
வீட்டு தண்ணீர் குழாய்களில் செய்யக்கூடாத விஷயங்கள் என்று சில உள்ளன. அவற்றைச் செய்யும்பொழுது குழாய்கள் பழுதடைய பெரும் வாய்ப்புள்ளது. சில பொதுவான வீட்டுப் பழக்கங்கள் பிளம்பிங் அமைப்பை சேதப்படுத்தும்.
1. கழிப்பறையில் கவனம்: கழிப்பறையில் பேப்பர்கள், நாப்கின்கள், டயப்பர்கள், வீணான உணவுப் பொருட்கள், செல்லப் பிராணிகளின் முடிகள் போன்ற கழிவுகளைப் போட்டு ஃபிளஷ் செய்யும்பொழுது குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி சரியாக பயன்படுத்த முடியாமல் போய்விடும். அதனை சரி செய்வதற்கு நேரமும், பண விரயமும் அதிகமாகும். எனவே, இம்மாதிரியான கழிவுப் பொருட்களை குப்பைத் தொட்டியில்தான் போட வேண்டும்.
2. சூடான நீரை குழாய்களில் விடுவது: சிலர் அடைப்பு ஏற்படும் பொழுது சூடான நீரை விட்டு அடைப்பை நீக்க முயற்சிப்பார்கள். இதனை அடிக்கடி செய்யும்பொழுது அதிக வெப்பம் காரணமாக குழாய்கள் விரிவடைந்து விரிசல்கள் உண்டாகலாம் அல்லது கசிவு ஏற்படலாம். எனவே, பிளாஸ்டிக் குழாய்களில் அடிக்கடி சூடான நீரை கொட்டுவது தவறு. அடைப்பு ஏற்படாமல் இருக்க இரவில் சிறிது ப்ளீச்சிங் பவுடரை போட்டு வைக்கலாம் அல்லது ஒரு வடிகட்டியை வைக்க. தேவையற்ற பொருட்கள் போய் அடைப்பை ஏற்படுத்தாது.
3. அதிக அழுத்தம் கொடுப்பது: சிலர் துவைத்து அலசிய கனமான துணிகளை குழாய்களில் நீர் வடிவதற்காக போட்டு வைப்பார்கள். இதனால் குழாய்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டு உடைந்து போகலாம் அல்லது கசிவு ஏற்படலாம். இதற்கு குழாய்களை சேதப்படுத்தும் அதிக கனமான பொருட்களை அதன் மீது வைக்காமல் இருப்பது நல்லது.
4. வீணான எண்ணெயை கொட்டுவது: சிலர் சமையல் செய்யும்பொழுது, குறிப்பாக பொரிக்கும்பொழுது மீதமான எண்ணெய்கள், கிரீஸ் மற்றும் பிற கொழுப்பு நிறைந்த பொருட்களை சிங்க்கில் கொட்டுவார்கள். இது குழாய்களில் படிந்து பிசுபிசுப்பையும், அடைப்பையும் ஏற்படுத்தும். இவற்றை ஊற்றும்பொழுது அது திரவமாக இருக்கலாம். ஆனால், கிரீஸ் மற்றும் கொழுப்புகள் குழாய்களுக்குள் குளிர்ச்சி அடையும் பொழுது கெட்டியாகி அடைப்புக்கு வழிவகுக்கும். இதனால் தண்ணீர் போகாமல் அடைத்துக் கொண்டு தேவையற்ற செலவு வைக்கும்.
5. அடைப்பை நீக்க கவனிக்க வேண்டிய விஷயங்கள்: சிலர் ரசாயன வடிகால் கிளீனர்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்வார்கள். இந்த ரசாயனம் குழாய்களை அரித்து கசிவை ஏற்படுத்தலாம். தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்ய சிலர் ரசாயன திரவங்களை உபயோகிப்பார்கள். இந்த கிளீனர்களில் மூலப் பொருளாக இருப்பது குளோரினாகும். இந்த குளோரின் தொட்டியில் உள்ள நெகிழ்வானதாக இருக்கவேண்டிய ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பாகங்களை கடினமாக்குகிறது. அத்துடன் தொட்டியில் உள்ள பிளாஸ்டிக் பாகங்களின் ஆயுளையும் குறைக்கிறது.
6. குழாய் கசிவுகள்: சிலர் வீடுகளில் குழாய்களில் இருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழுந்துகொண்டே இருக்கும். குழாயில் கசிவுகள் இருந்தால், சிறியதாக இருந்தாலும் கூட உடனடியாக கவனிப்பது அவசியம். சிறிய கசிவுகளை கவனிக்காமல் விட்டால் பெரிய கசிவுகளாக மாறி செலவு வைக்கும்.
7. அதிக நீர் அழுத்தம்: வழக்கத்தை விட அதிக நீர் அழுத்தம் நம் வீட்டின் குழாய்களுக்கு நல்லதல்ல. ஏனென்றால், அவை குழாய்கள் மற்றும் வால்வுகளில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தி காலப்போக்கில் தேய்ந்துபோகும் வாய்ப்பை ஏற்படுத்தும். எனவே, நீரின் அழுத்தத்தை குறைக்கும் வால்வுகளை பயன்படுத்துவது நல்ல பலனளிக்கும்.
8. வாட்டர் ஹீட்டர் பராமரிப்பு: வாட்டர் ஹீட்டர் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். கசிவு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மாற்றவும் செய்யலாம். வாட்டர் ஹீட்டரின் வெப்பநிலை மற்றும் அழுத்த நிவாரண வால்வை தவறாமல் சோதிப்பது அவசியம். வண்டல் மற்றும் பிற படிவுகளை அகற்றுவதற்குத் தேவையான அளவு தொட்டியை ஃபிளஷ் செய்வதும், ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை அனோட் கம்பியை மாற்றுவதும் தண்ணீரில் உள்ள அரிக்கும் கூறுகளை சரி செய்வதும் தொட்டியை பாதுகாக்கும்.
9. மரத்தின் வேர்கள்: செப்டிக் டேங்க்குகளுக்கு அருகில் வளரும் மரத்தின் வேர்கள் குழாய்களுக்கு ஊடாக செல்லக்கூடும். வேர்கள் குழாய்களில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்து குழாய்களுக்குள் நுழைந்து வளரக்கூடும். இது அடைப்பை ஏற்படுத்தலாம் அல்லது குழாய்களை சேதப்படுத்தலாம். இதன் மூலம் கழிவுநீர் ஓட்டத்தை தடை செய்யவும் கூடும். வேர் அடைப்பை தடுக்க குழாய்களை சுத்தம் செய்வதும், வேர்களை அகற்றுவதும் பயன் தரும்.
10. துருப்பிடித்த குழாய்கள்: துருப்பிடித்த குழாய்களை உடனடியாக மாற்றுவதும், அடைப்புகளை தவிர்ப்பதற்கு வடிகால்களில் ஒரு வடிகட்டியை வைப்பதும் தேவையற்ற வீண் செலவுகளை குறைப்பதுடன், நம் வீட்டு குழாய்களை பாதுகாக்கவும் பெரிய பட்ஜெட்டிலான பழுதுகளைத் தவிர்க்கவும் உதவும். இம்மாதிரியான தேவையற்ற வீண் பழக்கங்களை தவிர்த்தால் குழாய்களின் ஆயுளை நீட்டிக்கலாம். அத்துடன் பெரிய பழுதுகளையும் தவிர்க்கலாம். இதனால் தேவையற்ற செலவுகள் ஏற்படாது.