
வீட்டிற்கு யாராவது விருந்தினர் வந்தால் உடனே, ‘தண்ணீர் கொடு’ என்றுதான் பெரியவர்கள் கூறுவர். தண்ணீர் கொடுத்து விட்டுதான் மற்றபடி விசாரிப்பையே ஆரம்பிப்போம். அனைத்து உயிர்களுக்கும் நீர்தான் ஆதாரம் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் சிலர், ‘எனக்கு என்னவோ செய்கிறது’ என்று கூறுவார்களே தவிர, இன்னது தேவை என்று கூற முடியாது தவிப்பார்கள். அதற்குக் காரணம் என்ன? அதைத் தவிர்க்கும் வழிகள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
வீட்டிற்கு வந்திருந்த ஒருவர் காலையில் எழுந்தவுடன், ‘எனக்கு என்னவோ செய்கிறது’ என்று கூறினார். ‘தண்ணீர் குடித்தீர்களா?’ என்று அவசர அவசரமாக தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தோம். அதன் பிறகுதான் அவருக்கு தலைசுற்றல், களைப்பு, தலைவலி நீங்கி ஃபிரஷ்ஷாக இருக்கிறது என்று கூறினார். ஆக, காலையில் எழுந்ததும் இரண்டொரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டால் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம். உடலில் தண்ணீர் வற்றும்போது தீராத தலைவலி வரும். உடலுக்குத் தேவையான தண்ணீர் சேர்ந்த பிறகுதான் இதுபோன்ற உபாதைகள் நீங்கும். அதிக வெப்பம் மற்றும் வயிற்றுப்போக்கு இருக்கும் சமயங்களில்தான் நாக்கு வறண்டு போவது, உடலில் தண்ணீர் வற்றுவது, உதடுகள் வெடிப்பது, சிறுநீர் அதிக மஞ்சளாக வெளியேறுவது போன்றவை நடக்கிறது. ஆதலால், அவ்வப்பொழுது நீர் பருகுவதை நிரந்தரமாக பின்பற்ற வேண்டும்.
சிலருக்கு பச்சை தண்ணீர் ருசி பிடிக்காமல் பகல் முழுவதும் மோர் குடிக்கும் பழக்கம் உண்டு. அப்படிப்பட்டவர்கள் தயிரில் நிறைய தண்ணீர் சேர்த்து நீர்மோராக்கி சிறிது சிறிதாகப் பருகலாம். சில நாள் அதில் வெள்ளரிக்காய், இஞ்சி, சுக்கு, மாங்காய், மல்லித்தழை, வெந்தயப் பொடி, புதினா, வெல்லத் துருவல் என்று விதவிதமாக ஒவ்வொரு நாளும் மோரில் அடித்து வைத்துக்கொண்டு குடிக்கலாம். இதனால் நன்றாக தாகம் அடங்கும். உடலுக்கு சத்தும் கிடைக்கும்.
சமையலிலும் சுரக்காய், பரங்கிக்காய், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் என்று நீர் காய்களில் சமைத்து சாப்பிட்டால் உடல் நீரேற்றத்துடன் இருக்கும், சத்தும் சேரும். சீசனில் கிடைக்கும் பழங்களில் அதிக நீர் சத்துள்ள பழங்களை எடுத்துக் கொண்டால் நாக்கு வறட்சி போகும். மேலும், சீரகம் சேர்த்து ஆற வைத்த தண்ணீரைக் குடிக்கலாம். ருசியுடன் செரிமானத்துக்கும் நல்லது. இன்னும் சிலருக்கு வெந்நீர் குடிப்பதுதான் பிடிக்கும்.
தண்ணீர் அடிக்கடி பருகுவது நல்லது. ஆனால், வெந்நீரை சாப்பிட்ட பிறகு பருகுவதுதான் சரியானது. அந்த சமயத்தில் பருகும்போது கூடுதல் நன்மைகளை பெற முடியும். குறிப்பாக, சாப்பிட்ட பிறகு வெந்நீர் பருகினால் உடலில் விரைவாக செரிமானம் ஆகும். நொதித்தல் செயல்முறை விரைவாக நடைபெற்று செரிமானத்தை எளிமைப்படுத்திவிடும். அதன் மூலம் ஊட்டச்சத்துக்களை உடலில் மற்ற பகுதிகளுக்கு எளிதாக கடத்த முடியும். மேலும் வெந்நீர் பருகுவது மலச்சிக்கலை தடுக்க உதவும். மிகவும் சூடான நீர் உடலில் உள்ள நச்சுகளுக்கு எதிராக செயல்படும். சாப்பிட்ட பிறகு சூடான நீரை பருகினால் செரிமானத்தின்போது இழந்த திரவங்களை ஈடு செய்ய உதவும். உடலில் நீர்ச்சத்தை தக்க வைப்பதற்கும் துணை புரியும். உடல் பருமன் பிரச்னை கொண்டவர்கள் உணவு உட்கொண்ட பிறகு கட்டாயம் வெந்நீர் பருகினால் நல்லது.
பெண்கள் மாதவிடாய் சமயத்தில் வெந்நீர் பருகுவது நல்லது. அது வலியை குறைக்க உதவும். சாப்பிட்ட பிறகு வெந்நீர் பருகுவது கருப்பையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். அதன் மூலம் கடினமான தசைகள் இலகுவாகும். ரத்த நுண்குழாய்களை விரிவடையச் செய்வதன் மூலம் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும். மேலும், அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பவர்கள் மிகவும் சூடான நீர் குடிப்பதைத் தவிர்த்து, ஆற வைத்து குடிப்பதே நல்லது. அப்பொழுதுதான் புண்கள் மற்றும் காயங்கள் சீக்கிரம் ஆறும்.
சிலருக்கு குளிர்ந்த நீர் குடித்தால் எடை போடும் என்ற எண்ணம் இருக்கிறது. குளிர்ந்த தண்ணீரோ, வெந்நீரோ எதுவானாலும் அதை நம் உடல் தன்னுடைய வெப்ப நிலைக்கு மாற்றித்தான் உபயோகிக்கும். வெந்நீர் குடித்தால் கொழுப்பு சேராது என்று சொல்வதன் பின்னணியும் இதுதான். வெந்நீரை உடல் தனது வெப்ப நிலைக்கு மாற்றும் வளர்சிதை மாற்ற இயக்கம் அதிகரிப்பதால், உடலில் கொழுப்பு தங்குவதில்லை.
ஆகவே, யார் எந்தத் தண்ணீரைக் குடித்தாலும் தட்பவெப்ப சூழ்நிலையை கணக்கில் வைத்து, தவறாமல் தண்ணீர் குடித்து நீரேற்றத்துடன் இருப்பதுதான் சோர்வு, களைப்பை போக்கும் வழி. ஆகவே, காலையில் எழுந்தவுடன் வீட்டில் பெரியவர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கக் கொடுத்து விடுங்கள். அது மிகவும் அவசியம்.