

நம்மில் பலரும் சமையலறையை சுத்தமாக வைக்க தினமும் பாடு படுகிறோம். பாத்திரங்களை சோப்பு போட்டு கழுவி, அடுப்பங்கரையைத் துடைத்து சுத்தமாக வைத்திருப்போம். ஆனால், நாம் பாத்திரங்களைக் கழுவப் பயன்படுத்தும் அந்த சிறிய ஸ்பான்ஜ் மீது நமது கவனம் செல்லுவதில்லை “பாத்திரம் கழுவுறதுதானே, அது பாட்டுக்குக் கழுவிட்டுக் கிடக்கு” என்று சாதாரணமாக விடாதீர்கள். சமையலறையில் நாம் செய்யும் மிகப்பெரிய ஆரோக்கியக் கேடுகளில் ஒன்று, பழைய ஸ்பான்ஜை நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்துவதுதான். ஒரு ஸ்பான்ஜை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தூக்கி எறிய வேண்டும்? என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
அதில் இருக்கும் வியப்பளிக்கும் உண்மை: நமது வீட்டு டாய்லெட் சீட்டை விட, நாம் பாத்திரங்களைக் கழுவப் பயன்படுத்தும் ஸ்பான்ஜில்தான் லட்சக் கணக்கில் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்களும் கிருமிகளும் வாழ்கின்றன! ஸ்பான்ஜ் எப்பொழுதும் ஈரப்பதத்துடனும், சமையலறையின் மிதமான வெப்பத்துடனும் இருப்பதால், அது கிருமிகள் பெருகுவதற்கு மிகச்சரியான இடமாக மாறுகிறது.
நாம் பாத்திரங்களைக் கழுவும்போது, அதில் ஒட்டியிருக்கும் நுண்ணிய உணவுத் துகள்கள் ஸ்பான்ஜின் துளைகளுக்குள் மாட்டிக் கொள்ளும். இது பாக்டீரியாக்கள் உருவாக காரணமாகிறது. சால்மோனெல்லா (Salmonella), இ.கோலை (E. coli) போன்ற உணவு நச்சுத் தன்மையை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான கிருமிகள் இதில் பெருகி வாழ்கின்றது. நாம் எத்தனை முறை சோப்பு போட்டுக் கழுவினாலும், இந்த கிருமிகளை ஸ்பான்ஜில் இருந்து முழுமையாக வெளியேற்ற முடியாது என்பதே உண்மை.
எத்தனை நாளுக்கு ஒருமுறை ஸ்பான்ஜை மாற்ற வேண்டும்?
விஞ்ஞான ரீதியாகவும், சுகாதார நிபுணர்களின் பரிந்துரைப்படிவம், பாத்திரம் கழுவும் ஸ்பான்ஜை அதிகபட்சம் 1 முதல் 2 வாரங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக தூக்கி எறிந்துவிட்டு புதியது மாற்ற வேண்டும். நீங்கள் கறி, மீன், முட்டை போன்ற அசைவப் பொருட்களைக் கழுவும்
பாத்திரங்களைத் தொடர்ந்து தேய்க்கிறீர்கள் என்றால், இன்னும் சீக்கிரமே, அதாவது ஒன்றிலிருந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே ஸ்பான்ஜை மாற்றுவது நல்லது. சிலர் சுடுநீரில் கழுவி வெயிலில் காயவைத்து பயன்படுத்துவார்கள். அதில் பாக்டீரியாக்கள் அழிவதில்லை. ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன என்றால், தீவிரமாகப் பெருகியிருக்கும் வலிமையான பாக்டீரியாக்கள் இந்த வெப்பத்தைத் தாங்கி உயிர் வாழும் திறன் கொண்டவை. எனவே, தற்காலிகமாக கிருமிகளைக் கொல்வதை விட, சரியான நேரத்தில் ஸ்பான்ஜை மாற்றுவதுதான் பாதுகாப்பான வழி.
ஸ்பான்ஜைப் பாதுகாக்க சில எளிய வழிகள்:
பாத்திரம் கழுவி முடித்தவுடன் ஸ்பான்ஜில் உள்ள தண்ணீரை முழுமையாகப் பிழிந்துவிட்டு, காற்று புகக்கூடிய உலர்ந்த இடத்தில் வைக்கவும். ஈரத்தோடு அடைத்து வைப்பதைத் தவிர்க்கவும். வெஜிட்டேரியன் சமைக்கும் பாத்திரம், நாண்வெஜி சமைக்கும் பாத்திரம் கழுவ, என்று தனித்தனி ஸ்பான்ஜ் வைத்திருப்பது சிறந்தது. மேலும் அடுப்பு மேடையைத் துடைக்க தனி ஸ்பான்ஜைப் பயன்படுத்தலாம்.
சுமார் 30 வருடத்திற்கு முன்னால் பாத்திரம் தேய்க்க அதிகமாக ஸ்பான்ஜ் பயன்படுத்துவதில்லை. தேங்காய் சவரிதான் பயன்படுத்துவோம். அதையும் தினமும் புதிய சவரி எடுத்து அதனை பிரித்து மிருதுவாக்கி பயன்படுத்தி விட்டு குப்பையில் எறிந்து விடுவோம்.
அதை நினைவு படுத்தி பார்க்கும் போது இப்பொழுது நாம் செய்வது எவ்வளவு பெரிய தவறு என்பதை புரிந்து செயல்பட வேண்டும். அதனால் முடிந்தவரை ஸ்பான்ஜிற்குப் பதிலாக பிளாஸ்டிக் அல்லது சிலிகான் பிரஷ்களைப் பயன்படுத்தலாம். இவை ஸ்பான்ஜை விட சீக்கிரம் கிருமிகளைத் தேக்கி வைக்காது.
நம்ம வீட்டின் ஆரோக்கியம் நாம் சமைக்கும் உணவில் மட்டுமல்ல, அந்த உணவைச் சமைக்கப் பயன்படுத்தும் பாத்திரங்களைச் சுத்தப்படுத்தும் முறையிலும் அடங்கியுள்ளது. சில ரூபாய்கள் மிச்சமாவதற்காக பழைய ஸ்பான்ஜை மாதக்கணக்கில் வைத்துக் பயன்படுத்தாதீர்கள். அது ஒட்டுமொத்த குடும்பத்தின் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தாக முடியும். இன்றே உங்கள் சமையலறை ஸ்பான்ஜை ஒருமுறை பாருங்கள். அது மாற்ற வேண்டிய கட்டத்தில் இருந்தால், யோசிக்காமல் குப்பையில் வீசுங்கள்.
சமையலறையில் நாம் தினமும் செய்யும் ஒரு சிறிய தவறு, நம் குடும்பத்தின் ஆரோக்கியத்தையே கேள்விக்குறியாக்குகிறது என்பதை நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? நாம் பாத்திரம் கழுவப் பயன்படுத்தும் ஸ்பான்ஜை மாதக்கணக்கில் தொடர்ந்து பயன்படுத்துவது சமையலறையில் நாம் செய்யும் மிகப்பெரிய ஆரோக்கியக் கேடுகளில் ஒன்றாகும்.