

புதிதாக வீடு கட்டுபவர்கள் தரை அமைப்பிற்கு (flooring) சரியான பொருளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். சிமெண்ட் தரை, டைல்ஸ் மற்றும் மார்பிள் ஆகிய மூன்றிற்கும் இடையே உள்ள முக்கிய வித்தியாசங்கள், நன்மைகள் மற்றும் குறைபாடுகளைத் தெரிந்து கொண்டால் தேர்வு செய்வதற்கு எளிதாக இருக்கும்.
சிமெண்ட் தரை:
பழங்காலம் தொட்டே பயன்படுத்தப்படும் இந்த முறை, தற்போது ரஸ்டிக் (Rustic) மற்றும் இன்டஸ்ட்ரியல் லுக் விரும்புவர்களால் நவீன வீடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரியமான மற்றும் மிகவும் சிக்கனமான ஒரு தேர்வாகும். தற்காலத்தில் 'ஆக்சைடு தரைகள்' (Oxide Flooring) மற்றும் 'பாலிஷ் செய்யப்பட்ட சிமெண்ட் தரைகள்' நவீன வீடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
இதன் நன்மைகள் என்று பார்த்தால் இதை அமைப்பதற்கான செலவு மிக மிகக் குறைவு. பராமரிப்பதும் எளிது. நீண்ட காலத்திற்கு உழைக்கும் தன்மை கொண்டது. அதிக எடையைத் தாங்கக் கூடியது. சுத்தம் செய்வதும் எளிது. முக்கியமாக கோடை காலத்தில் குளிர்ச்சியாக இருக்கும்.
குறைகள் என்று சொல்ல வேண்டுமென்றால், நாட்கள் செல்லச் செல்ல சிறிய விரிசல்கள் விழலாம். சரியான கலவையில் போடாவிட்டால் சிமெண்ட் துகள்கள் பெயரலாம். மார்பிள் அல்லது டைல்ஸ் போன்ற ஆடம்பரமான தோற்றம் கிடைக்காது. ஈரப்பதம் நீண்ட நேரம் இருந்தால் கறைகள் படியலாம்.
டைல்ஸ் தரை (Tiles - Ceramic / Vitrified):
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தேர்ந்தெடுப்பது டைல்ஸ் தான். இதில் விட்ரிஃபைட் மற்றும் செராமிக் என இரு வகைகள் பிரபலமாக உள்ளன.
இதன் நன்மைகள்:
நடுத்தரமான பட்ஜெட்டில் அமைக்கலாம். கறைகளை எளிதாகத் துடைத்து விடலாம் என்பதால் பராமரிப்பது மிகவும் எளிது. ஆயிரக்கணக்கான டிசைன்கள், நிறங்கள் மற்றும் அளவுகளில் கிடைக்கின்றன. கறைகள் ஒட்டாது, நீர் புகாது என்பதால் பராமரிப்பதும் எளிது. வேலை மிக வேகமாக முடியும். வீட்டின் உட்புறம், குளியலறை, முற்றம் என அனைத்து இடங்களுக்கும் தனித்தனி வகைகள் உள்ளன. நீர் உறிஞ்சும் தன்மை மிகக் குறைவு என்பவை இவற்றின் நன்மைகள்.
குறைகள்:
டைல்ஸின் மேல் கனமான பொருட்கள் விழுந்தால் உடைய வாய்ப்புள்ளது. உடைந்தால் அதே டிசைன் டைல்ஸ் மீண்டும் கிடைப்பது மிகவும் கடினம். டைல்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் (Grout) அழுக்கு சேரலாம். தரை மிகவும் வழுக்கக் கூடியதாக மாற வாய்ப்புள்ளது.
மார்பிள் தரை (பளிங்குக்கல்):
இது ஒரு இயற்கையான கல். வீட்டின் மதிப்பையும், அழகையும் பல மடங்கு உயர்த்தக் கூடியது.
நன்மைகள்:
வீட்டிற்கு மிக ஆடம்பரமான (Royal look), அழகிய இயற்கை எழில் கொஞ்சும் பிரம்மாண்டமான தோற்றத்தைத் தரக்கூடியது. இயற்கையான கல் என்பதால் ஒவ்வொரு கல்லும் தனித்துவமான நரம்பு (Veins) போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். முறையாக பராமரித்தால் தலைமுறைகள் கடந்தும் உழைக்கும்.
குறைகள்:
பொருளின் விலையும், அதனை பதிப்பதற்கான கூலியும் மிகவும் அதிகம். அமிலத்தன்மை கொண்ட பொருட்கள், உதாரணத்திற்கு எலுமிச்சை சாறு, வினிகர் போன்றவை பட்டால் கறை படிந்து விடும். சில வருடங்களுக்கு ஒரு முறை சீரான இடைவெளியில் பாலிஷ் செய்ய வேண்டி இருக்கும். குளிர்காலத்தில் தரை மிகவும் குளிர்ச்சியாக இருக்கும்.
குறைந்த பட்ஜெட் அல்லது மொட்டை மாடி, பார்க்கிங் போன்ற இடங்களுக்கு சிமெண்ட் தரை சிறந்தது. நவீன டிசைன்கள், குறைந்த பராமரிப்பு மற்றும் நடுத்தர பட்ஜெட்டிற்கு டைல்ஸ் சிறந்த தேர்வாகும். ஆடம்பரமான தோற்றம் மற்றும் வாழ்நாள் முழுமைக்குமான உழைப்பிற்கு பட்ஜெட் ஒரு தடையல்ல என்று நினைத்தால் மார்பிள் மிகச்சிறந்த தேர்வாக அமையும்.
வரவேற்பறை மற்றும் ஹால் போன்ற இடங்களுக்கு மார்பிள் அல்லது விட்ரிஃபைட் டைல்ஸ்கள் சிறந்த தோற்றத்தைத் தரும்.
கறை படியாத, வழுக்காத ஆன்டி-ஸ்கிட் டைல்ஸ்கள் சமையலறை மற்றும் குளியலறைக்கு மட்டுமே சிறந்தது.
கார் பார்க்கிங் மற்றும் மொட்டை மாடி போன்ற இடங்களுக்கு சிமெண்ட் தரை அல்லது பிரத்யேக பார்க்கிங் டைல்ஸ் ஏற்றது.
குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்ட நினைத்தால் ஆக்சைடு தரைகள் அல்லது சிமெண்ட் தரைகள் சிறந்தது. இவை பணத்தை அதிகம் மிச்சப்படுத்தும். எனவே வீடு கட்டும் பொழுது நமது பட்ஜெட் எவ்வளவு என்பதை வகுத்துக் கொண்டு அதன்படி சிமெண்ட் தரையா, டைல்ஸா அல்லது மார்பிளா என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். அதேபோல் ஒரே பொருளை வீடு முழுவதும் பயன்படுத்தாமல் ஹாலுக்கு மார்பிள், பெட்ரூம்களுக்கு டைல்ஸ், அவுட்டோர் பகுதிகளுக்கு சிமெண்ட் தரை எனக் கலந்து பயன்படுத்துவது பட்ஜெட்டையும் கட்டுப்படுத்தும், அழகையும் கூட்டும்.
உங்கள் வீட்டின் பட்ஜெட்டிற்கு ஏற்ப பணத்தை வீணாக்காமல், நீடித்து உழைக்கும் சரியான தரை அமைப்பைத் தேர்வு செய்ய உதவும் தெளிவான வழிகாட்டி.