

ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள், முதியோர், உடல்நலக்குறைபாடுள்ள பயணிகளுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் பேட்டரி வாகனம் இலவசமாக இயக்கப்படுகிறது. இது தொடர்பான புகார்களை உதவி எண் 139 அல்லது (ரெயில் மதாத்) இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம் என ரெயில்வே வாரியம் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதான பெற்றோருடன் பயணிக்கும்போது, ரெயிலில் அமர்ந்த பிறகு ஏற்படும் நிம்மதியை விட, அந்த ரெயிலை அடைவதற்குள் படும் அவஸ்தைதான் நம்மை மனதளவிலும் உடலளவிலும் சோர்வடையச் செய்கிறது.
சென்னையில் 650 புறநகர் ரெயில் சேவைகளும் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட விரைவு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் தினமும் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணிக்கின்றனர். இவர்களில் 40,000 பேர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயதானவர்கள். வேலை, படிப்பு, வெளியூர் என பல்வேறு தேவைகளுக்காக ரெயில்களில் பயணிக்காத நாளே இல்லை. ஆனாலும் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் போதும், பயணத்தின்போதும் அவர்கள் சிரமத்தை சந்திக்காத நாளும் இல்லை.
இவர்களுக்கு உதவும் வகையில் முக்கிய ரெயில் நிலையங்களில் நிலைய அதிகாரி அறைகளில் சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டிருக்கும். நடைமேடைக்கு செல்லவோ அல்லது ரெயில் நிலையத்துக்கு வெளியே வரவோ இந்த சக்கர நாற்காலியை பயன்படுத்த தரப்படுகிறது.
அதேபோல் சென்னை சென்ட்ரல், எழும்பூர் போன்ற பல முக்கிய பெரிய ரெயில் நிலையங்களில் வயதானவர்களுக்காக பேட்டரி கார்கள் (Battery Operated Cars) இயக்கப்படுகின்றன. நடைமேடையின் நுழைவாயிலில் இருந்து உங்கள் ரெயில் பெட்டி இருக்கும் இடம் வரை இதில் அழைத்துச் செல்வார்கள். அல்லது IRCTC இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே அல்லது 'Yatri Mitra' சேவை மூலம் ஆன்லைனில் இலவசமாகவோ அல்லது சிறிய கட்டணத்திலோ வீல்சேர் (Wheelchair) மற்றும் அதை இயக்க ஒரு உதவியாளரை (Attendant) முன்பதிவு செய்யலாம்.
ரெயில் நிலையங்களில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி (Wheelchair) மற்றும் பேட்டரி கார் (Battery Operated Car) வசதிகளை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் எளிதாகக் கேட்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம் வாங்க.
1. சக்கர நாற்காலி கேட்பது எப்படி?
ஆன்லைன் மூலம் முன்பதிவு (IRCTC) செய்வது எப்படி? (மின்-சக்கர நாற்காலி / E-Wheelchair):
இந்திய ரெயில்வேயில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நிலை சரியில்லாத பயணிகளுக்காகச் சக்கர நாற்காலி (Wheelchair) வசதி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதை நீங்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தோ அல்லது நேரடியாக ரெயில் நிலையத்திற்குச் சென்றோ பெற்றுக் கொள்ளலாம்.
* உங்களிடம் உறுதி செய்யப்பட்ட (Confirmed) அல்லது RAC டிக்கெட் இருந்தால், IRCTC தளம் வழியாக எளிதாக முன்பதிவு செய்யலாம்:
* IRCTC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (irctc.co.in) அல்லது IRCTC ஆப்பிற்குச் சென்று லாக்-இன் செய்யவும்.
* மெனுவில் உள்ள 'Service at Stations' அல்லது 'Other Services' என்ற பிரிவின் கீழ் 'E-Wheelchair' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
* உங்கள் டிக்கெட்டின் PNR எண்ணை (PNR Number) பதிவிட்டு 'Search' கொடுக்கவும்.
* நீங்கள் ஏறும் ரெயில் நிலையம் அல்லது இறங்கும் ரெயில் நிலையம் ஆகியவற்றில் எங்கு சக்கர நாற்காலி தேவை என்பதைத் தேர்வு செய்து, பயணிகளின் விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
* முன்பதிவை உறுதி செய்தவுடன், உங்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சலுக்கு உறுதிப்படுத்தல் செய்தி (SMS/Email) வரும். அதில் உள்ள 'Booking Voucher'-ஐ பிரிண்ட் அவுட் எடுத்தோ அல்லது மொபைலிலோ சேமித்து வைத்துக் கொள்ளவும்.
ஆஃப்லைன் / நேரடியாக ரெயில் நிலையத்தில் கேட்பது எப்படி?:
ஒருவேளை உங்களால் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாவிட்டால், நேரடியாகவும் உதவி பெறலாம்:
* ஆன்லைன் முன்பதிவு செய்யவில்லை எனில், ரெயில் நிலையத்திற்குள் நுழைந்ததும் அங்குள்ள விசாரணை மையம் (Passenger Care Center) அல்லது மேலாளர் அலுவலகத்தை (Station Master/Manager Office) அணுகி, சக்கர நாற்காலி தேவைப்படுவதைக் கூறலாம்.
* ரெயில்வே உதவி எண்ணான (Helpline) 139-ஐ அழைத்து, அதில் கேட்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றியும் சக்கர நாற்காலி முன்பதிவு செய்யலாம்.
* பொதுவாக ரெயில் நிலையங்களில் சக்கர நாற்காலி சேவை முற்றிலும் இலவசம். ஆனால், சில முக்கிய நிலையங்களில் சக்கர நாற்காலியைப் பெறும்போது ரூ.500 ரொக்கப் பணம் (Cash) மற்றும் ஏதேனும் ஒரு அரசு அடையாள அட்டை (ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை) வைப்புத்தொகையாகக் (Security Deposit) கேட்கப்படும். நீங்கள் சக்கர நாற்காலியைத் திரும்ப ஒப்படைத்ததும் இந்த ரூ.500 மற்றும் அடையாள அட்டை உங்களிடம் முழுமையாகத் திரும்பத் தரப்படும்.
* சக்கர நாற்காலி மட்டுமே இலவசம். அதைத் தள்ளிச் செல்ல மற்றும் உங்களை ரெயிலில் ஏற்றிவிட ரெயில்வே கூலி ஆட்களின் (Porters/Coolie) உதவியை நாடினால், அதற்கான கூலி கட்டணத்தை நீங்கள் தனியாக வழங்க வேண்டும்.
2. பேட்டரி கார் (Battery Car) கேட்பது எப்படி?
ரெயில் நிலையங்களில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்படுவோருக்காக பேட்டரி கார் (Battery Car / Buggy) சேவை இயக்கப்படுகிறது. இதை பின்வரும் முறைகளில் பெறலாம்:
தொலைபேசி மூலம் முன்பதிவு (Advance Booking):
சென்னை சென்ட்ரல், எழும்பூர் போன்ற முக்கிய ரெயில் நிலையங்களில் உள்ள பேட்டரி கார் சேவைக்கான பிரத்யேக எண்களுக்கு முன்கூட்டியே தொடர்பு கொண்டு உங்கள் ரெயில் வரும் நேரம் மற்றும் பிளாட்பார்ம் எண்ணைத் தெரிவிக்கலாம்.
* முக்கியப் பெரிய ரெயில் நிலையங்களில் (எ.கா: சென்னை சென்ட்ரல், எழும்பூர் போன்றவை) பேட்டரி கார் சேவைக்கு என்று பிரத்யேகத் தொலைபேசி எண்கள் உள்ளன.
* சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு:9566222866, 8939806991, 9940356789, 8754404310 போன்ற எண்களில் முன்கூட்டியே தொடர்பு கொண்டு பேட்டரி காரை முன்பதிவு செய்யலாம்.
* சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு 9952056789 என்ற எண்ணில் முன்கூட்டியே தொடர்பு கொண்டு பேட்டரி காரை முன்பதிவு செய்யலாம்.
* வீல்சேர் (Wheelchair) உதவிக்கு: 9003061974
நேரில் அணுகுதல் (Direct Approach):
* ரெயில் நிலையத்தின் முக்கிய நுழைவாயிலில் அல்லது பழைய/புதிய கன்கோர்ஸ் (Concourse) பகுதியில் உள்ள Passenger Care Center அல்லது Enquiry (விசாரணை மையம்) அல்லது நிலைய துணை மேலாளர் அலுவலகத்தை நேரில் அணுகி பேட்டரி கார் வசதியைக் கேட்கலாம்.
* பிளாட்பார்ம் நுழைவாயில்களிலேயே பேட்டரி கார் டிரைவர்கள் அல்லது உதவியாளர்கள் இருப்பார்கள். அவர்களை நேரடியாக அணுகியும் முன்பதிவு செய்யலாம் (முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்).
* தெற்கு ரெயில்வே உட்பட பல முக்கிய நிலையங்களில் இந்தச் சேவைக்கு நபர் ஒருவருக்கு தோராயமாக ரூ.20 முதல் ரூ.30 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது (இடம் மற்றும் நிலையத்தைப் பொறுத்து கட்டணம் மாறுபடும்).
ரெயில் மதாத் / உதவி எண்:
இதுதவிர ஏதாவது அவசர உதவி தேவைப்பட்டால் ரெயில்வேயின் 139 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது ரெயில் மதாத் (Rail Madad) இணையதளம் மூலமாகவும் கோரிக்கை வைக்கலாம்.