

கிராமங்களில் வீட்டின் பின்புறம் குளம், ஏரி இருக்கும். அதில் சிறிய மீன் குஞ்சுகளை விட்டு அது பெரிதாகி வரும் வரை ரசித்து வளர்ப்போர் உண்டு. இன்றோ அதற்கெல்லாம் வாய்ப்பில்லாததால் இல்லம் தோறும் மீன் தொட்டிகள் வைத்து வண்ண மீன்களை வளர்க்கின்றனர்.
சிறுவர் முதல் பெரியோர் வரை மீன்களையும், மீன் தொட்டிகளையும் விரும்பாதோர் இருக்க முடியாது. கைபேசி இல்லாத காலங்களில் மீன் தொட்டி வைத்து வண்ண மீன்கள் வளர்ப்பது பொழுதுபோக்காகவும், மனமகிழ்ச்சி தரக் கூடியதாகவும் இருந்தது.
மீன் வளர்ப்பு என்பது மன மகிழ்ச்சி தரும் பொழுதுபோக்காக இருப்பதோடு, மன அமைதியை கொடுத்து, மன அழுத்தத்தை பெருமளவு குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள், வீட்டில் மீன் தொட்டியை வைத்து பராமரிப்பது உள்ளத்திற்கு மகிழ்ச்சி தருவதோடு தூக்கப் பிரச்னைகள், மன அழுத்தத்தை பெருமளவு குறைப்பதாக ஆய்வுகள் மூலம் வலியுறுத்தி சொல்கின்றனர்.
மீன்களை சிறுவர்கள் வாங்கி வந்து அப்படியே விடுவர். அப்படி செய்யாமல் மீடியமான மீன் தொட்டியில் நல்ல காற்றோட்டம் இருக்குமாறு மோட்டார் வைத்து அதற்கு தேவையான மீன் தொட்டி அமைப்பை உருவாக்கி அதில் விட நன்கு வளரும்.
வீட்டில் நுழைந்ததும் இடதுபுறம் மீன் தொட்டி இருக்குமாறு வைக்க வேண்டும். வண்ண மீன்கள் நீந்துவது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை தந்து மனமகிழ்ச்சியை தருகிறது.
வீடு கட்டும்போதே வீட்டின் அமைப்புக்கு ஏற்றவாறு மீன் தொட்டி வைக்க பிளான் பண்ண நன்றாக இருக்கும். பெரியவர்களின் தூக்கமின்மை பிரச்னையை போக்கி மனஅமைதியை கொடுத்து மகிழ்ச்சி கொடுப்பதாக வண்ண மீன் வளர்ப்பு உள்ளது.
வண்ண மீன்கள் உயிரோட்டமாக நீந்துவது எல்லோரையும் வசீகரிக்கும். அழகான சூழலை உருவாக்கி கவலைகளை மறக்க வைக்கிறது. மீன்களின் சுறுசுறுப்பு வலிமை மற்றும் வெற்றியின் அடையாளமாக கருதப்படுகிறது.
இரண்டு மீன்கள் இணையாக நீந்துவது ஒற்றுமையைக் குறிக்கும். மீன்தொட்டியை வீட்டில் வைப்பது மனநிலையை சீராக்குவதுடன் செல்வ செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது. நேர்மறையான ஆற்றலையும், மகிழ்ச்சியையும் தருவதால் உடல், மன ஆரோக்கியம் மேம்படுகிறது.
தீய சக்தியை அண்டவிடாது வீட்டில் இருப்பவர்களின் ஆற்றலை அதிகரிக்கிறது என வாஸ்து நிபுணர்கள் சொல்கின்றனர். வடகிழக்கு திசையில் மீன் தொட்டியை வைக்க அன்பு அதிகமாகும். படுக்கையறை, சமையலறையில் வைப்பது ஏற்றதல்ல. தூக்கத்தை தொந்தரவு செய்யும் என நம்பப்படுவதால் படுக்கையறையில் வைக்கக்கூடாது.
தற்போதெல்லாம் மீன் தொட்டியை தனியாக வைப்பதில்லை. வீட் டை வடிவமைக்கும்போதே டைனிங் டேபிளில் ஃபிஷ் டேங்க்,ஸ்டடி டேபிள் டேங்க்,பில்ட் இன் சுவர் அல்லது ஹோம் ஆஃபிஸ் டிவைடர் ,ஃபில்டர் டேங்க்,வாக் ஓவர் டேங்க், ஃபோட்டோ பிரேம் என பல விதங்களில் வடிவமைக்க ஏற்றதாக கிடைக்கிறது.
சிவப்பு நிற மீன்கள் வலிமையையும், பச்சை நிற மீன்கள் வளர்ச்சியையும், மஞ்சள் வண்ண மீன்கள் செயல் திறனையும் வளர்க்கும். மீன்களை எப்போதும் ஒற்றைப் படையாக வைக்க வேண்டும். நான்கு ஜோடிகளுடன் ஒரு கறுப்பு மீனையும் வளர்த்தல் அதிர்ஷ்டம் தரும் என நம்பப்படுகிறது.
சுறுசுறுப்பான மீன்களை நோயிலிருந்து மீள்பவர்கள் பார்த்துக் கொண்டு இருக்க அவர்கள் நோயிலிருந்து விரைவில் குணமடைவதாக சொல்கிறார்கள். வீட்டின் நிதி நிலைமையை அதிகரித்து செல்வத்தை ஈர்ப்பதால் வண்ண மீன்களை வளர்க்கலாம்.
நகரும் மீன்கள் நேர்மறை ஆற்றலை அதிகம் வெளியிடுவதால் தீயசக்தி பாதிப்பு ஏற்படாது என நம்பலாம். குறைந்தது ஒன்பது மீன்களை வளர்ப்பது நல்லது.
குழந்தைகளை செல் பயன்பாட்டில் இருந்து திசை திருப்ப நல்லதொரு மாற்றாக வண்ண மீன்கள் வளர்ப்பு கை கொடுக்கும். மீன் தொட்டியில் தண்ணீர் மாற்றுவது, மீன்களுக்கு உணவிடுவது என அவர்களின் நேரமும் சந்தோஷமாகவும்,பயனுள்ளதாகவும் இருக்கும்.
பெரியவர்களுக்கும் தேவையில்லாத மனக்குழப்பம், கவலைகளிலிருந்து விடுபட்டு சந்தோஷத்தையும், மன அமைதியும் தரும் என்பதால் அவர்களது ஆரோக்கியமும் மேம்படும்.
இவை யாவும் நான் அனுபவத்தில் எங்கள் வீட்டில் மீன் வளர்த்து வருவதை, கவலைகள் மறப்பதை உணர்ந்ததால் தொடர்ந்து வண்ண மீன்கள் வளர்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.
வீட்டில் மீன் தொட்டி அமைப்பதன் மூலம் மன அழுத்தம் குறைந்து, தூக்கமின்மை நீங்கி, நேர்மறை ஆற்றலும் செல்வச் செழிப்பும் பெருகும் என்பதை வாசகர்கள் உணர்வார்கள்.