
வித்தியாசமான சில பறவைகள் நம் வீட்டிற்குள் நுழைந்து விட்டால் அன்று முழுவதும் மனதில் ஒரு படபடப்பு ஏற்படும். ‘என்ன நடக்குமோ’ என்ற ஒரு அச்ச உணர்வு தோன்றும். அதோடு இல்லாமல், அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து விட்டால் அவர்கள் வேறு ஏதாவது கூறுவார்கள். எல்லாமாக சேர்ந்து நாம் ஒரு மனநிலையில் இருப்போம். ஆனால், நாமே அதை அனுபவிக்கும்போது மனதில் ஒரு தெளிவு பிறக்கும். அதுபோல் அனுபவித்த சில சுவாரஸ்யமான உண்மை சம்பவங்கள் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.
கோழிக்கோடில் வசித்துக் கொண்டிருந்தபொழுது வீட்டின் ஹாலுக்கு அடிக்கடிஒரு சிட்டுக்குருவி வந்துபோகும். ‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு.’ அதனால் அதைப் பார்த்து அடிக்கடி ரசிப்போம். தினசரி வந்து போகும் அந்த சிட்டுக்குருவி ஒரு நாள் வரவில்லை என்றாலும் என்னவோ போல் இருக்கும். அதைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுப் பெண்மணி, ‘கிளி (மலையாளம்) வந்தால் வண்டி, வாகனம் என்று ஏதாவது கட்டாயமாக வாங்குவீர்கள் பாருங்கள்’ என்று கூறிக் கொண்டிருந்தார்.
அதேபோல், சில வருடங்களுக்கு முன்பு, ஒரு பச்சைக் கிளி வந்து வீட்டு பால்கனியில் அடைக்கலம் புகுந்தது. மூன்று நாட்கள் அங்கேயே தங்கி விட்டது. அதற்கு தீனி எல்லாம் போட்டு வளர்த்தோம். பக்கத்தில் இருக்கும் முருங்கை மரம், கொய்யா போன்ற மரங்களில் தாவி சிறிது நேரம் விளையாடிவிட்டு திரும்பவும் அதே இடத்தில் வந்து அமர்ந்து கொள்ளும். சரியாக மூன்று மாதம் கழித்து பையனுக்குத் திருமணம் நடந்தது.
இதைப் போலவே ஒரு நாள் காலை நேரத்தில் வாசலில் கோலம் போடும்பொழுது வீட்டு வாசற்கதவைத் திறந்து வைத்தோம். அந்த நேரத்தில் ஒரு குட்டி பாம்பு உள்ளே சென்று விட்டது. அன்று மனநிலையே சரியில்லை எங்களுக்கு. ‘என்ன ஆகுமோ இப்படியெல்லாம் நடக்கிறதே’ என்று ஒரே கவலையாக இருந்தது. ஆனால், அதன் பிறகு சில நாட்களிலேயே எங்கள் மகளுக்கு திருமணம் கைகூடி நல்லபடியாக திருமணம் நடைபெற்றது.
ஒரு சமயம் காலையில் எழுந்ததும் பூக்கள் இருக்கும் ஜன்னலைப் பார்த்தபோது, அதில் அமைதியாக ஒரு ஆந்தை அமர்ந்திருந்தது. எந்தவித சத்தமும் போடவில்லை. எனக்கு கை, கால் எல்லாம் நடுங்கி விட்டது. பேச்சு மூச்சற்று அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று மாலை வேளையில் எனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தி வந்தது. அதன் பிறகு எனது தாயார் தவறிவிட்டார். ஆனால், அந்த ஆந்தை அலறவே இல்லை. அமைதியாகத்தான் இருந்தது.
அதேபோல், வவ்வால்கள் அதிகமாக தோட்டத்திற்கு வரும். பழங்களை எல்லாம் நன்றாக சாப்பிட்டுவிட்டு போகும். எங்கள் அம்மா வீடு திறந்து இருந்தால் அதற்குள்ளும் வந்துவிட்டுப் போகும். நன்றாக வயது முதிர்ந்த பிறகு எங்கள் பாட்டி, அம்மா, அண்ணி மூன்று பேருமே தீர்க்க சுமங்கலிகளாக இயற்கை எய்தினர்.
சுமார் 10 வருடங்களாக பெங்களூரு செல்வதும் வருவதுமாக இருக்கிறேன். என்றாலும் அங்கு செல்லும்பொழுது ஒரு காக்கையையோ, குயிலையோ கண்ணில் கண்டதே இல்லை. கிருஷ்ண பருந்துவை கண்ணால் காண முடிந்தது. ஆனால், காக்கை, குயிலைத்தான் காண முடியவில்லை. ‘குயில் ஒவ்வொரு முறை கூவும்பொழுதும் காக்கைக்கு நன்றி சொல்ல வேண்டும்’ என்று ஒரு பழமொழி உண்டு. ஒருவேளை காக்கைக் கட்டிய கூட்டில் முட்டையிடும் சந்தர்ப்பம் குயிலுக்குக் கிடைக்காததால்தான் இரண்டுமே அங்கு இல்லையோ என்று யோசிப்பதும் உண்டு.
இதையெல்லாம் படிக்கும்பொழுது சிலருக்கு மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல்தான் இருக்கும். ஆனால், உண்மையாக நடக்கும்பொழுது சில நாட்களுக்குப் பிறகு ஆராய்ந்து பார்த்தால்தான் அதன் உண்மை என்னவென்று புரிந்துகொள்ள முடியும்.
இதேபோல் இன்னும் சிலர், ‘இந்தப் பறவைகள் வீட்டிற்குள் நுழைந்தால் என்ன நடந்திருக்கும்?’ என்று கேட்கும்பொழுது அவர்களின் அனுபவம் வேறு மாதிரியாக இருக்கும். அவரவருக்கும் அவரவர் அனுபவம் புதுமைதானே! ஆதலால், வீட்டில் எல்லா ஜன்னல்களிலும் கம்பி வலை போட்டு பறவைகள் வராமல் பராமரிக்க, நம் சுகாதாரம் மேலோங்கும். மற்ற ஜந்துக்களும் உள்ளே வந்து நம் மனநிலையை குழப்பி விடாமல் இருக்க இது ஒரு சிறந்த வழி.