நம் அன்றாடச் சமையலறையில் பருப்பு, சாதம், காய்கறிகள் வேகவைப்பது முதல் தண்ணீர் கொதிக்க வைப்பது வரை பிரஷர் குக்கரின் பங்கு மிக முக்கியம். இதனால், சமையல் வேகமாக முடிந்து நேரத்தை மிச்சப்படுத்தினாலும், உள்ளே அதிக ஆவியும் அழுத்தமும் உருவாவதால் கூடுதல் எச்சரிக்கை அவசியம். இதன் எந்தப் பாகத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டாலும் அலட்சியப்படுத்தக் கூடாது.
குறிப்பாக, மூடியின் உட்புறம் இருக்கும் குக்கர் ரப்பர் கேஸ் கட் சரியாகப் பொருந்தினால்தான் மூடி இறுக்கமாக மூடி உள்ளே அழுத்தம் சீராக உருவாகும். நீண்ட காலப் பயன்பாட்டால் இது தளர்வாக மாறினால், மூடியை மூடுவதில் சிரமம் ஏற்பட்டு பக்கவாட்டில் ஆவி வெளியேறத் தொடங்கும்.
தளர்வான கேஸ்கெட்டை சரிசெய்யும் எளிய வழி!
சில நேரங்களில் மூடியின் பள்ளத்தில் ரப்பர் சரியாக உட்காராமல், தன் இடத்திலிருந்து லேசாக வெளியே துருத்திக்கொண்டிருக்கலாம். அத்தகைய சூழலில், அதனைப் பலமாக இழுத்தோ அழுத்தியோ பொருத்த முயற்சிக்க வேண்டாம். முதலில் ரப்பரை மெதுவாகக் கழற்றிச் சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். பின்னர் முழுமையாக உலர விட்டு, மூடியின் பள்ளத்தில் மீண்டும் சீராகப் பொருத்தினால் 2 நிமிடங்களில் இந்தப் பிரச்சினை சரியாகிவிடும்.
தொடர்ந்து சமைப்பதால் ஏற்படும் வெப்பத்தின் காரணமாகவும் ரப்பர் சற்றுத் தளர்வாகத் தோன்றலாம். அப்போது அதனை அறை வெப்பநிலைக்கு வரும் வரை சிறிது நேரம் ஆறவிட வேண்டும். நன்கு ஆறிய பிறகு சுத்தமான நீரில் கழுவி, ஈரமில்லாமல் முழுமையாக உலர்த்தி மீண்டும் பொருத்தினால், இடம்பெயர்ந்த ரப்பர் பழையபடி சரியாகப் பிடித்துக்கொள்ளும்.
மூடுவதற்கு முன் கவனிக்க வேண்டியவை!
குக்கரை அடுப்பில் வைப்பதற்கு முன் மூடியைச் சுற்றிலும் கேஸ்கெட் சமமாகப் பொருந்தியிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். எங்கும் துருத்திக்கொண்டோ, இடைவெளி விட்டோ இருக்கக் கூடாது. மூடி, ரப்பர் மற்றும் குக்கரின் விளிம்புகளில் உணவுத் துகள்களோ அழுக்கோ ஒட்டியிருக்கக் கூடாது. சிறிய அழுக்கு இருந்தால்கூட மூடி சரியாக இறுக்கமாக மூடாமல் ஆவி கசியும்.
சமைக்கும்போது குக்கரை எப்போதும் சமதளமான இடத்தில் நேராக வைக்க வேண்டும். தீயின் அளவைத் தேவைக்கு ஏற்பச் சரியாக வைத்துக்கொள்ளவும். குக்கருக்குள் தண்ணீரையோ சமையல் பொருட்களையோ அளவுக்கு அதிகமாக நிரப்பக் கூடாது. சமைக்கும்போது மூடி, விசில் மற்றும் சேஃப்டி வால்வ் ஆகியவற்றை அவ்வப்போது கவனித்து வருவது பாதுகாப்பானது.
சுத்தம் செய்வது!
ஒவ்வொரு முறை சமைத்து முடித்ததும் ரப்பரைக் கழற்றிச் சுத்தமாகக் கழுவி, முழுமையாக உலர வைத்துப் பாதுகாக்க வேண்டும். அதனை இழுப்பதோ, வளைப்பதோ அல்லது கூர்மையான பொருட்களைக் கொண்டு கழற்றுவதோ கூடாது. அதிக வெப்பமும் தவறான சுத்தம் செய்யும் முறையும் ரப்பரை வேகமாகப் பாதிக்கும் என்பதால், இதனை டிஷ்வாஷரில் போட்டுக் கழுவுவதைத் தவிர்க்க வேண்டும்.
சுத்தம் செய்து ஆறவைத்த பிறகும் மூடி சரியாக மூடவில்லை என்றால், அந்த ரப்பர் தன் நெகிழ்வுத்தன்மையையும் வடிவத்தையும் இழந்துவிட்டது என்று அர்த்தம். விரிசல் விழுந்தாலோ, மிகவும் கடினமானாலோ அல்லது அழுத்தம் உருவாகாமல் போனாலோ, அதனை இறுக்கமாக்க வீட்டு வைத்தியங்களை முயற்சிப்பது ஆபத்தானது. அத்தகைய நேரங்களில், உங்கள் குக்கரின் மாடலுக்கு ஏற்ற புதிய குக்கர் ரப்பர் வாங்கி மாற்றுவதே பாதுகாப்பானது.