
வாழ்க்கை எனும் கடிகாரம் சரிவர மணி காட்ட, நேரம் தவறாமல் ஓட, அடிக்கடி ரிப்போ் ஆகாமல் இருக்க பேட்டரி மாற்றுவது போல நம் உடல் ஆரோக்கியத்திலும் நாம் சில வாழ்க்கை நெறிமுறைகளை கடைபிடிப்பது நல்லது. உடற்பயி்ற்சி மேற்கொள்வது, நல்ல சரிவிகித உணவு சாப்பிடுதல், வருடத்திற்கொரு முறை முழு உடல் மருத்துவப் பரிசோதனை, தெய்வ வழிபாடு, நோ்மறை சிந்தனை, சேமிக்கும் பழக்கம், நமது தேவையை நாமே பூா்த்திசெய்தல் என பல்வேறு விஷயங்கள் மற்றும் இன்ன பிற விஷயங்களில் அக்கறை செலுத்த வேண்டும்!
நாற்பது வயது வரை ஒருவித வாழ்க்கை, நாற்பதிற்கு மேல் அறுபது வயது வரை ஒருவித வாழ்க்கை நடைமுறையை கடைபிடிப்பதே நல்லது. அதன் பிறகு நாம் வெகு ஜாக்கிரதையாக, கவனமுடன் வாழ்வதே நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நல்லது. ‘வயதாகி விட்டதே, எப்படி காலம் ஓடும்’ என்ற கற்பனையை முதலில் மூட்டை கட்டி வைக்க வேண்டும். கவலைப்படுவதை முதலில் நிறுத்த வேண்டும். அதோடு, மன பக்குவத்தை வளா்த்துக்கொள்ள வேண்டும். பொறுமை என்னும் நகை அணிந்து பெருமை கொள்வதே சிறப்பாகும். வயதாக ஆக நாம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய சில நெறிமுறைகளைக் கீழே காண்போம்.
1. காலையில் நடைப்பயிற்சி முக்கியம். அந்தத் தருணத்தில் சட்டைப்பையில் நமது முகவரியை எழுதி வைத்துக்கொள்வது மற்றும் வீட்டிலுள்ளோர் போன் நம்பரை குறித்து வைத்துக்கொள்வது நல்லது.
2. மனதில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். கோப தாபங்களை குறைத்துக்கொள்ள வேண்டும். கணவன், மனைவிக்குள் பற்றுதல், பாசத்தை அதிகமாக்கிக்கொள்ள வேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களை சரிவர கடைபிடிக்க வேண்டும்.
3. எளிதில் ஜீரணமாகும் உணவுகளை கணவன், மனைவி இருவரும் சாப்பிடுவது நல்லது. உணவு வகைகளை கொஞ்சம் குறைத்துக்கொண்டு காய்கறி வகைகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது நல்லது.
4. கூடுமான வரையில் வெளியூா் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அப்படி கட்டாயம் போகவேண்டிய கட்டாயம் வரும்போது கணவன், மனைவி இருவரும் சோ்ந்து துணைக்கு ஒரு நபரை சம்பளம் கொடுத்து கூடவே அழைத்துப்போவது நல்லது. மாத்திரை, மருந்துகளும் உடன் கொண்டு செல்ல வேண்டும்.
5. எங்கு போனாலும் கையில் வீட்டில் செய்த உணவு, பழங்கள், மாத்திரை மருந்துகள், வெந்நீா் போன்றவற்றை எடுத்துப்போவது நல்லது.
6. குறைந்தபட்சம் 7 மணி நேரத்திற்குக் குறையாமல் தூங்கும் பழக்கத்தை மேற்கொள்வதே சாலச் சிறந்தது. அப்படி வராத நிலையில் சுவாமி ஸ்லோகங்களைப் படிக்கலாம்.
7. கிணற்றடி மற்றும் குடிநீா் தண்ணீா் புழங்கும் இடங்களில் சர்வ ஜாக்கிரதையாய் கால்களை ஊன்றி நடப்பது நல்லது. அங்கு பாசி படர்ந்திருக்கும் என்பதால் வழுக்கி விழும் ஆபத்து ஏற்படும்.
8. குளியலறை மற்றும் கழிவறைகளைப் பயன்படுத்தும்போது தாழ்ப்பாள்போடாமல் இருப்பது நல்லது.
9. வெளியூரில் வசிக்கும் பிள்ளைகள், பெண்கள், பேரன், பேத்திகளிடம் வாரம் இருமுறையாவது பேசுவது நல்லது. இதனால் பற்றுதல் பாசம் குறையாமல் இருக்கும்.
10. கண்டதை, நினைத்ததை, மிகவும் பிடித்ததை எல்லாம் வைத்துக்கொண்டு வாய்க்கு ருசியாக உள்ளதே என சாப்பாட்டை சாப்பிடக் கூடாது. குறிப்பிட்ட வயதிற்கு மேல் வாய்ப்பூட்டு அவசியமே!
11. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் நல்ல ஆரோக்கியமான, பரஸ்பரம் புரிதலோடு கூடிய நட்பை வளா்த்துக்கொள்வதே நல்லது.
12. தினசரி பேப்பர், புத்தகம் படித்தல் மற்றும் நல்ல நிகழ்சிகளைப் பார்க்க மட்டும் தொலைக்காட்சியைப் பயன்படுத்தலாம். இதற்கு செல்போனும் விதிவிலக்கல்ல!
13. கோபதாபங்களைக் குறைத்துக்கொண்டு, சிரித்த முகத்துடன், யாரிடமும் பேசுவது நல்லது. தேவையில்லாத அறிவுரைகளைத் தவிர்ப்பதும் ஆரோக்கியமே!
14. மனைவிக்கு உடல் நலம் சரியில்லாதபோது வீட்டு வேலைகளில் அவருக்கு உதவி செய்வது, மருந்து தடவி விடுவது, உணவு பரிமாறுவது போன்ற காரியங்களைச் செய்வதால் உங்களை யாரும் பெண்டாட்டிதாசன் எனச் சொல்ல முடியாது!
அனைவரிடமும் அன்பை விதையுங்கள், அனுசரிப்பு எனும் உரம் போடுங்கள், கோபதாபம் எனும் களையை அகற்றுங்கள். நல்ல குடும்பம் எனும் பயிர் தழைத்தோங்கி நல்ல மகசூல் கிடைக்கும்.