
பொதுவாகவே, பாம்பு என்றாலே அனைவருக்கும் பயம் எழுவது இயல்பு. அதன் தோற்றம், விஷத்தன்மை, சீறும் குணம் ஆகியவை நமக்கு அச்சுறுத்தலைத் தருகிறது. வெளியே சுற்றித் திரியும் இவை வீட்டுக்குள் நுழைந்தால்? அதற்காக உடனே பயம் கொள்ள வேண்டாம். அவற்றிடமிருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
வீடுகளில் நுழையும் பாம்பு, பழுப்பு நிற வீட்டுப் பாம்பு (லாம்ப்ரோபிஸ் கேபென்சிஸ், லாம்ப்ரோபிஸ் ஃபுலிகினோசஸ் என்றும் அழைக்கப்படுகிறது). மூடி வைக்கப்படாத உணவுகள் மற்றும் பெரிய சிலந்திகள், பல்லிகள் போன்றவை திறந்தவெளியில் கிடப்பதே பாம்புகள் வீடுகளுக்குள் நுழைவதற்கு மிகப்பெரிய காரணம் எனப்படுகிறது.
வீட்டுப் பாம்புகள் பொதுவாக வளர்ந்தவுடன் சராசரியாக 3 முதல் 4 அடி உயரத்துடன் சிறியவையாகவும் மற்ற பாம்புகளுடன் ஒப்பிடும்போது விஷமற்று, கடித்தால் மனிதர்களுக்கு பெரியளவில் பாதிப்பில்லாதவை என்றும் சொல்லப்படுகிறது.
பொதுவான சில வீட்டுப் பாம்பு வகைகள் உண்டு. அவற்றில் கார்ட்டர் பாம்புகள் பெரும்பாலும் வீடுகளில், குறிப்பாக அடித்தளங்களில் அல்லது நீர் ஆதாரங்களுக்கு அருகில் காணப்படும். இவை, ‘எலி பாம்புகள்’ எனப்படுபவை. பிற இரைகளைத் தேடி இவை வீடுகளுக்குள் நுழையலாம். கோஃபர் பாம்புகளும் வீடுகளிலும், குறிப்பாக கிராமப்புறங்களிலும் காணப்படுகின்றன. இதிலும் சில வீட்டுப் பாம்புகள் பாதிப்பில்லாதவை. மற்றவை விஷமுள்ளவை என்பதிலும் வெவ்வேறு நிறங்கள், வடிவங்கள் மற்றும் அளவுகளைக் கொண்டிருக்கலாம் என்பதிலும் கவனம் தேவை.
வீட்டில் பாம்பைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் வீட்டில் ஒரு பாம்பைக் கண்டால் உடனே பதற்றமின்றி முதலில் பாதுகாப்பான தூரத்திலிருந்து அது பாம்புதானா என்பதை அடையாளம் காண முயற்சிக்கவும். அது சாதாரண பாம்பா? அல்லது விஷப்பாம்பா? எனத் தெரியாவிட்டால் அல்லது அதைப் பார்த்ததும் அச்சமாக உணர்ந்தால், ஒரு தொழில்முறை பாம்பு பிடிக்கும் நிபுணரை தொடர்பு கொள்ளவும்.
குறிப்பாக, பாம்புகள் உங்கள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்க சுவர்கள், தரைகளில் ஏதேனும் துளைகள் இருந்தாலோ அல்லது இடைவெளிகளையோ அடைக்க வேண்டும். வீட்டில் இருக்கும் அசுத்தங்கள் உடனே அகற்றப்பட வேண்டும். இரவில் உங்கள் காலணிகள் மற்றும் தலைக்கவசங்களை வெளியில் வைப்பதையும் அவசியம் தவிர்க்க வேண்டும். அதோடு, அவற்றை மீண்டும் உபயோகப்படுத்தும்போது எச்சரிக்கை தேவை.
இத்துடன் பாம்புகள் வீட்டுக்குள் வருவதைத் தடுக்க சில வழிமுறைகள் உள்ளன. அவற்றில் தனித்தன்மை மணம் கொண்ட எண்ணெய்கள் குறிப்பிடத்தக்கவை. இலவங்கப்பட்டை எண்ணெய், கிராம்பு எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் போன்றவற்றின் கடுமையான வாசனையை பாம்புகள் விரும்புவதில்லை என்பதால் பாம்புகள் வீட்டுக்குள் வருவதைத் தடுக்க இவை நிச்சயம் உதவும்.
அந்துப்பூச்சியை விரட்டும் நாப்தலீன் மணம் பாம்புகளையும் விரட்டும். மேலும், வினிகரின் வாசனையையும் பாம்புகள் விரும்புவதில்லை. எனவே, அதை வீட்டின் நுழைவாயில்களைச் சுற்றி தெளிப்பது உதவக்கூடும். தாவரங்களில் லாவெண்டர், லெமன் கிராஸ் மற்றும் சாமந்தி போன்ற சில தாவரங்களும் பாம்புகளை விரட்டும் என்று கூறப்படுகிறது.
பாம்புகள் சிறிய நிலைப்படி திறப்புகள், ஜன்னல்கள் வழியாகவும் வீடுகளுக்குள் நுழையலாம். எனவே, அவற்றை வலை கொண்டு மூடுவதுடன், வீட்டை சுத்தமாகவும் வைத்திருப்பதால் பாம்புகளை மட்டுமல்ல, நமது உடல் ஆரோக்கியம் கெடுக்கும் கரப்பான்பூச்சி, பல்லி போன்ற பிற உயிரினங்களையும் தடுக்கலாம்.