

ஒவ்வொருவருக்கும் வீடு என்பது ஆனந்தம் விளையாடும் மைதானம். வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழையும்போது, கிடைக்கும் சுகம், சொர்க்கத்தையும் இரண்டாவது இடத்தில் வைக்கும்.
மகிழ்ச்சியை மலரச் செய்யும் வீடு சுத்தமாகவும், அழகாகவும் இருந்தால் இதமான இன்பம். சில இடங்களில் துளியூண்டு கவனமும், செயலில் அக்கறையும் போதும். வாருங்கள் ஒவ்வொரு ஏரியாவாக பயணிப்போம்.
முதலில், வரவேற்பறையில் நுழைவோம். பொதுவாக அங்கு ஷோகேஸ், ஷெல்ப் மற்றும் அலங்காரப் பொருட்கள் இருக்கும். அவற்றை ஆறு மாதத்திற்கு ஒரு முறையேனும் சுத்தம் செய்வது அவசியம்.
மாதம் ஒருமுறை கண்ணாடிக் கதவின் வெளிப்புறத்தை டிஷ்யூ பேப்பரால் சுத்தம் செய்வது அழகு. ஷோகேஸில் வைக்கும் பொருட்களுக்கிடையே போதிய இடைவெளி வேண்டும். நிறைய இல்லங்களில் ஷோகேஸ் பொம்மைகள் நெருக்கியவாறு இருக்கும். சில சமயங்களில் ஒன்றன் மேல் ஒன்று சவாரி செய்து கொண்டிருக்கும். குறைந்த அளவில் இருந்தாலும் பரவாயில்லை. பார்க்கும்போது சலிப்பு வரக்கூடாது.
சில வீடுகளில் ஷெல்பில் புத்தகங்களின் அணி வரிசையைக் காணலாம். ஷெல்பை சுத்தப்படுத்தும்போது, எடுத்த புத்தகங்களை திரும்ப அடுக்கும்போது, குழப்பம் வரலாம்.
எடுக்கும் முன்னே மொபைலில் வரிசையை போட்டோ எடுத்து வைத்துக் கொண்டால் ஈஸியாக அடுக்கி விடலாம். வாரம் ஒருமுறை ஷோபா, டீப்பாய், மின்விசிறி, டி.வியை சுத்தம் செய்ய வேண்டும்.
அடுத்து பெட்ரூம் போவோம். இன்று கட்டில் இல்லாத படுக்கையறை இல்லை. பெட்ஷீட்டை தினசரி உதறி விரித்து, மாதம் இருமுறை பெட்ஷீட், தலையணை உறைகளை மாற்றும் சுத்த சிகாமணியாயிருக்கலாம். உங்களிடம் ஒரேயொரு கேள்வி. அடிக்கடி கட்டிலின் அடியில் பெருக்கி, மாப் போடுவீர்களா? ஆம்… என்றால் சிறப்பு. இல்லை என்பது உங்கள் பதிலானால், உடனே பெட்ரூம் சென்று கட்டிலினடியில் பாருங்கள். தூசு கம்பளம் விரித்திருக்கும்.
நிறைய சேர்ந்துவிட்டால், மின்விசிறி சுற்றும்போது பறந்து தும்மல் விழக்கூடும்.
அடுத்து பூஜையறை. இங்கு நான் சொல்வது இரண்டே விஷயந்தான். ஒரே கடவுள் படம் ஐந்தாறு இருக்கும், வெவ்வேறு வடிவங்களில். அதற்கும் ஒரு பின்னணி தகவல் இருக்கும். இந்த முருகர் என் சித்தி கொடுத்தது. அந்த முருகர் பெரியப்பா தந்தது. மேலே இருக்கிற முருகர் கிரஹப்பிரவேசத்திற்கு வந்த பரிசு என்று. உறவுகளையும், நட்பையும் மதிப்பது நல்ல விஷயந்தான். அதை வேறு கோணத்தில் பண்ணலாமே!
முதல் சில மாதங்கள் சித்தியின் படம் இருக்கட்டும். மற்ற படங்களை செல்பில் வைக்கலாம். கொஞ்ச நாள் கழித்து, சித்தி தந்த கடவுள் படத்தை எடுத்து விட்டு பெரியப்பா கொடுத்ததை மாட்டி, சில தினங்களுக்குப் பின் பால் காய்ச்சும்போது வந்த பரிசை வைக்கலாம். மனசுக்கு நிறைவாக இருக்கும்.
அடுத்து, கண்டிப்பாக பூஜை அறையில் டிஷ்யூ பேப்பர்கள் இருக்கணும். விளக்கு ஏற்றுவதற்கு முன் திரியை தூண்டியதும், விரல்களில் ஒட்டும் எண்ணெய் பிசுக்கை துடைத்துக் கொள்ளலாம். சில சமயம் தவறுதலாக எண்ணெய் சிந்திவிட்டால் உடனே துடைப்பதால், கறையும், பிசுபிசுப்பும் படியாது.
அடுத்து டைனிங் ஹால். டைனிங் ரூம் உள்ள இல்லங்கள் இப்போ கம்மி. மெயின் ஹால் அல்லது கிச்சனில் கிடைக்கும் இடத்தில் டைனிங் டேபிளுக்கு இடம் ஒதுக்குகின்றனர். டேபிள் மேல் ஷீட் விரித்து, அதன் மேல் தட்டு, டம்ளர் வைக்க மேட் போடுவதும் வழக்கமாகிவிட்டது. இரண்டு செட் இருக்கட்டுமே.
போரடிக்காமல் சாப்பிட அடிக்கடி மாற்றிக் கொள்ளலாம். மாற்றும் போது, டேபிள், சேர்களையும் துடைக்க மறக்காதீர்கள். தினசரி டேபிளை துடைக்கும்போது, மேட்டையும் சுத்தம் செய்வது அவசியம். சமையலறைக்குள் நுழையுமுன் ஒரு விஷயம். அதைப் பற்றி பகிர்வதற்கு நிறையவே இருக்கிறது. இன்னொரு தடவை விலாவாரியாக பார்க்கலாம்.
கடைசியாக, டாய்லட். இப்பொழுது, பாத்ரூம் குழாய்கள் எல்லாம் டிரெயினேஜ் பைப் லைனுடன் இணைக்கப் பட்டுள்ளது. அதனால், ஏற்படும் துர்வாடையை தவிர்க்க நிறைய பெர்ப்யூம்கள் வந்துள்ளன. ஆரோக்கியம் கருதி வாங்குவது அவசியம். தரை பளபளன்னு இருக்க வேண்டியதில்லை. சுத்தமாக இருந்தால் போதும். ஈரப்பசையின்றி கவனமாக இருப்பது நல்லது. ரசனையுள்ளவர்கள் சுவரில் உறுத்தாத ஸ்டிக்கர் ஒட்டிப் பாருங்களேன். அதுவும் நல்லாத்தேன் இருக்கும்.
உங்கள் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் அதிக சிரமமின்றி, சின்னச் சின்ன கவனத்தின் மூலம் எப்போதும் சுத்தமாகவும், சொர்க்கம் போலவும் வீட்டு பராமரிப்பு நடைமுறை உத்திகளைப் பெறலாம்.