
உறங்கும்போது கனவுகள் காணாத மனிதர்கள் இல்லை எனலாம். ஆழ்மனதில் அழுந்திக் கிடக்கும் நிராசைகளே கனவுகளாக வெளிப்படுகின்றன என்ற கருத்து உண்டு. ஆனால், நாம் எதிர்பாராதவை கனவுகளாக வரும்போது எதனால் இப்படி வருகிறது எனும் கேள்விகளும் அதற்கான விடைகளை அறியும் ஆவலும் அனைவருக்கும் பொதுவானது.
சொப்பனம் என்றழைக்கப்படும் கனவுகளில் வரும் நிகழ்வுக்கேற்ப அதன் பலன்களைச் சொல்லும், ‘சொப்பன சாஸ்திரம்’ என்பது ஒரு வகையான ஜோதிட சாஸ்திரம் ஆகும். இதில் நாம் காணும் கனவுகள் மூலம் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய தகவல்களை அறிந்து எச்சரிக்கை பெறலாம் என்று நம்பப்படுகிறது.
சொப்பன சாஸ்திரத்தில் ஒவ்வொரு கனவுக்கும் ஒரு குறிப்பிட்ட பலன் உண்டு. உதாரணமாக, கனவில் பறவைகளைப் பார்த்தால் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் குறிக்கும் எனவும், கனவில் பாம்பு வந்தால், அது துரதிர்ஷ்டத்தைக் குறிக்கும் என்றும் நம்பப்படுகிறது. சரி, கனவில் தண்ணீரைக் கண்டால் என்ன மாதிரியான பலன்கள் உண்டாகும் என்பதை இப்பதிவில் காண்போம்.
பொதுவாக, சொப்பன சாஸ்திரத்தின்படி தண்ணீரைக் கனவு காண்பது அதன் வடிவம் மற்றும் சூழலைப் பொறுத்து பல்வேறு அர்த்தங்களைக் கொண்டிருக்கலாம் எனப்படுகிறது. தெளிவான மற்றும் அமைதியான நீர் கனவு வாழ்க்கையில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செல்வச் செழிப்பைக் குறிக்கிறது. பிரச்னைகள் விரைவில் குறைந்து விடும். மேலும், நீங்கள் மதிப்பு, மரியாதையுடன் மன அமைதியைப் பெறுவீர்கள் என்பதைக் குறிக்கிறது.
பாயும் நீர் கனவில் வந்தால் நன்மைதான். ஆம், வாழ்க்கையில் மாற்றம் மற்றும் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. நீங்கள் ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தாலும் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளும் துணிவு வரும் என்றும் ஆனால், தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் குறித்து எச்சரிக்கை செய்கிறது.
தண்ணீரில் மூழ்குவது போன்ற கனவு வந்தால் பயம், பாதுகாப்பின்மை மற்றும் கட்டுப்பாட்டை இழப்பதைக் குறிக்கும் ஒரு துன்ப அடையாளம். இது உங்கள் வார்த்தைகள் மற்றும் உணர்வுகளில் கவனம் செலுத்தவும், கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்க நல்லவர்கள் உதவி தேடவும் அறிவுறுத்துகிறது.
அழுக்கு அல்லது புயல் நீர் கனவுகள், உணர்ச்சி கொந்தளிப்பு, மன அழுத்தம் மற்றும் வரவிருக்கும் சிரமங்களைக் குறிக்கிறது. இந்தக் கனவு விழிப்புடன் இருக்கவும், வரவிருக்கும் சவால்களுக்குத் தயாராகவும் ஒரு எச்சரிக்கையை உணர்த்துகிறது.
நீரில் நீந்துதல் போன்ற கனவு வந்தால் நீங்கள் வாழ்க்கையின் சவால்களை நம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்கொள்வதைக் குறிக்கும் ஒரு நல்ல அறிகுறி. இது செல்வத்தையும், செழிப்பையும், மகிழ்ச்சியையும் குறிக்கலாம் எனப்படுகிறது.
பனிக்கட்டி போல் உறைந்த நீர் கனவு, உணர்வுகளின் மீதான அடக்குமுறையைக் குறிக்கலாம். அதாவது உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்கள் மற்றும் அவசியத்தைக் குறிக்கலாம்.
மழை நீர் கனவு சுத்திகரிப்பு மற்றும் புதுப்பித்தலுடன் தொடர்புடையது. இதுவும் நன்மையே. காரணம், இதனால் வேதனையான உணர்வு அல்லது கடந்த கால வருத்தங்கள் நீங்கும் வாய்ப்பு உள்ளது.
ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சியை கனவில் கண்டால் உணர்வுகள் கூடும், படைப்பு ஆற்றலின் சக்தி வாய்ந்த வெளியீட்டைக் குறிக்கிறது. மேலும், உத்வேகம் மற்றும் தனிப்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது.
நீர் சம்பந்தப்பட்ட கனவுகள் வந்தால் பதற்றம் கொள்ளாமல் கனவின் சூழல் மற்றும் விவரங்களைக் கவனியுங்கள். கனவை உங்கள் தற்போதைய உணர்வு நிலை மற்றும் வாழ்க்கை அனுபவங்களுடன் தொடர்புப்படுத்துங்கள். கனவுகள் வெறும் அறிகுறிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவற்றின் அர்த்தங்கள் மாறுபடலாம். உங்கள் கனவுகளில் உள்ள நீரின் குறியீட்டைப் புரிந்துகொள்வதால் நன்மை எனில், ஆராயுங்கள். இல்லையெனில் கடந்து செல்லுங்கள்.
ஏனெனில், சொப்பன சாஸ்திரம் எனும் நூல் கனவுகளின் பலன்களைப் பற்றி மட்டுமல்லாமல், கனவுகள் ஏன் வருகின்றன என்பதற்கான காரணங்களையும் விளக்குகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு நபர் மன அழுத்தத்தில் இருந்தால், மன அழுத்தத்தின் வெளிப்பாடாக அவர் கனவுகளில் பயங்கரமான காட்சிகளைக் காணலாம் என்கிறது.
கனவுகள் பற்றிய இந்த விளக்கங்கள் பெரும்பாலும் விளக்கமாகவும், நம்பிக்கையாகவும் இருக்கின்றன. இருப்பினும், சொப்பன சாஸ்திரத்தில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்ற கருத்து உண்டு. இதுதான் அனைத்து கனவுகளுக்கும் பொருந்தும் என்பதால் கனவுகளுக்கான அர்த்தம் கண்டு கலங்காமல் வாழ்க்கையை எதிர்கொள்வது புத்திசாலித்தனம்.