

அந்தக் காலத்தில் மண் பாத்திரத்தில் சமைத்த காலம் மலையேறி இன்று நான் ஸ்டிக், காப்பர் பாட்டம், பிளாக் வெசல் என விதவிதமான வெரைட்டிகளில் பாத்திரங்கள் சமையலறையை அலங்கரிக்கின்றன. ஆனால் எவராலும் தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பது முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட எவர்சில்வர் பாத்திரம் என பேச்சு வழக்கில் குறிப்பிடப்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள்தான்.
அனைத்திலும் கலப்படம் புகுந்து விட்ட இந்தக் காலத்தில் இதிலும் இரும்பு கலந்த ஸ்டெயின்லெஸ் பாத்திரங்கள் மற்றும் உறுதியற்ற தன்மை கொண்டவைகள் விற்பனைக்கு உள்ளது. ஆனால் இவைகளைத் தவிர்த்து நல்ல தரமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரம் வாங்குவது மிகவும் முக்கியம். ஏனெனில் நாம் தினமும் சமைக்கவும், உணவைச் சேமிக்கவும் பயன்படுத்தும் பாத்திரத்தின் தரம் என்பது நமது நலனைப் பேணும் உணவுப் பாதுகாப்புடன் தொடர்புடையது.
பொதுவாக நல்ல தரமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களில் சமைப்பது பாதுகாப்பானது. இருப்பினும் நீண்ட நேரம் அதிக அமிலத்தன்மை கொண்ட உணவுகளைச் சமைக்கும்போது சிறிதளவு நிக்கல், குரோமியம் உணவில் கலக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக புதிய பாத்திரங்களில் இந்த வெளியேற்றம் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கலாம் என்பதை கவனிக்க வேண்டும்.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் சமையலறையில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும் அனைத்து ஸ்டீல் பாத்திரங்களும் ஒரே தரத்தில் தயாரிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 304, 202, 316 போன்ற எண்கள் பாத்திரத்தின் தரத்தையும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள உலோகக் கலவையையும் குறிக்கின்றன.
எப்படி தரமானது என்பதை அறியலாம்? இந்த எண்கள் எதைக் குறிக்கின்றன? எது சிறந்தது என்பதைப் பார்ப்போம். முதலில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என்றால் என்ன என்பதை அறிவோம்.
இரும்புடன் துருப்பிடிப்பதைத் தடுக்கும் குரோமியம், அரிப்பை எதிர்க்கும் தன்மையையும் உறுதித்தன்மையையும் அதிகரிக்கும் நிக்கல் போன்ற உலோகங்களைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் உலோகக் கலவைதான் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களின் நன்மைகள் அதிகம். இதில் சமைப்பதால் உணவின் சுவையையும் மணத்தையும் எளிதில் மாற்றாது. எளிதில் துருப்பிடிக்காது. உடையாமல் நீண்டகாலம் உழைக்கும். மேலும் சுத்தம் செய்வது எளிது. அத்துடன் மறுசுழற்சி செய்யும் வசதியுடன் சரியாக பராமரிக்கும் போது பல ஆண்டுகள் பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்டீல் பாத்திரங்களின் தீமைகள் என்று பார்த்தால் தரம் குறைந்த ஸ்டீல் பாத்திரங்களினால் ஏற்படும் துரு மற்றும் மெல்லிய பாத்திரங்கள் எளிதில் வளைந்துவிடலாம். அதேபோல் வெப்பத்தை எல்லாப் பாத்திரங்களும் சமமாகக் கடத்தாமல் அடிபிடிக்கும் வாய்ப்பு உண்டு. இதனால் உணவின் ருசியும் குறையும். குறிப்பாக நிக்கல் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சில வகை ஸ்டீல் பாத்திரங்கள் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.
சரி..இப்போது ஸ்டீல் பாத்திரத்தில் 304 என்றால் என்ன என்பதை அறிவோம்.
304 என்பது ஒரு குறிப்பிட்ட வகை ஸ்டெயின்லெஸ் ஸ்டீலின் தரக் குறியீடு (Grade). இதில் 18% குரோமியம் , 8% நிக்கல் கலந்து இருப்பதால் இதை 18/8 ஸ்டீல் என்றும் அழைப்பார்கள். இதன் சிறபம்சங்கள் நிறைய. குறிப்பாக இந்தப் பாத்திரங்களுக்கு துருப்பிடிப்பதை எதிர்க்கும் திறன் அதிகம். அமிலத்தன்மை கொண்ட உணவுகளுடன் பயன்படுத்துவதற்கு ஏற்றது.எளிதில் கறை மற்றும் அரிப்பு ஏற்படாது. உணவு சேமிப்புக்கும் சமைப்பதற்கும் ஏற்றது. முறையாகப் பராமரித்தால் நீண்ட காலம் உழைக்கும்.
எனவே சமையலறைப் பாத்திரங்களுக்கு 304 ஸ்டீல் சிறந்த தேர்வுகளில் ஒன்று.
ஸ்டீல் பாத்திரத்தில் 202 என்றால் என்ன?
202 என்பதும் ஒரு வகையான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தரமாகும். இதில் குரோமியம் சுமார் 16–18 சதவீதமும் குறைந்த அளவு நிக்கலும் அதிக அளவு மாங்கனீஸ்ம் உள்ளது. நிக்கலுக்குப் பதிலாக மாங்கனீஸ் பயன்படுத்தப்படுவதால் இதன் உற்பத்திச் செலவு குறைகிறது என்பதால் 304 ஸ்டீலைவிட விலை குறைவு.
சாதாரண பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கலாம். ஆனால் ஈரப்பதம் மற்றும் உப்புத்தன்மை அதிகமுள்ள சூழலில் துருப்பிடிக்கும் வாய்ப்பு அதிகம். நீண்ட கால அரிப்புத் தடுப்பு திறன் 304-ஐவிடக் குறைவு.
அடுத்து 316 என்பது இரும்பு, குரோமியம், நிக்கல் மற்றும் மாலிப்டினம் ஆகிய உலோகங்கள் கலந்த ஒரு வகை ஸ்டீல். ஸ்டீல் பாத்திரத்தில் 316 உயர்தர துருப்பிடிக்காத எஃகு (Stainless Steel) வகையைக் குறிக்கிறது. இது 304 ஸ்டீலைவிட சில விஷயங்களில் சிறந்ததாக கருதப்படுகிறது.
இதன் தோராயமான வேதியியல் கலவையாக,
இரும்பு -அடிப்படை உலோகம்
குரோமியம் – 16–18%
நிக்கல் – 10–14%
மாலிப்டினம் – 2–3%.ஆகியவை குறிப்பிடப்படுகிறது. இதில் உள்ள மாலிப்டினம் துரு மற்றும் அரிப்பை எதிர்க்கும் திறனை அதிகரிக்கிறது.
316 ஸ்டீலில் சமைப்பதால் துருப்பிடிக்கும் வாய்ப்பு குறைவு. உப்பு கலந்த உணவுகளால் ஏற்படும் அரிப்பை நன்றாக எதிர்க்கும். மேலும் நீண்டகாலப் பயன்பாட்டுக்கு ஏற்றது என்பதால் இவ்வகை பாத்திரங்கள் உணவுத் தயாரிப்புத் தொழில்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் 316 ஸ்டீலுக்கும் அரிப்பு ஏற்படவே வாய்ப்பில்லை என்றும் சொல்ல முடியாது.
ஆக 304 எண் அன்றாட சமையலுக்கு மிகவும் நல்ல தேர்வு. 316 கூடுதல் அரிப்பு எதிர்ப்பு தேவைப்படுபவர்களுக்கு நல்ல தேர்வு. 202 எண் 304, 316 ஆகியவற்றைவிட குறைந்த அரிப்பு எதிர்ப்பைக் கொண்டது என தெரிந்து கொள்ளலாம்.
நல்ல ஸ்டீல் பாத்திரத்தை வாங்கும்போது கவனிக்க வேண்டிய டிப்ஸ்கள்..
304 அல்லது 316 தரத்தைக் குறிப்பிடும் நம்பகமான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும். பாத்திரத்தின் அடிப்பகுதி தடிமனாக இருக்கிறதா எனப் பார்க்கவும். ISI அல்லது பொருத்தமான தரச் சான்றிதழ் உள்ளதா எனச் சரிபார்க்கவும். உணவு தயாரிப்புக்கான முழுத்தரத்தில் உள்ளதா என உறுதிப்படுத்தவும். வெறும் பளபளப்பைக் கண்டு தரத்தை முடிவு செய்ய வேண்டாம். குறிப்பாக நம்பகமான கடைகளில் வாங்குவது நல்லது.
மேலும் வாங்கும்போது உற்பத்தியாளரிடம் Material Test Certificate கேட்பது சிறந்தது. இறுதியாக வீட்டு சமையலுக்குப் பாத்திரம் வாங்குகிறீர்கள் என்றால் 304 போதுமானது. 316 வாங்கினால் கூடுதல் அரிப்பு எதிர்ப்பு கிடைக்கும்; ஆனால் அதற்காக அதிக விலை கொடுக்க வேண்டிய அவசியம் இருந்தால் மட்டும் வாங்கலாம். அதிக விலை கொடுத்து வாங்குவதைவிட உணவு படும் உட்புறம் 304 ஸ்டீலாக இருப்பதை உறுதிப்படுத்துவது முக்கியம்.
தினமும் நாம் பயன்படுத்தும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களின் தரம் மற்றும் அதன் எண்களின் அர்த்தத்தை அறிந்து, ஆரோக்கியமான சமையல் முறையை உறுதி செய்யும் தெளிவு கிடைக்கும்.