
ஆள் பாதி ஆடை பாதி என்போம். அது போல ஒரு பெரிய சர்க்கஸ் கூடாரத்தில் புலியின் வாயில் ரிங் மாஸ்டர் தலையை விடுவார். திகிலில் உறைந்து நிற்போம். அடுத்த காட்சியில்... தமது உடல் மொழியால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரிப்பால் கட்டிப்போடுவார்கள் சர்க்கஸ் கோமாளிகள். அவர்களின் பிரதான செய்கையே உடல்மொழிதான். அப்படிப்பட்ட உடல்மொழிகள் நேர்முக தேர்வுகளில் எப்படி பயன்படுகிறது. எப்படி பயன்படுத்த போகிறீர்கள் என்பதை விளக்கும் கட்டுரைதான் இது.
இந்த உடல்மொழி பற்றி தற்போதைய நமது தலைமைச் செயலாளர் திரு.வெ.இறையன்பு அவர்கள் ஒரு காணொளியில் விரிவாக எடுத்து சொல்லி இருப்பார்.
தன்னைத் தயார் படுத்துதல்:
நேர்முக தேர்வுக்கு செல்லும் முன்பு தேவையான சான்றிதழ்கள், அவர்கள் கேட்கும் பொழுது உடனுக்குடன் எடுத்து காண்பிக்கும் வகையில் தயார் நிலையில் வைத்திருத்தல் அவசியமாகும்.
அதே போல நீங்கள் நேர்முக தேர்வு அறைக்கு செல்லும் முன்பு படிக்கட்டுகளில் ஏறி செல்கின்றீர்கள் என்றால் மனதிற்குள் எத்தனைப் படிக்கட்டுகள் இருக்கின்றன என்று கூட குறித்து வைத்து கொள்ளலாம்.
மேலும் சுவர் கடிகாரத்தில் நேரம் சரியாக காட்டப்படுகின்றனவா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு சில நேர்முக தேர்வு அலுவலர்கள் நீங்கள் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்கிறீர்கள் என்று ”மிஸ்டர் நீங்கள் இந்த அறைக்கு எத்தனைப் படிக்கட்டுகள் கடந்து வந்தீர்கள் என்றும். சுவற்றில் மாட்டியுள்ள கடிகாரத்தில் நேரம் சரியாக காட்டுகின்றதா" என்றும் கேள்விகள் கேட்பதுண்டு. அப்படி நீங்கள் சரியான பதில் சொல்லி விட்டால் சூப்பர்தான்.
காத்திருத்தல்:
நேர்முக தேர்விற்கு பலர் வந்து காத்திருப்பார்கள். அதில் நீங்களும் ஒருவர் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அப்போது பதட்டப்படாமல், நேர்முக தேர்வு தொடர்பாக மின்னஞ்சல் ஏதேனும் பெறப்பட்டுள்ளதா என நிதானமாக சரி பார்த்து கொள்ளவும். சில நேரங்களில் கடைசி நேர மின்னஞ்சல்கள் அனுப்பி உங்களை சோதனை செய்யலாம். அதற்கு தயாராக இருத்தல் வேண்டும்.
வரவேற்பாளரிடம் சிறு புன்னகையை உதிர்த்து நட்பு மனப்பான்மையைக் காட்டிக் கொள்ளலாம். இது மனஇறுக்கத்தைத் தளர்த்த ஏதுவான வழிகளில் ஒன்றாகும்.
நிமிர்ந்து உட்காருதல்:
நாற்காலியில் அமரும் போது முதுகு கூன் போடாமல் நிமிர்ந்து உட்கார வேண்டும். அதே சமயத்தில் போலிஸ் தேர்வுக்கு மார்பை விறைப்பாக வைத்து கொள்வது போல வைத்து கொள்வதை தவிர்த்தல் வேண்டும். ஒரு சிலர் டேபிளில் உள்ள பேப்பர் வெயிட்டை வைத்து விளையாட்டுத்தனமாக விளையாடி வில்லங்கத்தைத் தேடிக் கொள்வார்கள். அவ்வாறு செய்வதை அறவே தவிர்க்க வேண்டும்.
திறந்த கைகள்:
வீட்டில் இருந்து புறப்படும் போதே எல்லா கவலைகளையும் களைந்து விட்டு திறந்த மனதோடு நேர்முகத் தேர்விற்கு செல்ல வேண்டும்.
அத்தோடு கைகளைத் திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் கைகளை இறுக்கமாக மூடி வைத்திருந்தால் நீங்கள் உங்கள் மனஇறுக்கத்தை மறைக்க இந்த யுக்தியைக் கையாளுகின்றீர்கள் என நேர்முக தேர்வு நடத்துபவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள்.
நேருக்கு நேரான பார்வை:
உங்களை நீங்கள் நேர்முக தேர்வு நடத்துபவர்களிடம் அறிமுகப்படுத்தும் போது கைக்குலுக்குவீர்கள்; அப்போது உங்கள் பார்வை அவரின் கண்களை நேருக்கு நேர் பார்த்து அறிமுகப்படுத்தி கொள்வதோடு சிறு புன்னகையும் பூக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், கைக்குலுக்கும் போது நீங்கள் வேறு எங்கோ பார்வை செலுத்தினால் நிச்சயம் நீங்கள் நிராகரிக்கப்படுபவர்களில் ஒருவராக இருப்பீர்கள்.
பொறுப்பானவர்:
உங்களை நீங்களே பொறுப்புள்ளவர் என காட்டிக் கொள்ள வேண்டும். உங்கள் உடல்மொழிகளில் சிறிது வேறுபாடு இருந்தால் கூட பொறுப்பற்றவர் என காட்டிக் கொடுத்து விடும்.
கைக்குலுக்குதல்:
நேர்முகத் தேர்வு அலுவலரின் கைகளை சில நிமிடங்கள் குலுக்கினாலே போதுமானது. கைகளில் மென்மைத் தன்மை அவசியம் இருத்தல் வேண்டும். நீங்கள் அந்த நிறுவனத்திற்கு தேர்ந்தெடுக்கும் வரை நீங்கள் மூன்றாம் நபர்தான். தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் அவருக்கு நெருக்கமாவீர்கள் அப்போது உங்கள் கைக்குலுக்கலில் மாறுபாடு இருந்தால் பரவாயில்லை.
கால்கள்:
அமரும் பொழுது இரு கால்களையும் நேராக வைத்திருத்தல் வேண்டும். உங்கள் ஒரு காலை இன்னொரு காலோடு சேர்த்து எக்ஸ் வடிவில் வைத்திருப்பது நீங்கள் அசௌகரியமாக உள்ளீர்கள் என்பதைக் காட்டி கொடுக்கும் உடல்மொழியாகும்.
பதட்டப்படுதல்:
அழைப்பு வந்து நேர்முக தேர்வு அறைக்குள் நுழைந்து அமரும் போது கால்களை ஆட்டிக் கொண்டே இருத்தல் டேபிளின் மேல் கைகளை வைத்து முட்டுக் கொடுப்பது போல இருத்தல் ஆகியவை நீங்கள் பதட்டமாக இருப்பதாகவும், அவற்றை மறைக்க இப்படி செய்கிறீர்கள் எனவும் அவர்கள் புரிந்து கொள்ள வழிவகுக்கும் உடல் மொழியாகும்.
கைகளைத் தளர்வாக வைத்திருத்தல்:
கைகளைத் தளர்வாக வைத்து கொள்ள வேண்டும். கண்கள் நேருக்கு நேர் பார்வையாக இருத்தல் நேர்முக தேர்வுகளில் வெற்றி பெற உதவி செய்யும் சிறந்த உடல்மொழிகளாகும்.
அதே போல காத்திருக்கும் அறையில் அமர்ந்திருக்கும் போது ஒளிந்து கொண்டு அமர்வது போல அல்லாமல் அனைவரின் பார்வையில் படும்படி அமர்தல் சிறப்பாகும்.
தனிப்பட்ட பொருட்கள்:
உங்கள் பிரிப்கேஸ், பர்ஸ் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்திருத்தல் வேண்டும்.
ஆவணங்கள், சான்றிதழ்கள் தேர்வாளர்களுக்கு உடனுக்குடன் பார்வையிட வசதியாக கையில் வைத்திருக்க வேணடும். பிரிப் கேஸில் வைத்து விட்டு அவர்கள் கேட்கும் போது தேடிக் கொண்டிருக்க கூடாது.
உரையாடல்:
நீங்கள் உரையாடும் போது கண்ணியமாக உரையாட வேண்டும். உங்கள் உரையாடலின் ஒவ்வொரு சொற்களும் உங்களைக் காட்டும் கண்ணாடி ஆகும்.
காலாற நடத்தல்:
காத்திருக்கும் அறையில் அமர்ந்துள்ள போது சிறிது காலாற நடக்கலாம். இவை நேர்முக தேர்வின் பயத்தையும் படபடப்பையும் சற்றே குறைக்கும் உடல்மொழியாகும்.
மூச்சு விடுதல்:
நேர்முக தேர்வு அறைக்குள் செல்லும் முன்பு நீங்கள் பதட்டமாக இருப்பதாக உணர்ந்தால் மூச்சை நன்கு இழுத்து பின்பு மூச்சை வெளியே போவதைக் கவனித்தால் நீங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவீர்கள்.
பொறுப்பாக பதில் சொல்லுதல்:
நேர்முக தேர்வு அலுவலர்கள் கேட்கும் கேள்விகளை உள்வாங்கி அவற்றுக்கு சிறந்த முறையில் பொறுப்பாக பதில் சொல்ல வேண்டும். சில நேரங்களில் அவர்களின் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்றால் நேர்மையாக ”தெரியவில்லை” என தெளிவாக சொல்லுதல் வேண்டும். அதை விடுத்து "அது வந்து சார்" என இழுத்து இழுத்து பேசுதல் சரியான உடல்மொழி அல்ல.
இத்தனை உடல்மொழிகளையும் பின்பற்றி நேர்முக தேர்வுகளில் வெற்றி கொள்வீர்கள். அந்த நிறுவனத்தில் சேர்ந்து வளர்ந்து நீங்களும் நேர்முக தேர்வு அலுவலர் ஆகலாமே!