கோடைக் காலத்தில் தூசி பிரச்னைகளும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாக வரக்கூடும்! தூசி என்பது 20 தாவோ (500 மைக்ரோ மீட்டர்) அளவுக்கும் குறைந்த விட்டம் கொண்ட நுண்ணியத் திண்மத் துகள்களைக் குறிக்கும். வளி மண்டலத்தில் இருக்கும் தூசி துகள்கள் காற்றினால் மண் எழுப்பி விடப்படுதல், எரிமலை வெடிப்பு, பல்வேறு மாசு வெளியேற்றம் என்பவற்றால் உருவாகின்றன.
வீடு, அலுவலகம் மற்றும் மனிதர்கள் வாழும் பிற சூழல்களில் வெளிப்புற மண்ணில் இருந்து வரும் கனிமத் துகள்கள், தோல் கலங்கள், தாவரங்களின் மகரந்தம், விலங்குகளின் உரோமம், துணி இழைகள், தாள் இழைகள் மற்றும் ஏராளமான பிற பொருட்களில் காணப்படுகின்றன.
வீட்டு தூசிகளின் அளவும், சேர்மானங்களும் பல வகைகளில் வேறுபடுகின்றன. பருவக்காலம், வெளிப்புற வளி உள்ளிட்ட சூழல் காரணிகள், வீட்டின் வயது, கட்டடப் பொருட்களும் அவற்றின் நிலையும், தளவாடங்கள் மற்றும் தளக் கம்பளங்களின் அளவு மற்றும் அவற்றின் நிலை போன்றவை வீட்டு தூசியின் அளவையும், தன்மையையும் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகளாகும்.
இவையனைத்தும் வீட்டின் காற்றோட்டம், வளிப் பதனம் அல்லது சூடாக்கற் தொகுதிகள், சுத்தப்படுத்தும் பழக்கங்கள், வீட்டில் இருப்பவர்களின் நடவடிக்கைகள் அல்லது வீட்டு அறைகளின் பயன்பாடு என்பவற்றிலும் தங்கியுள்ளன.
வீட்டு தூசியில் கரிமப் பொருட்களும், கனிமப் பொருட்களும் உள்ளன. எனினும், தூசியில் இவற்றின் விகிதங்கள் பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகின்றன. சில இடங்களில் ஏறத்தாழ முழுமையாகவே தூசி கனிமப் பொருட்களான, மணல், களி, இருவாட்டி போன்றவற்றால் ஆனதாக இருக்க, பழையதாகிப்போன தள விரிப்புக்களுடன் கூடப் பல விலங்குகளையும் வளர்க்கும் வீடுகளில் தூசி பெருமளவுக்குக் கரிமப் பொருட்களைக் கொண்டிருக்கும். 318 வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி வீட்டு தூசியில் கரிமப் பொருட்களின் அளவு 5 சதவிகிதம் முதல் 95 சதவிகிதம் வரை இருந்தது கண்டிறியப்பட்டது.
ஒரு மனிதன் சருமத்தின் மேற்படலம் முழுவதும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் உரிந்து போவதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு ஒரு நிமிடத்துக்கு சுமார் 7 மில்லியன் சருமத் துகள்கள் என்னும் விகிதத்தில் வளியில் அது கலப்பதாகக் கூறப்படுகிறது. இது நிமிடத்துக்கு 20 மில்லி கிராம் அளவுக்குச் சமமானது.
பொதுவாக, கோடைக் காலங்களில் தூசியின் அளவு அதிகமாக இருக்கும். வீடுகளில் இருக்கும் பொருட்கள் அனைத்திலும் தூசி படிந்து பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. தூசியால் சருமத்தில் அரிப்பு, சிவத்தல், புண், வெடிப்பு, அரிக்கும் அழற்சி, விரிசல், செதில் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
தூசு ஒவ்வாமையால் மூக்கு ஒழுகுதல், தும்மல், மூக்கடைப்பு, இருமல், மூச்சுத்திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. தூசு ஒவ்வாமையால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. சில வேளைகளில் நுரையீரல் புற்றுநோய்களைக் கூட இவை ஏற்படுத்தி விடுகிறது.
இந்த தூசி பிரச்னைகளிலிருந்து காத்துக்கொள்ள, வீட்டினைச் சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது. தரை விரிப்பு, ஜன்னல், திரைச்சீலைகள், கதவு, கிரில், டிவி, மின் விசிறி மற்றும் மடிக்கணினி போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் வளர்க்கும் நாய், பூனை போன்ற வளர்ப்பு விலங்குகளைக் குளிப்பாட்டிச் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும்.