
செல்லப் பிராணிகள் வளர்ப்பது என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, இது குழந்தைகளிடம் அன்பையும், பாசத்தையும், கருணையையும் வளர்த்தெடுக்க உதவும். செல்லப் பிராணிகளை வளர்ப்பது குழந்தைகளின் நேர்மறையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இது ஒரு சிறந்த உடற்பயிற்சியும் கூட. செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது என்பது ஆரோக்கியமான உடல் இயக்கங்களை உண்டாக்கும். அத்துடன் பிறர் மீது அக்கறையும், உதவும் குணமும் ஏற்பட்டு நல்ல மனிதர்களாக வளர்வதற்கு உதவும். குழந்தைகள் விரும்பி வளர்க்கக்கூடிய செல்லப் பிராணிகள் சிலவற்றைக் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
நாய்: குழந்தைகள் நாய்க்குட்டிகளை வளர்ப்பதற்கு மிகவும் ஆசைப்படுவார்கள். நாய்க்குட்டிகளுடன் விளையாடுவது, பேசுவது, உணவு கொடுப்பது, வாலாட்டும் குட்டிகளை ரசிப்பது, பராமரிப்பது என்று அவர்கள் நிறைய நேரத்தை அதனுடன் செலவழிப்பதால் அவர்களுக்கு பொறுப்புணர்வு என்பது தானாக வந்துவிடும். நாய்கள் மிகவும் அன்பானவை; விசுவாசமானவை. இவை குழந்தைகளுக்கு நல்ல நண்பர்களாக இருக்கும்.
குழந்தைகள் பொதுவாக பொம்மைகளுடன் விளையாடுவதை விட, அழகான இந்தக் குட்டி நாய்களுடன் விளையாடுவதை மிகவும் விரும்புவார்கள். வீட்டிற்கு உறவினர்களோ, விருந்தினர்களோ வரும்பொழுது ஆர்வமுடன் தான் வளர்க்கும் நாய்க்குட்டியை பற்றி பேசுவதும், அவர்கள் பாராட்டுவதைக் கண்டு முகம் மலர்வதும் என ஒரு சிறந்த சமூகப் பிணைப்பை அவர்களுக்குள் ஏற்படுத்தவும் இது உதவுகிறது.
பூனை: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மற்றொரு செல்லப் பிராணி பூனை. இவற்றை மடியில் வைத்து கொஞ்சாத குழந்தைகளே இல்லை எனலாம். பூனையை துரத்திப் பிடித்து விளையாடுவது, அதற்கு அழகாக கிண்ணங்களில் பால் ஊற்றி கொடுப்பது போன்றவற்றை ஆர்வமுடன் குழந்தைகள் செய்வார்கள். கதவிடுக்கில் ஒளிந்து கொண்டு பூனைக்கு ஆட்டம் காட்டுவார்கள். அவை எப்படியோ தேடிக் கண்டுபிடித்து விட்டால் கைகளைத் தட்டி குதூகலிப்பார்கள். டிவியிலும், செல்போனிலும் நேரத்தை கழிப்பதை விட, இது ஆக்கப்பூர்வமான ஒரு செயலாகும்.
பூனைகளை சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள். இவற்றை பராமரிப்பது என்பது மிகவும் சுலபம். ஆனால், பூனைகளை கையாள்வதில் குழந்தைகளை கவனமாக இருக்கப் பழக்க வேண்டும். அவை தூங்கும்பொழுது எழுப்பி இடைஞ்சல் செய்தால் எரிச்சல் அடைந்து கீறி விடும் அல்லது கடித்து விடும். எனவே, குழந்தைகளைப் பாதுகாப்பாக இருப்பதற்குப் பழக்க வேண்டும்.
கிளி: சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளை வளர்ப்பதற்கு ஆசைப்படாதவர்கள் யார் இருக்கிறார்கள்? அதுவும் வீட்டில் லவ் பேர்ட்ஸ் இருந்து விட்டால் அதனை வேடிக்கைப் பார்ப்பதில் பொழுது போவதே தெரியாது. ஆனால், கிளிகளை வளர்ப்பதற்கு அதிக கவனிப்பு, பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பு தேவை. கிளிகள் சில சமயங்களில் கூச்சலிடும், இறகுகளை உதிர்க்கும். இவற்றைப் பாதுகாப்பாக சமாளிக்க குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டியது அவசியம். பள்ளியிலிருந்து வந்ததும் ஸ்கூல் பேக்கை ஒருபுறம் வைத்துவிட்டு ஓடி வந்து முதலில் பார்ப்பது இந்த செல்லக்கிளிகளைதான். அத்துடன் விடுமுறை நாட்களில் கிளி கூண்டை சுத்தம் செய்வதும், அவற்றிற்கு பழங்களை ஆசையாகத் தருவதும், தண்ணீர் வைப்பதும் என செய்வதில் ஒரு நேர்த்தியையும் பொறுப்பையும் கடைப்பிடிப்பார்கள். இது பிள்ளைகளை ஒரு பொறுப்பான மனிதர்களாக உருவாவதற்கு வழிவகுக்கும்.
செல்லப் பிராணிகளை வளர்க்கும்போது முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை:
* குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப அவற்றுடன் விளையாடுவது, பழகுவது ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதாவது, செல்லப் பிராணிகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதை பிள்ளைகளுக்கு சொல்லித் தர வேண்டும்.
* செல்லப் பிராணிகளை தேர்ந்தெடுக்கும்பொழுது குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப வளர்ப்புப் பிராணிகளை அனுமதிக்கலாம். அத்துடன் அவற்றை வளர்ப்பதற்கான பொறுப்புகளையும் கொடுக்கலாம்.
* செல்லப் பிராணிகளின் உடல் நலம் பாதிக்கும் பொழுது அவற்றை பெட் கிளினிக்குக்கு அழைத்துச் செல்லும் பொழுது நம் குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்வது நல்லது. ஏனெனில், மருத்துவர் வலியுறுத்தும் சில விஷயங்களை அவர்களும் கேட்டு தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
* இதன் மூலம் எதைச் செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை நம் வீட்டுப் பிள்ளைகள் தெரிந்து கொள்வார்கள்.
* செல்லப் பிராணிகளுக்கு மறக்காமல் தடுப்பூசிகளை போடுவது அவசியம். இவற்றின் சுகாதாரம் நம் பிள்ளைகளுடன் தொடர்புடையதாக இருப்பதால் இது மிகவும் அவசியம். தேவையான தடுப்பூசிகளைப் போடுவதுடன் அதைப் பற்றிய விழிப்புணர்வையும் குழந்தைகளிடம் ஏற்படுத்துவது நல்லது.
* செல்லப் பிராணிகளுடைய ஆரோக்கியத்திலும் சுகாதாரத்திலும் பெற்றோராகிய நாம் மட்டும் விழிப்புணர்வுடன் இருந்தால் போதாது, நம் பிள்ளைகளையும் விழிப்புணர்வுடன் இருக்கப் பழக்க வேண்டும்.