
பொதுவாக, குழந்தைகள் தங்களுக்கான உணவுகளையும் தேவைகளையும் தாங்களே தேர்வு செய்துகொள்ளும் வயதுகளில் வேறுபாடுகளைக் காணலாம். காரணம், அவர்களது வளர்ப்பு சூழல். பார்த்துப் பார்த்து அவர்களுக்கான தேவைகளைத் தேர்வு செய்து தரும் பெற்றோர் ஒருபுறம் பாராட்டுக்குரியவர்கள். எனினும், தங்கள் குழந்தைகளுக்கு தாங்களே தேர்வு செய்யும் உரிமையைத் தர மறுத்து அவர்களின் தன்னம்பிக்கையை சற்று கீழிறங்கச் செய்ய காரணமாகிறார்கள் என்பதும் உண்மை.
ஒவ்வொரு குழந்தையும் அவர்களுக்கான தேவைகளை அவர்களே தேர்வு செய்ய கற்றுக் கொடுப்பது எதிர்காலத்தில் அவர்களுக்குத் தன்னம்பிக்கை தரும் விஷயமாக அமையும். சரி, குழந்தைகளுக்குத் தேர்வை எவ்வாறு அறிமுகப்படுத்துவது? எந்த வயதில்? என்ற சந்தேகம் வருவது சகஜம். ஏனெனில் அவர்கள் வளர்ந்தாலும் நம் கண்களுக்குக் குழந்தையாகவே தெரிவதுதான். ஆனால், குழந்தைகளுக்குத் தேர்வுகளை அறிமுகப்படுத்துவது சுதந்திரம், முடிவெடுக்கும் திறன்கள் மற்றும் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும். அதை எவ்வாறு திறம்படச் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
வயது சார்ந்த வழிகாட்டுதல்: குழந்தைகளின் 12 மாதங்கள் வரை புலன்கள் சம்பந்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் அடிப்படை மோட்டார் திறன்களில் ( basic motor skills) கவனம் செலுத்துங்கள். மேலும், வெவ்வேறு அமைப்புகளைக் கொண்ட பொம்மைகள் போன்ற ஆராயும் வகையிலான. அதேசமயம் பாதுகாப்பான பொருட்களை வழங்குங்கள்.
1 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு இரண்டு சிற்றுண்டிகளுக்கு இடையே தேர்ந்தெடுப்பது அல்லது அணிய ஒரு சட்டையைத் தேர்ந்தெடுப்பது போன்ற எளிமையான தேர்வுகளை அறிமுகப்படுத்துங்கள். அவர்கள் தேர்வு செய்வதை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் முயற்சிகளைப் பாராட்டுங்கள்.
பாலர் பள்ளிக் குழந்தைகளான 3 முதல் 5 வயது கொண்ட குழந்தைகளுக்கு இரண்டு ஆரோக்கியமான சிற்றுண்டிகளுக்கு இடையே தேர்ந்தெடுப்பது அல்லது எந்த விளையாட்டை விளையாடுவது என்பதைத் தீர்மானிப்பது போன்ற சற்று சிக்கலான தேர்வுகளை அறிமுகப்படுத்துங்கள். கற்பனையான விளையாட்டு மற்றும் மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாடக்கூடிய ( சமூகத்) தொடர்புகளை ஊக்குவிக்கவும்.
பள்ளி செல்லும் 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கு குடும்ப நடவடிக்கைகளைத் திட்டமிடுதல் அல்லது பாடநெறிக்கு அப்பாற்பட்ட வெளியுலக செயல்பாடுகளைத் தேர்ந்தெடுப்பது போன்ற மிகவும் நுண்ணிய செயல்களில் முடிவெடுப்பதில் அவர்களை ஈடுபடுத்துங்கள். இதை செய்தால் நன்மை, இது தீமை என எடை போட அவர்களுக்கு உதவுங்கள்.
தேர்வுகளை அறிமுகப்படுத்துவதற்கான உதவிக் குறிப்புகள்:
குழந்தைகளுக்கு எந்த விஷயத்தையும் கற்றுத்தர அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் சிறியதாகத் துவங்குவது அவர்களுக்கு சுவாரஸ்யம் தரும். எளிய தேர்வுகளுடன் தொடங்கி, குழந்தை வளரும்போது படிப்படியாக தேர்ந்தெடுக்கும் செயல்களை அதிகரிக்கவும்.
உங்கள் குழந்தையின் வயதுக்கேற்ப அவர்களால் தேர்வு செய்யும் வரையறுக்கப்பட்ட 2 அல்லது 3 விருப்பங்களை மட்டுமே வழங்குங்கள். அதிகமாக அவர்களுக்கு அழுத்தம் தருவது இதனால் தவிர்க்கப்படும். மேலும். பழக்கங்களை நிலைப்படுத்தி அவர்கள் எல்லைகளுக்குள் தேர்வுகளை வழங்குவது நல்லது.
உங்கள் குழந்தையின் தேர்வுகளைச் செய்வதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கவும், பாராட்டவும். அதில் உங்களுக்கு விருப்பமில்லையெனினும் அதை மென்மையாக சுட்டிக்காட்டி அவர்களையே மாற்றுத் தேர்வு செய்யப் பழக்குங்கள்.
அதற்கு நீங்களும் முன் நல்ல நடத்தையை முன்மாதிரியாகக் கொண்டு முடிவெடுக்கும் திறன்களை வெளிப்படுத்துங்கள். மேலும், உங்கள் குழந்தையுடன் அது பற்றிய உங்கள் சிந்தனை செயல்முறையைப் பற்றி விவாதிப்பது அவர்கள் சிந்திக்க வழி வகுக்கும்.
உங்கள் குழந்தையுடன் அவர்களின் தேர்வுகள் பற்றிப் பேசும்போது அதனால் விளையும் விளைவுகளைப் பற்றி சிந்திக்க உதவ முடியும். (உதாரணமாக அதிக இனிப்பு தேர்வு செய்தால் அதனால் விளையும் நல பாதிப்புகளைப் பேசலாம்).
தேர்ந்தெடுக்கும் திறன் தரும் நன்மைகள்:அவர்களின் முடிவெடுக்கும் திறன்களை வளர்க்கிறது. குழந்தைகள் தங்கள் விருப்பங்களை அறியவும் தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும் கற்றுக்கொள்ள உதவுகிறது. தங்கள் மீதான தன்னம்பிக்கையை உருவாக்குகிறது. குழந்தைகள் தங்கள் முடிவுகளை எடுக்கும் திறனில் திறமையாகவும் நம்பிக்கையுடனும் உணர உதவுகிறது. குழந்தைகளுக்குக் கட்டுப்பாடு மற்றும் தன்னம்பிக்கை உணர்வை வழங்குகிறது/ பிறருடன் அதிகாரப் போக்கான கோபம் மற்றும் மோதல்களைக் குறைக்கிறது.