

பிள்ளைகள் தவறு செய்தால் மற்றவர்கள் முன்னிலையில் கண்டிக்காமல் தனியாக அழைத்து கண்டிப்பதும், அறிவுரை கூறுவதும் ஆரோக்கியமான குழந்தை வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒரு வாழ்வியல் நெறியாகும். குழந்தைகள் செய்யும் தவறுகளை திருத்துவதற்கு அவர்களை தண்டிப்பதை விட திருத்துவதே முக்கியம்.
1. தனியாக அழைத்துச் சென்று மென்மையாகப் பேசுவது:
உறவினர்கள், நண்பர்கள் என நான்கு பேர் முன்னிலையில் குழந்தைகளைத் திட்டவோ, தண்டிக்கவோ செய்வது அவர்களின் சுயமரியாதையை பாதிக்கும். இது அவர்களுக்குப் பொதுவெளியில் தாழ்வு மனப்பான்மையையும், அவமான உணர்வையும் ஏற்படுத்தும்.
தவறு செய்யும்போது அமைதியாக இருந்துவிட்டு பின்னர் தனியாக அழைத்து அன்பாக எடுத்துச் சொல்லி புரிய வைப்பதே சிறந்தது. இதன் மூலம் அவர்கள் தங்கள் தவறை எளிதில் ஒப்புக்கொள்வதுடன் திரும்பவும் அதே மாதிரியான தவறுகளைச் செய்யாமல் இருப்பார்கள்.
தண்டனை என்பது குழந்தைகளை பயமுறுத்தவோ அல்லது காயப்படுத்தவோ அல்ல. மாறாக அவர்கள் செய்த தவற்றை உணர வைப்பதற்கே ஆகும். தவறுகளை சரி செய்யவே தண்டனைகள் இருக்க வேண்டுமே தவிர, குழந்தைகளை காயப்படுத்துவதற்காக அல்ல.
2. தவறுக்கான காரணத்தைக் கண்டறிவது:
குழந்தைகள் செய்யும் தவற்றுக்கான காரணத்தை புரிந்து கொள்ள முயல வேண்டும். அவர்கள் ஏன் அம்மாதிரியான தவறை செய்தார்கள் என்பதற்கான பின்னணியை புரிந்து கொள்ள முயல வேண்டும். காரணமே தெரியாமல் தண்டிப்பதைவிட அவர்கள் பேசுவதை முதலில் காது கொடுத்து கேட்க வேண்டும்.
அதன் பின்னணியில் உள்ள சூழல் அல்லது ஆணிவேர் எது என்பதைப் பெற்றோர் முதலில் ஆராய வேண்டும். பள்ளியிலோ அல்லது நண்பர்கள் வட்டாரத்திலோ அவர்களுக்கு ஏதேனும் மன அழுத்தம் இருக்கிறதா என்பதைப் பொறுமையாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கோபம், பயம் அல்லது கவன ஈர்ப்பு போன்ற காரணங்களால் அவர்கள் தவறு செய்ய நிகழலாம். எனவே அவர்கள் தரப்பு நியாயத்தையும் பொறுமையாக கேட்க வேண்டியது அவசியம்.
3. கோபத்தைக் கட்டுப்படுத்துவது:
பிள்ளைகள் தவறு செய்தவுடனே கத்துவதோ, அடிப்பதோ அல்லது முறையற்ற வார்த்தைகளைப் பேசுவதோ அவர்களின் மனநிலையை பெரிதும் பாதிக்கும். முக்கியமாக பிள்ளைகள் தவறு செய்யும் போது கோபப்பட்டு அடிவயிற்றிலிருந்து கத்துவதை விட அமைதியான முறையில் நிதானமாகப் பேசுவது குழந்தைகளிடம் நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.
அவர்களை சரியான வழியில் தாங்கள் செய்த தவறை உணரச் செய்து வழிகாட்டுவது நல்லது. உடனடி கோபம் என்பது குழந்தைகளிடம் பிடிவாத குணத்தையே வளர்க்கும்.
4. தவறுகளை கற்றலுக்கான வாய்ப்பாக மாற்றுவது:
அவர்கள் செய்தது ஏன் தவறு? அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் பொறுமையாக விளக்க வேண்டும். தண்டனை கொடுப்பதை விட தவறை உணர வைப்பதே முக்கியம். தவறுகள் செய்வது மனித இயல்பு. அதிலிருந்து தான் நாம் கற்றுக் கொள்ள முடியும் என்பதை பிள்ளைகளுக்குப் புரிய வைக்கலாம். தவறை உணர்ந்து அடுத்த முறை அதை எப்படி சரியாகச் செய்யலாம் என்ற தீர்வை அவர்களையே யோசிக்க வைக்கலாம்.
5. நம்பிக்கையை உருவாக்குவது:
"நீ இப்படி செய்யக்கூடிய ஆளில்லையே, இன்று ஏன் இப்படி நடந்தது?" என்று பொறுமையாகக் கேட்கும் பொழுது பிள்ளைகள் தங்களின் மீதான பெற்றோரின் நம்பிக்கையை உணர்ந்து வருந்துவார்கள். இது அவர்களை அடுத்த முறை தவறு செய்யாமல் தடுக்க உதவும்.
6. எது சரி என்று புரிய வைப்பது:
தவறுகளை சுட்டிக்காட்டுவதை விட எது சரியானது என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்துவது அவசியம். நீதிக்கதைகள் மூலமாகவும், பெற்றோராகிய நாம் சரியாக வாழ்ந்து காட்டுவதன் மூலமும் பிள்ளைகளுக்கு நற்பண்புகளை எளிதாகக் கற்றுக் கொடுக்கலாம்.
இதுபோன்ற கனிவான மற்றும் முறையான கண்டிப்பு பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே உள்ள பிணைப்பை வலுவாக்கும். பிள்ளைகளுக்கு மனதில் பயத்தை விதைப்பதைவிட, தவற்றை திருத்திக் கொள்ளும் பொறுமையை சொல்லிக் கொடுப்பதே சிறந்த பெற்றோருக்கான அடையாளம்.
பெற்றோர் - பிள்ளை இடையேயான உறவு பாழாகாமல், குழந்தைகளிடம் நிரந்தரமான நல்ல ஒழுக்கத்தை உருவாக்க உதவும் குழந்தை வளர்ப்பு நவீன நெறிகளைப் புரிந்து கொள்ளலாம்.