
குடும்பம் ஒற்றுமையாக இருக்கவும், குழந்தைகள் சமரசமாக வளரவும் முதியோர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும். இதனால் அவர்களின் தனிமை எப்படித் தவிர்க்கப்படுகிறது. வீடு எப்படி நிம்மதி அடைகிறது என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
எனது தோழி ஒருவர் எப்பொழுதும் டிவி பார்த்துக்கொண்டே இருப்பார். தொடர்ந்து சீரியல் பார்ப்பதற்காக வீட்டு வேலைகளை எல்லாம் அவசர அவசரமாக முடித்து விடுவார். அப்படி இருந்தவர் சில மாதங்களாக டிவி பார்ப்பதே இல்லை. ஏன் என்று கேட்டதற்கு, ‘எனது பேரப்பிள்ளைகள் நான் டிவி பார்க்கும்போது என்னுடன் அமர்ந்து அவர்களும் பார்க்கிறார்கள். தேவையில்லாததையும் அப்போது பார்க்க நேரிடுகிறது. ஆதலால், டிவி பார்ப்பதை நான் நிறுத்தியவுடன் அவர்களும் டிவி பார்ப்பதை விட்டு விட்டு என்னுடன் பார்க், தோட்டத்தில் வேலை செய்வது என்று எனக்கு உதவுகிறார்கள். அவர்களுக்கும் பொது அறிவு வளர்கிறது. அதற்கு மூத்தோர்களாகிய நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இப்பொழுதுதான் குழந்தைகள் மூலம் கற்றுக் கொண்டேன்’ என்று கூறினார். ஆதலால் குழந்தை வளர்ச்சியின்போது மூத்தோராகிய நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
பிள்ளைகளின் அறையில் உள்நாட்டு படம், உலகப் படம் (மேப்) போன்றவற்றை தொங்க விட்டு வைக்கலாம். வெவ்வேறு இன மக்கள் தங்கள் பாரம்பரிய உடைகளை அணிந்திருக்கும் படங்களும் பார்ப்பதற்கு அழகாக இருப்பவற்றை சுவர்களில் மாட்டி வைக்கலாம். இதனால் அவர்கள் வித்தியாசங்களை ஏற்று வளர்வார்கள். வெளியூர் பயணம் செல்லும்பொழுது எளிதாக அவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பொன்மொழி வாழ்வின் அடிப்படை அஸ்திவாரம் ஆகிவிடும்.
சில தாத்தாக்கள் தங்களது பேரக் குழந்தைகளை நூல் நிலையங்களுக்குக் கூட்டிச் செல்வதை குறிக்கோளாக வைத்திருப்பார்கள். அங்கு சென்றதும் பெரிய பெரிய எழுத்துக்களாக உள்ள புத்தகங்களை எடுத்துத் தருவார்கள். இது ஆரம்பத்தில்தான். அதற்கு அடுத்ததாக அவர்களையே பிடித்த படங்களை காண்பித்து எடுத்துக் கொள்ளும்படி சொல்லுவார். அவர்களின் உணர்வுக்கு அதிக மதிப்பு கொடுப்பர். இதனால் குழந்தைகளின் வாசிக்கும் பழக்கம் அதிகமாகிறது.
அவர்களுக்கு ஏற்ற படங்கள், நாடகங்கள், விளையாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்லலாம். பிள்ளைகளின் ஆர்வங்களை சுலபமாக அறிந்துகொள்ள இந்த நடைமுறை வழி வகுத்துக் கொடுக்கும். சிறுவர்களுக்கான புத்தகங்களை வீட்டுக்கு வரவழைத்துக் கொடுக்கலாம். பிள்ளைகள் சொல்லும் கதைகளை செவிமடுத்து குறுக்கீடு இல்லாமல் பொறுமையாகக் கேட்டால் பிள்ளைகளுக்கும் கேட்டல் திறன் அதிகரிக்கும்.
பிள்ளைகளுக்கு ஏற்ற உணவு நேரத்தை, விளையாட்டு, தூக்கம் போன்றவற்றுக்கான நேரத்தை வரையறுத்துக் கூறி விட வேண்டும். வளர்ந்த பின் தங்களது உடைகளை தாமே அணிந்து, தனது ஷூவுக்கு தானே பாலீஸ் போட்டுக்கொண்டு, சாக்ஸுக்காக அம்மாவைத் தேடி அலையாமல், பள்ளிக்குச் செல்வதற்கான புத்தகங்களை அடுக்கி முறையாகச் செல்ல பழக்க வேண்டும்.
ஒரு தோழி அழகாக மிமிக்ரி செய்வார். ஆடு, மாடு கத்துவது போல், ரயில் சத்தம், பூஜையின்போது மணி அடிக்கும் சத்தம் போன்ற பல்வேறு விதமான சத்தங்களை மிமிக்ரி செய்துக் காண்பித்து அவற்றின் பெயர்களை குழந்தைகள் கூறுமாறு சொல்லிக்கொடுத்து வளர்ப்பார். செல்லப்பிராணிகளுக்கு தினமும் உணவு கொடுக்கச் சொல்வார். இதனால் அவர்களின் மனதில் கருணை துளிர்விடும் என்று கூறுவார்.
அதோடு, மகன், மகள் வீட்டுப் பேரப்பிள்ளைகளை ஒன்று போல் குற்றம் குறை கூறாது, மனதை நோகடிக்காமல், தேவையானவற்றுக்கு ஊக்கம் கொடுத்து, அவர்களை எல்லாவற்றிற்கும் முன்னிலைப்படுத்தி, நேரத்தை செலவு செய்து வளர்க்கிறார். இதனால் இயல்பாகவும், இயற்கையாகவும் பிள்ளைகள் அனைவருடனும் பழகுகிறார்கள்.
வேலைக்குச் செல்லும் பிள்ளைகளின் பெற்றோர்கள் நிம்மதியுடன் வீடு திரும்புகிறார்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களாகிய நாம் இதுபோல் குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்தால், நல்ல இளைய தலைமுறையை வளர்த்துவிட்டு செல்லும் பெருமையை அடையலாம் என்றும் அவர் கூறுகிறார்.