

சிலர் எதையும் வித்தியாசமாக செய்ய ஆசைப்படுவார்கள். அதிலுள்ள விபரீதத்தை அறியாமல். எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆசை ஒரு ஆக்கபூர்வமான ஊக்கம்தான். இது தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும். இந்த ஆசையை வெற்றிகரமாக பயன்படுத்துவதற்கு இலக்குகளை நிர்ணயிப்பது, புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது, தோல்விகளை ஏற்றுக்கொள்வது போன்றவை அவசியம். ஆனால், சிலர் எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் விபரீதத்தை வரவழைத்துக் கொள்வார்கள்.
1. வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதில் வரையறை: வித்தியாசமாக செய்ய வேண்டும் என்பதில் வரையறை வைத்துக் கொள்வது நல்லது. நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தி, நம்மால் கட்டுப்படுத்தக்கூடியவற்றில் மட்டும் கவனம் செலுத்துவது முக்கியம்.
எல்லாவற்றையும் எப்பொழுதும் வித்தியாசமாக மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைப்பது சில சிக்கல்களுக்கு வழிவகுக்கும். சில இடங்களில் வித்தியாசமாக சிந்திப்பதோ, செயல்படுவதோ ஆபத்தில் முடியலாம். சில சமயங்களில் வித்தியாசம் என்ற பெயரில் செய்யப்படும் விஷயங்கள் மற்றவர்களுக்குப் புரியாமல் போகலாம் அல்லது அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது கடினமாக இருக்கலாம்.
2. விபரீதத்தை விலை கொடுத்து வாங்காதீர்கள்: வரையறை வைத்துக்கொள்வது என்பது புதுமைகளை தடுப்பது அல்ல. மாறாக, எங்கே, எப்பொழுது புதுமையை பயன்படுத்த வேண்டும், வித்தியாசமாக ஒரு விஷயத்தை கையாள வேண்டும் என்பதை தீர்மானிப்பது, எந்த சூழலில் மாற்றம் தேவை, எங்கே நிலையான முறை சிறந்தது என்று சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
மொத்தத்தில் எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஒரு சக்தி வாய்ந்த கருவியாக இருந்தாலும், அந்த சக்தியை எங்கே பயன்படுத்த வேண்டும் என்று அறிவதுதான் உண்மையான புத்திசாலித்தனம்.
3. எதிலும் முழுமையை தேடாதீர்கள்: எதிலும் முழுமையை தேடினால் அது மன அழுத்தத்தையும், ஏமாற்றத்தையும் தரக்கூடும். ஏனெனில், எதிலும் முழுமை என்பது சாத்தியமற்றது. மாறாக சிறந்து விளங்க முயற்சிப்பது, செய்யும் வேலைகளில் கவனம் செலுத்துவது மற்றும் கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதுதான் சிறந்தது.
முழுமையைத் தேடும் எண்ணம் சில நேரங்களில் தோல்வி பயத்தை ஏற்படுத்தி, ஆரம்பிப்பதை தாமதப்படுத்தலாம். முழுமையைத் தேடினால் வாழ்வில் திருப்தி அடைய மாட்டோம். Perfection is the enemy of good என்று ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு. எனவே, எதிலும் முழுமையை தேடாதீர்கள்.
4. ஆர்வக்கோளாறு அதிகம் வேண்டாமே: சில நபர்களுக்கு புதுமையாகவும் வேறுபட்ட முறையிலும் எதையாவது செய்து அசத்த வேண்டும் என்ற உள்ளார்ந்த ஆசை இருக்கலாம். இது ஒரு நேர்மறையான பண்பாக அமையலாம். ஆனால், அதிகப்படியான ஆர்வக்கோளாறு பிரச்னைகளை உண்டுபண்ணும். எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று அதிகப்படியான ஆர்வம் காட்டி குளறுபடி செய்வது, மற்றவர்களை தர்மசங்கடப்படுத்துவது, சிலரை தேவையற்ற சிக்கலில் மாட்டி விடுவது போன்றவற்றை ஏற்படுத்தும்.
5. தெரியாத விஷயத்தை தெரிந்தது போல் காட்டிக்கொள்வது: எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் சிலர் தெரியாத விஷயத்தை தெரிந்தது போல் காட்டிக் கொள்வார்கள். இது பெரும்பாலும் கர்வம் அல்லது பயத்தின் காரணமாக ஏற்படலாம். கர்வம் தவறுகளை ஒப்புக்கொள்ள விடாமல் தடுக்கும். மேலும், ஒருவரின் ஈகோவை திருப்திபடுத்த தெரியாததை மறைக்க வழி வகுக்கும்.
மேலும், இது தெரியாததை கற்றுக்கொள்வதை தவிர்ப்பதற்கும் காரணமாக அமைந்துவிடும். இதனால் நான்கு பேர் எதிரில் அவசரப்பட்டு அசிங்கப்பட வேண்டி இருக்கும். எனவே, இந்த விபரீத விளையாட்டை நிறுத்தி, தெரியாத விஷயத்தை தெரியாது என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.
எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று விஷப்பரீட்சையில் இறங்கி அவதிப்பட வேண்டாமே.