பழைய டயர் வெடிக்கும் அபாயம்: டயர் வயது கண்டறியும் முறை இதோ!

வாகன டயரின் பக்கவாட்டில் உள்ள 4 இலக்க எண்ணை வைத்து டயர் வயது என்ன என்பதை சுலபமாகக் கண்டறியலாம். பழைய டயர்களால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் பராமரிப்பு வழிகாட்டுதல் இதோ.
டயர் வயது tyre age calculator
டயர் வயது tyre age calculator
கிரி கணபதி

கிரி கணபதி, 8 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட எழுத்தாளர். Quora போன்ற தளங்களில் எழுதிய அனுபவம் உண்டு.. வீடியோ, பாட்காஸ்ட் வெளியிட்ட அனுபவமும், AI கருவிகளை கையாளும் திறனும் கொண்டவர். ஆரோக்கியம், தன்னம்பிக்கை, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வுப்பூர்வமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

வாகனங்களுக்குப் புதிய டயர்களை மாற்றும்போதோ அல்லது பயன்படுத்தப்பட்ட வாகனம் வாங்கும்போதோ நாம் கவனிக்கத் தவறும் முக்கியமான விஷயம் டயர் வயது பற்றிய விவரம். கடைகளில் விற்கப்படும் உணவு, மருந்துப் பொருட்களைப் போலவே வாகன டயர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே முழுமையான பயன்பாட்டுத் திறன் இருக்கும். 

டயரின் வெளிப்பக்க அமைப்பைப் பார்ப்பதற்குப் புதிது போலத் தெரிந்தாலும், காலப்போக்கில் அதன் ரப்பர் தன்மையை இழந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதை மிக எளிதாக டயரின் பக்கவாட்டில் உள்ள நான்கு இலக்க எண்ணை வைத்து வாகன ஓட்டிகளே நேரடியாகத் தெரிந்துகொள்ள முடியும்.

குறியீட்டைப் புரிந்துகொள்ளும் முறை!

ஒவ்வொரு டயரிலும் அது சரியாக உற்பத்தி செய்யப்பட்ட காலகட்டம் ஒரு குறிப்பிட்ட எண்களாகப் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த நான்கு இலக்க எண்ணில் உள்ள முதல் இரண்டு எண்கள் ஆண்டின் எந்த வாரம் என்பதைக் குறிக்கும். ஒரு ஆண்டில் உள்ள 01 முதல் 52 வரையிலான வாரங்களில் ஒன்றைக் காட்டும். 

அதேபோல கடைசி இரண்டு எண்கள் எந்த ஆண்டில் அந்த டயர் தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கும். உதாரணமாக உங்களின் டயரில் 3025 என்ற எண் பொறிக்கப்பட்டிருந்தால், அந்த டயர் 2025 ஆம் ஆண்டின் 30 ஆவது வாரத்தில் உற்பத்தியானது என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.

டயர் வயது tyre age calculator
டயர் வயது tyre age calculator

இந்த எண்களைக் கண்டுபிடிக்கும் வழி?

டயரின் வெளிப்பக்கத்தில் DOT என்று தொடங்கும் ஒரு நீளமான ஆங்கில எழுத்துகள் மற்றும் எண்களின் தொகுப்பு அச்சிடப்பட்டிருக்கும். அதன் கடைசியில் ஒரு சிறிய நீள்வட்டக் கட்டத்திற்குள் இந்த நான்கு இலக்க எண் தனித்துக் காட்டப்பட்டிருக்கும். சில கார்கள் அல்லது இருசக்கர வாகனங்களில் இந்த எண்கள் டயரின் வெளிப்பக்கமாக இல்லாமல், வாகனத்தின் உட்புறம் பார்த்தவாறு அமைந்திருக்கலாம். 

இதையும் படியுங்கள்:
பேனா மூடியில் இருக்கும் இந்தச் சிறிய துளைக்கு பின்னால் இவ்வளவு பெரிய ஆபத்துத் தடுப்பு உள்ளதா?
டயர் வயது tyre age calculator

அதனால் வெளிப்பக்கம் அந்த எண் தெரியவில்லை என்றால், டயரின் உள்பக்கத்தைச் சற்று கவனித்துப் பார்ப்பது நல்லது. புதிய டயர்களைக் கடைகளில் வாங்கும்போதும் இந்த எண்ணைச் சரிபார்ப்பது மிகவும் முக்கியம். சில கடைகளில் பல மாதங்களுக்கு முன்பு உற்பத்தியான பழைய டயர்களை தள்ளுபடி விலையில் விற்கக்கூடும். எனவே குறைந்த விலையில் எங்காவது அவற்றை விற்பனை செய்தால் கவனமாக பார்த்து வாங்கவும். புதிய டயர்களைக் கடைகளில் வாங்கும் போது, அதிகபட்சம் ஓராண்டுக்குள் உற்பத்தியான டயர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பது நல்லது.

கவனிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்!

வண்டியை அதிகம் பயன்படுத்தாமல் வீட்டிலேயே நிறுத்தி வைத்திருந்தாலும் டயர் வயது அதிகரிக்கும்போது அதன் ரப்பர் கடினமாகத் தொடங்கிவிடும். மெல்ல மெல்ல அதில் கண்ணுக்குத் தெரியாத சிறு விரிசல்கள் ஏற்பட்டு, வளைந்து கொடுக்கும் தன்மை குறைய ஆரம்பிக்கும். இப்படிப்பட்ட பழைய டயர்களுடன் வேகமாகச் செல்லும்போது அவசரமாகப் பிரேக் பிடித்தால், வாகனத்தின் பிடிமானம் குறைந்து வழுக்கிக்கொண்டு செல்லும் அபாயம் உண்டு. 

இதையும் படியுங்கள்:
பள்ளிக்குச் செல்ல குழந்தைக்கு பயமா? மௌனமாகத் தாக்கும் ‘புல்லிங்’ ஆபத்து: தப்பிப்பது எப்படி?
டயர் வயது tyre age calculator

அதோடு கோடைக் காலங்களில் நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து பயணம் செய்யும்போது அதிக வெப்பம் காரணமாக டயர் வெடித்துச் சிதறும் வாய்ப்பும் உள்ளது. அதனால் டயரின் வெளிப்பக்கத் தேய்மானம் குறைவாக இருந்தாலும்கூட, உற்பத்தி செய்யப்பட்ட தேதியில் இருந்து ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டால் தகுந்த நிபுணர்களிடம் காட்டிப் புதிய டயர்களை மாற்றுவது பாதுகாப்பானது.