

நம் ஒவ்வொருவர் வீட்டிலும் அதிகம் பயன்படுத்தப்படும் சாதனங்களில் கேஸ் அடுப்பும் ஒன்று. காலை காபி, டீ தயாரிப்பது முதல் இரவு உணவு வரை ஒரு நாளில் பலமுறை அடுப்பைப் பற்றவைத்து பயன்படுத்துவோம். நம் கவனக்குறைவால் சில சமயம் அடுப்பில் வைத்த பால் பொங்கியோ, சாம்பார் வழிந்தோ விடும். அவை அடுப்பின் சூட்டில் நன்கு காய்ந்து கூடப் போய்விடும். இதனால் அடுத்த முறை அடுப்பை பற்ற வைக்கும் பொழுது அடுப்பு ஒரே சீராக எரியாமல் தீ ஒரு பக்கம் மட்டுமே எரியும்.
இப்படி காஸ் அடுப்பில் தீச்சுடர் ஒரு பக்கம் மட்டுமே எரிவது பல வீடுகளில் பொதுவாக ஏற்படும் ஒரு பிரச்சனை. இப்படி சீரற்றதாக எரியும் பொழுது சமையல் பாத்திரங்களுக்கு வெப்பம் சமமாக கிடைக்காது. இப்படி சீராக எரியாமல் இருப்பதற்குப் பின்னால் இருக்கும் சில முக்கிய காரணங்களும் அதை நாமே வீட்டில் சரிசெய்யக்கூடிய எளிதான தீர்வுகளும் உள்ளன.
1. தீ ஒரு பக்கம் மட்டும் எரிவதற்கான காரணங்கள்:
பர்னர் துளைகளில் அடைப்பு:
சமையல் செய்யும்பொழுது பொங்கி வழியும் பால், குழம்பு, எண்ணெய் போன்றவை பொங்கி பர்னர் துளைகளில் விழுந்து காய்ந்து விடும். இந்த அழுக்குகள் துளைகளை அடைத்துக் கொள்வதால் கேஸ் சீராக வெளியேற முடியாமல் ஒரு பக்கமாக மட்டுமே எரியும். அழுக்கு அல்லது எண்ணெய் பிசுபிசுப்பு பர்னரின் துளைகளில் அடைத்துக் கொள்வதால் அடைப்பு இல்லாத பக்கத்தில் மட்டுமே எரியும். சில நேரத்தில் தீ நீல நிறத்திற்கு பதிலாக மஞ்சள் நிறத்தில் எரியும். இதனால் பாத்திரங்கள் கரிபிடித்துப் போகும்.
பர்னர் மூடி சரியாக உட்காராமல் இருப்பது:
அடுப்பை சுத்தம் செய்த பிறகு அல்லது நகர்த்திய பிறகு, பர்னரின் மேல் மூடியை வைக்கும் போது அவை சரியாக அமராமல் சாய்வாகவோ அல்லது சற்று விலகி அமர்ந்திருந்தாலோ கேஸ் ஒரு பக்கமாக மட்டுமே அதிகம் வெளியேறி இப்படி எரியலாம். அதாவது பர்னர் மூடியை அதன் அச்சில் சரியாகப் பொருத்தாமல் விட்டால் எரிவாயு ஒரு பக்கமாக மட்டுமே வெளியேறி ஒரு பக்கம் மட்டுமே எரியும்.
ஈரப்பதம் இருப்பது:
பர்னரைத் தண்ணீரில் கழுவியவுடன் அதை முழுமையாக உலர்வதற்கு முன்பு அடுப்பில் பொருத்தி பற்ற வைத்தால், பர்னர் துளைகளில் இருக்கும் நீர்த்துளிகள் கேஸ் வருவதைத் தடுத்து சீரற்ற சுடரை உருவாக்கும். தண்ணீர் இருக்கும் துளைகளில் நெருப்பு சரிவர வராமல் விட்டு விட்டு எரிவதும், ஒரே சீராக தீ பரவி எரியாமலும் காணப்படும்.
கேஸ் டியூப் அல்லது ஜெட்டில் அழுக்கு (Jet Clogging):
பர்னருக்குக் கீழே எரிவாயுவைக் கொண்டு வரும் சிறிய துளை (Jet) அல்லது குழாயில் ஏதேனும் அடைப்பு அல்லது துரு இருந்தால் கேஸ் சீராக வராது.
பர்னர் தேய்மானம் அடைவது:
பல வருடங்கள் பயன்படுத்திய பழைய பர்னர்களில் உலோகம் தேய்ந்து போயிருக்கலாம் அல்லது பர்னரின் அடிப்பகுதி சமமாக இல்லாமல் வளைந்திருக்கலாம். இதனால் பர்னர் அசெம்பிளிக்கும் அடுப்புக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு பக்கவாட்டில் தீ கசியும்.
2. நாமே செய்யக்கூடிய சில எளிய தீர்வுகள்:
பர்னரை சரியாகப் பொருத்துதல்:
அடுப்பை சரி செய்வதற்கு முன்பு கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டரை கட்டாயம் ஆஃப் செய்து விடவும். அடுப்பு நன்றாகக் குளிர்ந்த பிறகு பர்னரை அதன் தட்டில் (Burner base) சரியாக, சமமாக உட்கார்ந்து உள்ளதா என்று பார்க்கவும். லேசாகக் கோணலாக இருந்தால் கழற்றி விட்டு நேராகச் சரியாக பொருத்தவும். லேசாக அசைத்து அது சரியான இடத்தில் சரியாகப் பொருந்தி இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
பர்னர் துளைகளை சுத்தம் செய்யவும்:
பர்னரைக் கழற்றி ஒரு ஊசி (சேஃப்டி பின்) அல்லது மெல்லிய கம்பி கொண்டு குத்தி உள்ளே இருக்கும் உணவு துகள்களை வெளியேற்றலாம். அடைத்துக் கொண்டிருக்கும் துளைகளைக் குத்தி சரி செய்யலாம். பர்னர் துளைகளை சுத்தம் செய்வதற்கு மரத்தாலான தீக்குச்சிகளைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவை துளைகளுக்குள் உடைந்து மேலும் அடைப்பை ஏற்படுத்தலாம்.
பல் துலக்கும் பழைய பிரஷ் கொண்டும் பர்னரின் மேற்பரப்பு மற்றும் இடுக்குகளில் உள்ள கறைகளை, அழுக்குகளை எடுத்து விடலாம்.
சோப்பு நீர் / வினிகர்:
பர்னரில் அதிக பிசுபிசுப்பு இருந்தால் வெதுவெதுப்பான சோப்பு நீரில் அல்லது வினிகர் மற்றும் பேக்கிங் சோடா கலந்த நீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு நன்றாகத் தேய்த்துக் கழுவவும். கழுவிய பர்னரை ஒரு உலர்ந்த துணியால் துடைத்து வெயிலிலோ அல்லது காற்றாடவோ நன்றாக உலர விடவும். ஈரப்பதம் முழுமையாக நீங்கிய பிறகே அதை அடுப்பில் பொருத்த வேண்டும்.
மேலே குறிப்பிட்ட அனைத்தையும் செய்த பிறகும் கேஸ் ஒரு பக்கமாகவே எரிகிறது அல்லது கேஸ் கசியும் வாசனை வருகிறது என்றால் நாமாகவே எதையும் செய்ய வேண்டாம். உடனடியாக ஒரு அங்கீகரிக்கப்பட்ட காஸ் மெக்கானிக்கை அழைத்து சரி செய்வதே பாதுகாப்பானது.
அடுப்புச் சிக்கல்களால் நேரும் சமையல் தடையையும் பாதுகாப்பின்மையையும் முன்கூட்டியே கண்டறிந்து தடுத்து நிறுத்துவர்.