

குழந்தைகள் தவறு செய்வது அவர்களின் வளர்ச்சிப் பயணத்தின் இயல்பான ஒரு பகுதியாகும். ஒவ்வொரு தவறுக்கும் கோபப்படுவதும், கடுமையாகக் கண்டிப்பதும் அவர்களிடம் பயத்தை ஏற்படுத்துமே தவிர, பொறுப்புணர்வை வளர்க்காது. அதற்குப் பதிலாக அன்புடனும் புரிதலுடனும் வழிகாட்டும் ‘Positive Parenting’ எனப்படும் நேர்மறை வளர்ப்பு முறை, குழந்தைகள் தாங்களாகவே நல்ல பழக்கங்களையும் ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ள உதவுகிறது.
முதலில், குழந்தை தவறு செய்தவுடன் உடனடியாகக் கத்துவதற்குப் பதிலாக, அமைதியாக என்ன நடந்தது என்று கேட்க வேண்டும். “ஏன் இப்படிச் செய்தாய்?” என்று கோபமாகக் கேட்பதற்குப் பதிலாக, “என்ன நடந்தது என்று சொல்லு” என்று கேட்பது குழந்தையைத் தன் செயல்களைப் பற்றி சிந்திக்க வைக்கும்.
குழந்தைகளுக்கு வீட்டிலேயே சில சிறிய பொறுப்புகளை வழங்கலாம். விளையாடிய பொம்மைகளை அதற்குரிய இடத்தில் வைப்பது, புத்தகங்களை அடுக்குவது, பள்ளிப் பொருட்களைத் தயார் செய்வது போன்ற பணிகளை அவர்களே செய்ய ஊக்குவிக்கலாம். வயதுக்கு ஏற்ற பொறுப்புகளை வழங்கும்போது, “நான் செய்ய வேண்டும்” என்ற எண்ணம் மெதுவாக உருவாகும்.
ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பதில் தெளிவான விதிகளும் முக்கியம். எந்தச் செயல்கள் செய்யக்கூடாது என்பதை மட்டும் சொல்வதற்குப் பதிலாக, அதற்கான காரணத்தையும் விளக்க வேண்டும். உதாரணமாக, “வீட்டில் ஓடக்கூடாது” என்று சொல்வதுடன், “ஓடினால் வழுக்கி விழுந்துவிடலாம்” என்று காரணத்தையும் புரிய வைக்கலாம்.
குழந்தை தவறு செய்தால் தண்டனை கொடுப்பதற்குப் பதிலாக, அந்தத் தவறைச் சரிசெய்யும் வாய்ப்பைக் கொடுக்கலாம். தண்ணீரைக் கொட்டிவிட்டால் திட்டுவதற்குப் பதிலாக, துணியைக் கொடுத்து அதைத் துடைக்கச் சொல்லலாம். இதன் மூலம் தவறுக்கு பொறுப்பேற்பது கற்றுக் கொள்ளப்படுகிறது.
அதேபோல், குழந்தை நல்ல முறையில் நடந்து கொள்ளும்போது அதை கவனித்து பாராட்டுவதும் அவசியம். “நீயே உன் புத்தகங்களை அழகாக அடுக்கிவிட்டாயே!” போன்ற குறிப்பிட்ட பாராட்டுகள், நல்ல பழக்கத்தை மீண்டும் செய்யும் ஆர்வத்தை ஏற்படுத்தும்.
பெற்றோர்களின் செயல்களும் குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாடமாக அமைகின்றன. பெற்றோர் கோபமான சூழ்நிலையிலும் அமைதியாகப் பேசினால், குழந்தைகளும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதைக் கற்றுக்கொள்வார்கள்.
அன்பு என்பது எல்லாவற்றையும் அனுமதிப்பது அல்ல; அன்புடன் தெளிவான எல்லைகளை அமைப்பதுதான் நேர்மறை வளர்ப்பின் முக்கிய நோக்கம்.
Positive parenting ல் குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ற சுதந்திரம் கொடுப்பதும் முக்கியமானது. ஒவ்வொரு விஷயத்தையும் பெற்றோரே தீர்மானித்துக் கொண்டிருந்தால் குழந்தைக்கு தன்னம்பிக்கையுடன் முடிவெடுக்கும் பழக்கம் உருவாகாது. அதனால் இரண்டு பொருத்தமான தேர்வுகளை முன் வைத்து அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் செய்யலாம்.
உதாரணமாக "முதலில் குளித்து விட்டு படிக்கிறாயா, அல்லது சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு படிக்கிறாயா? என்று கேட்கலாம். இதனால் குழந்தைக்கு தனது முடிவுக்கும் பொறுப்பு இருக்கிறது என்ற உணர்வு ஏற்படும். மேலும் குழந்தை எதிர்பார்த்தபடி நடக்காத நேரங்களில் பெற்றோர் உடனடியாக தீர்ப்பு வழங்காமல் அந்த செயலில் இருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பேச வேண்டும்.
அடுத்த முறை இதை எப்படி வேறு விதமாகச் செய்யலாம் என்ற கேள்வி குற்ற உணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சிந்திக்கும் திறனை வளர்க்கும். தினமும் சில நிமிடங்கள் ஆவது குழந்தையுடன் மொபைல் போன்ற கவனச் சிதறல்கள் இல்லாமல் பேசுவது அவர்களின் எண்ணங்களையும் சிரமங்களையும் பெற்றோர் அறிந்து கொள்ள உதவும்.
இப்படியான நெருக்கமான உறவு குழந்தைகள் தவறு செய்தாலும் அதை மறைக்காமல் பெற்றோரிடம் பகிரும் நம்பிக்கையை உருவாக்குகிறது. குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாமல் இருப்பதும் positive parenting ன் முக்கியமான நடைமுறையாகும். " அவனால் அல்லது அவளால் முடிகிறதே உன்னால் ஏன் முடியவில்லை? போன்ற வார்த்தைகள் குழந்தையின் தன்னம்பிக்கையை பாதிக்கலாம்.
ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் திறமையும் கற்றுக் கொள்ளும் வேகமும் இருக்கும் என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு செயலில் உடனடியாக வெற்றி கிடைக்காவிட்டாலும் குழந்தை எடுத்த முயற்சியை பாராட்டலாம். அதேபோல பெற்றோரின் எதிர்பாராப்புகளும் குழந்தையின் வயதுக்கும் திறமைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.
எல்லாவற்றிலும் முதலிடத்தில் வரவேண்டும் என்ற அழுத்தத்தை கொடுப்பதற்கு பதிலாக நேற்று இருந்ததை விட இன்று சிறப்பாக செய்ய முயற்ச்சிக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். இதுபோன்ற அணுகுமுறை தோல்வியைக் கண்டு பயப்படாமல் புதிய விஷயங்களை முயற்சி செய்யும் மனப்பக்குவத்தை குழந்தைகளிடம் உருவாக்கும்.
குழந்தைகளின் தனிப்பட்ட எல்லைகளையும் பெற்றோர் மதிக்க வேண்டும். அவர்களுக்கு உடனே பேச வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தாமல் சிறிது நேரம் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் அதற்கும் இடம் கொடுக்கலாம். தனியுரிமை, கருத்து வேறுபாடு, விருப்பம் ஆகியவற்றை மதித்து உரையாடுவது குழந்தை தன்னை குடும்பத்தில் முக்கியமான ஒருவராக உணரச்செய்யும்.
Positive Parenting என்பது குழந்தைகளை கண்டிக்காமல் வளர்ப்பது மட்டுமல்ல; தவறுகளைப் புரிந்துகொள்ளச் செய்து, சரியானதைத் தேர்ந்தெடுக்கும் திறனை அவர்களுக்குள் வளர்ப்பதாகும். அன்பு, பொறுமை, தெளிவான எல்லைகள், பொறுப்புகளை வழங்குதல், நல்ல செயல்களைப் பாராட்டுதல் ஆகியவற்றின் மூலம் குழந்தைகளிடம் ஒழுக்கத்தையும் தன்னம்பிக்கையையும் ஒரே நேரத்தில் வளர்க்க முடியும். இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம், குழந்தைகளை பயத்தால் அல்லாமல் புரிதலாலும் அன்பாலும் வழிநடத்துவதன் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் உணரமுடியும்.
குழந்தைகள் மீதான அதிகப்படியான எதிர்பார்ப்புகள் மற்றும் ஒப்பீடுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை உணர்ந்து, அவர்களின் மனப்பக்குவத்தை மேம்படுத்தும் முறைகளைப் பெறுவர்.