

வெறிநாய் கடியினால் உடலில் புகும் வைரஸ் மிக மிக ஆபத்தானது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட விலங்கின் உமிழ்நீரின் மூலம்தான் இது மற்ற உயிரினங்களுக்குப் பரவுகிறது. இந்த நோய் கண்ட மிருகங்கள் கடித்தாலோ, நக்கினாலோ அல்லது நகத்தால் பிறாண்டினாலோகூட இந்த நோய் நம்மைப் பாதித்துவிடும்.
இதில் நாம் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோய் பாதிப்பு நாய்களுக்கு மட்டுமல்ல; பூனை, அணில், வௌவால், நரி, ராக்கூன் போன்றவைகளுக்கும் ஏற்படுகிறது. தெரு நாய்களையும் பூனைகளையும் தொட்டுப் பழக நம் குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. செல்லமாக வளர்க்கப்படும் விலங்குகளையும் மிருக வைத்தியரிடம் அழைத்துச் சென்று, அப்போதைக்கப்போது தடுப்பூசி போட வேண்டும்.
இந்த வைரஸ் நமது நரம்பு மண்டலத்தையும் மூளையையும் பாதிக்கும் நோயாகும். கடிபட்டவுடன் காலதாமதமின்றி சிகிச்சை பெற்றால் மட்டும்தான் நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். அறிகுறிகள் வரும்வரை காத்திருந்தால், அது முக்கால்வாசி கேஸ்களில் இறப்பில் முடிந்துவிடும். சிலர் 'கடிக்கவில்லை, லேசாகப் பிராண்டத்தான் செய்தது' என்று நினைத்து சிகிச்சையைத் தவிர்க்கப் பார்ப்பார்கள். அப்படிச் செய்வது மிகவும் ஆபத்தானது.
1. முதல் அறிகுறிகள்:
கடிபட்ட ஓரிரு நாட்களில் உடல் வலுவிழந்து போகும்.
காய்ச்சலும், தலைவலியும் ஏற்படும்.
கடிபட்ட இடத்தில் அரிப்போ அல்லது குறுகுறுப்போ தோன்றும்.
2. அடுத்த கட்ட அறிகுறிகள்:
மேலும் சில நாட்களில் குழப்பம், மனக்கிளர்ச்சி (agitation) மற்றும் ஹாலுசினேஷன் போன்றவை ஏற்படும்.
வாயிலிருந்து எச்சில் வடிய ஆரம்பிக்கும்.
தெரியாத, அறிமுகமில்லாத விலங்குகளைத் தொடக் கூடாது. முக்கியமாகக் கெருவில் திரியும் நாய்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.
வளர்க்கும் நாய்களுக்கு, ஏன் பூனைகளுக்குக்கூட, தடுப்பூசி போடப்பட வேண்டும்.
நாயோ, பூனையோ கடித்தால், உடனே கடிபட்ட இடத்தை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
கடிபட்ட விஷயத்தை வீட்டில் பெரியவர்களிடம் உடனே குழந்தைகள் தெரிவிக்க வேண்டும்.
அடுத்து மருத்துவரிடம் சென்று, கடிக்குண்டான ஆண்டி டோட் ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். கடித்தது வெறிநாயா, சொறிநாயா என்ற ஆராய்ச்சியைப் பிறகு வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி அவசர கதியில் செயல்பட்டால் தான் உயிருக்கு ஆபத்து வராமல் தவிர்க்கலாம்.
அந்தக் காலத்தில் தெரு நாய்களே இல்லாமல் இருந்தது. இப்போது, தெருவுக்குத் தெரு டஜன் கணக்கில் தெரு நாய்கள் போவோர்களையும் வருவோர்களையும் துரத்தி கடித்துக் கொண்டிருக்கின்றன. இதைத் தடுக்க உச்ச நீதிமன்றத்தால் கூட நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வைச் சொல்ல முடியவில்லை. நாம் தான் மிகவும் எச்சரிக்கையுடன் நம் குழந்தைகளையும், பெண்களையும், வயதானவர்களையும் பாதுகாக்க வேண்டும்.