

நாம் சமையலில் பயன்படுத்தும் பல அன்றாட மசாலா பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறது. அவற்றில் சில பொருட்களில் உள்ள கலப்படத்தை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்றாலும், சில பொருட்களில் உள்ள கலப்பத்தை நம்மால் எளிதில் அறிந்து கொள்ள முடிவதில்லை. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சமீபத்தில் கலப்படத்தை சோதிக்க சில எளிய பரிசோதனைகளை பகிர்ந்து வருகிறது. அந்த வகையில் மிளகாய்த்தூளில் செங்கல் தூள் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை வீட்டிலேயே சில எளிய சோதனைகள் மூலம் மிளகாய்த்தூளின் தரத்தை அறிய முடியும்.
மிளகாய்த்தூளில் செங்கல் தூள் அல்லது மணல் கலக்கப்பட்டுள்ளதா என்பதை தண்ணீர் மற்றும் உள்ளங்கை சோதனை மூலம் வீட்டிலேயே இரண்டு நிமிடங்களில் எளிதாகக் கண்டறியலாம். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பரிந்துரைக்கும் இந்த எளிய முறை கலப்படத்தை உடனடியாகக் காட்டிக் கொடுத்து விடும்.
பரிசோதனை செய்யும் முறை:
1. தண்ணீர் சோதனை:
ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் முக்கால் பங்கு சாதாரணத் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூளைக் கலக்காமல் மேலாகத் தூவி சில வினாடிகள் அப்படியே விடவும். சுத்தமான மிளகாய்த்தூள் முதலில் நீரில் மிதந்து பின்னர் மெதுவாக அடியில் தங்கும். ஆனால் எடை அதிகமான செங்கல் தூள் அல்லது மணல் இருந்தால் அவை உடனடியாக டம்ளரின் அடியில் சென்று படியும்.
2. உரசிப் பார்க்கும் சோதனை:
டம்ளரின் அடியில் படிந்திருக்கும் அந்தக் கசடிலிருந்து சிறிதளவு எடுத்து நம் உள்ளங்கையில் அல்லது விரல்களுக்கு இடையில் வைத்து மெதுவாகத் தேய்த்துப் பார்க்கவும்.
சுத்தமான மிளகாய்த்தூளாக இருந்தால் தேய்க்கும் போது மிகவும் மென்மையாகவும், லேசான எண்ணெய் பசையுடனும் உணரப்பட்டால் அது கலப்படமற்ற சுத்தமான மிளகாய் தூள் என்று கொள்ளலாம். செங்கல் தூள் அல்லது மணல் கலப்படம் செய்யப்பட்டிருந்தால் தேய்க்கும்போது சொரசொரப்பாகவோ அல்லது மணல் போன்று கரகரப்பாகவோ உணர்ந்தால், அதில் செங்கல் தூள் அல்லது மணல் கலக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
3. சோப்புக்கல் (Soapstone)கலப்படம்:
அடியில் தங்கும் படிமம் வெள்ளை நிறத்தில் இருந்து, தேய்க்கும் பொழுது சோப்பு போல வழுவழுப்பாக உணர்ந்தால் அது சோப்புக்கல் கலக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
4. செயற்கை சாயம்:
தூளைத் தண்ணீரில் போட்டவுடன் சிவப்பு நிறக் கோடுகள் வேகமாகக் கீழே இறங்கித் தண்ணீர் அடர் சிவப்பாக மாறினால் அதில் செயற்கை நிறமிகள் கலக்கப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
5. நிறம் மற்றும் மணம்:
செங்கல் தூள் கலந்த மிளகாய்த்தூள் வழக்கத்தை விட அதிக அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மேலும் தூய மிளகாய்க்கே உரிய காரமான வாசனை சற்று குறைவாகவே இருக்கும்.
கலப்பட மிளகாய் தூளால் ஏற்படும் பாதிப்புகள்:
சில சமயங்களில் எடையைக் கூட்டவும் நிறத்தை அதிகரிக்கவும் மிளகாய்த்தூளில் செங்கல் தூள் கலப்படம் செய்யப்படுகிறது. செங்கல் தூள் கலந்த மிளகாய்த்தூளைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதால் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படலாம். இப்படி செய்யப்படும் கலப்படத்தால் செங்கல் தூள் செரிமான மண்டலத்தை பாதித்து வயிற்று வலி, அல்சர் மற்றும் குடல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தி செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். இதில் உள்ள சிலிக்கா மற்றும் நச்சுப் பொருட்கள் நீண்ட காலப் பயன்பாட்டில் சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரக செயல் இழப்புக்கு வழிவகுக்கும்.
பாதுகாப்பு குறிப்புகள்:
அதிகப்படியான நிறத்தில் உள்ள மிளகாய்த்தூளை தவிர்க்கவும். இயற்கைக்கு மாறாக அதிக பிரகாசமான சிவப்பு நிறத்தில் இருக்கும் மிளகாய்த்தூளை வாங்குவதை தவிர்த்து விடுவது நல்லது.
கடைகளில் வாங்கும் போது FSSAI மற்றும் AGMARK சான்றிதழ் பெற்ற நம்பகமான பிராண்டுகளின் மிளகாய்த்தூள் பொட்டலங்களை மட்டுமே வாங்கவும்.
முடிந்த வரை வீட்டிலேயே முழு வரமிளகாயை வாங்கி நன்கு வெயிலில் காயவைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளலாம் அல்லது வீட்டில் மிக்ஸியில் அரைத்துப் பயன்படுத்துவது தான் மிகவும் பாதுகாப்பானது.
சமையலறைப் பொருட்களை உடனடியாகச் சோதித்துப் பார்த்து, முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்யும் நடைமுறைக்கு உகந்த, அதிகாரப்பூர்வமான எளிய வழிமுறைகளை வாசகர்கள் இதன் மூலம் அறிந்துகொள்கிறார்கள்.