

உயிர் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரே மாதிரியான உருவமும் குணமும் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு மனிதரின் செல் அமைப்பிலிருந்து உடற்கூறுகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்துமே வேறுபடும். இந்நிலையில் மனோதத்துவ நிபுணர்கள், ஏறக்குறைய ஒத்த பண்பாடுகள் கொண்ட வகையினரை அடிப்படையாக எடுத்துக்கொண்டு ஐந்து பிரிவுகளாக மனிதர்களைப் பிரித்துள்ளனர். அதன் ஒவ்வொரு பிரிவு மனிதர்களைப் பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்.
1. ஓப்பன்னெஸ் (Openness): வெளிப்படைத்தன்மையுடைய இவ்வகை மனிதர்கள் எப்பொழுதும் எதிலும் மிக்க ஆர்வமுடையவர்களாக இருப்பர். இவர்கள் கற்பனைத் திறனும் படைப்பாற்றலும் கொண்டவர்கள். எதிர்கொள்ளும் அபாயகரமான விளைவுகளை துச்சமாக எண்ணி, புதுப்புது சவால்களை ஏற்று, செயல்படுத்த துணிந்தவர்கள். வெளிப்படைத்தன்மையற்று, புதிய முயற்சியில் ஈடுபடாமல், பாரம்பரியமான பழைய வழிமுறைகளைப் பின்பற்றிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், ஓப்பன்னெஸ் உடையவர்கள், \என் வழி தனி வழி| என்று கூறி முன்னோக்கிச் சென்றுகொண்டே இருப்பார்கள். இவர்கள் பயணம் மேற்கொள்வதையும், போட்டோகிராபியையும் பொழுதுபோக்காக வைத்திருப்பர்.
2. கான்ஸியன்ஸியஸ்னெஸ் (conscientiousness): இவர்கள் எப்பவும் அதிக சென்சிடிவ் குணம் கொண்டிருப்பார்கள். தன்னைப் பற்றியும், தன்னுடைய நடத்தை பற்றி சுற்றியுள்ளவர்கள் என்ன நினைப்பார்கள் என்றும் அதிகளவு கவலைப்படுபவார்கள். மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டு, தனது கடமைகளை உணர்ந்து, அவற்றை திட்டமிட்டு சரியாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நேர்மையாளர்கள் இவர்கள். மனச்சாட்சியின்றி, கடமைகளை சரிவர நிறைவேற்ற விரும்பாதவர்கள், எப்பொழுதும் வேலைகளை தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார்கள். கான்ஸியன்ஸியஸ்னெஸ் உள்ளவர்கள் தன்னார்வலராக தொண்டு புரிவதை பொழுதுபோக்காகக் கொண்டிருப்பர்.
3. எக்ஸ்ட்ராவெர்ஷன் (extraversion): புறநோக்குத்தன்மை உடையவர்கள் இவர்கள். அதிகமாக பார்ட்டிகளில் கலந்துகொண்டு, சகஜமாகப் பேசிப் பழகி புதுப்புது நட்புகளை உருவாக்கிக்கொள்ளும் குணமுடையவர்கள் இவர்கள். இதன் மூலம் இவர்கள் மற்றவர்களின் சக்தியையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்வதுடன் தானும் மகிழ்ச்சியடைவர். புறநோக்குத்தன்மையற்றவர்கள் பொதுவாக தனிமையிலேயே நேரத்தை கழிப்பவராகவும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின், நேர்மறை சக்தி பெற, தனது தனிப்பட்ட நேரத்தை செலவு பண்ணிக் கொண்டிருப்பர்.
4. அக்ரியபிள்னஸ் (Agreeableness): அனைவருடனும் ஒத்துப்போகும் குணம் உடையவர்கள் இவர்கள். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்து விஷயங்களையும் நம்பிக்கையுடன் சாதகமான ஒன்றாகக் கருதும் குணம் கொண்டவர்கள். இவர்கள் பிறரிடம், அன்பு, நம்பிக்கை, பச்சாதாபம், பாசம் போன்ற நற்குணங்களைக் காட்டி நல்ல முறையில் ஒருங்கிணைந்த நட்பை வளர்த்துக் கொள்வார்கள். இந்த மாதிரி ஒத்துப்போகும் குணமற்றவர்கள், பிறரின் உணர்வுகளையும், கஷ்டங்களையும் புரிந்துகொள்ளாமலும், நட்பை விரும்பாமலும், தூர விலகியே இருப்பார்கள். தன் காரியத்தை சாதித்துக் கொள்வதிலேயே குறியாயிருப்பர்.
5. நியூரோட்டிஸிஸம் (Neuroticism): இந்த குணமுடைய நியூரோட்டிக் மனிதர்கள் எப்போதும் எதிர்மறை எண்ணங்களுடன், மிகச் சிறிய விஷயங்களுக்கும் அதிக நேரம் கவலைப்படுதல், அடிக்கடி கோபம் அல்லது எரிச்சலடைதல், வாழ்க்கையில் ஏற்படும் அழுத்தங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் திணறுவது, பாதுகாப்பற்ற உணர்வு போன்ற குணங்கள் கொண்டிருப்பார்கள். இதை ஒரு நோய் என்று கூற முடியாது. அவர்களாகவே இதற்கு தீர்வு காணவும், உணர்ச்சிகளால் உண்டாகும் அழுத்தத்தை சமாளிக்க வழி தெரிந்தவர்களாகவும் இருப்பார்கள்.