறுப்புகளை ஒன்றிணைத்து அவற்றின் இயக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. தினமும் ஸ்கிப்பிங் செய்வதன் வழியாக  தசைகள் மற்றும் எலும்புகளை வலுபெறச் செய்யாலாம். மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற மனநலப் பிரச்சனைகளை குறைக்கலாம்.

இனி, நமக்கு நெருங்கியவர்களிடம் "உயரத்தை அதிகரிப்பதற்கு ஸ்கிப்பிங் செய்“ என்று சொல்வதை தவிர்த்து, "உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கு ஸ்கிப்பிங் செய்” என்று சொல்லலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com