
பள்ளிப்பருவத்தில், மீன் வளர்ப்பது, லவ் பேர்ட்ஸ் வளர்ப்பது போன்ற ஆசைகள் எல்லோருடைய மனதிலும் மலர்ந்திருக்கும். தற்போது நாய், பூனை, மீன் போன்றவற்றை வளர்க்கும் ஆசை போய், பறவைகள் முதல் வெளிநாட்டு பறவைகள் வரை வளர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். செல்லப்பிராணிகளான நாய், பூனை, புறா, லல் பேர்ட்ஸ், பச்சைக் கிளிகள் முதல் அயல்நாட்டு கிளிகள் வரை என ஒவ்வொன்றும், ஒவ்வொரு ரகம், தனி குணம். அன்பு, பரிவு, கோபம், அக்கறை, பாசம் என மனிதர்களை மிஞ்சும் அளவிற்கு, உண்மையான அன்பை இவை வெளிக்காட்டுகின்றன என்றே சொல்ல வேண்டும். மனிதர்களை போல் பொறாமை, துரோகம் போன்ற எந்த குணங்களும் செல்ல பிராணிகளுக்கு கிடையாது என்பதால் பலரும் இவற்றை வளர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு மன அழுத்தம் வருவதற்கு வாய்ப்புகளே கிடையாது என்று உலக ஆராய்ச்சிகள் பல நிரூபித்துள்ளன. மேலும் தனிமையில் இருப்பவர்களுக்கு ஏற்படும் பயம், சோகம், விரக்தி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்காகவே, தற்போது நிறைய பேர் அவர்களுக்கு விருப்பமான செல்லப்பிராணிகளை விரும்பி வாங்கி வளர்க்க ஆரம்பித்து வருகின்றனர். சின்ன குழந்தைகளுக்கு பேச்சு துணையாகவும், முதியவர்களுக்கு ஆதரவாகவும் செல்லப்பிராணிகள் திகழ்கின்றன. வெளிநாட்டு கலாசாரத்தில் உள்ள சில அலுவலங்களில் செல்லப்பிராணிகளை எடுத்து வர அனுமதி உள்ளதால் செல்லப்பிராணிகளை அலுவலகத்திற்கு அழைத்து செல்கிறார்கள்.
செல்லப்பிராணிகளை வளர்க்க ஆசைப்பட்டு, ஆசை ஆசையாக செல்லப்பிராணிகளை வாங்கி சிறிது காலம் வளர்த்து விட்டு பிறகு பராமரிக்க முடியாமல் பாதியிலேயே ரோடுகளில் பரிதவிக்க விடும் சில நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
நாம் வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகள், மனிதர்களின் அன்பையும், அரவணைப்பையும் எதிர்பார்ப்பவை என்பதால் அவைகளை முறையாக பராமரிக்கவேண்டும். அதாவது குளிக்க வைப்பது, உணவு கொடுப்பது, நாய்கள், பூனையோடு விளையாடுவது, அவற்றை வாக்கிங் அழைத்து செல்வது, புறா, கிளிகள் மற்றும் வெளிநாட்டு கிளிகளுடன் பேசி மகிழ்வது, விளையாடுவது... போன்ற வேலைகளில், நம்மை அவற்றுடன் பிணைத்து கொள்வதன் மூலம் அவை நம்முடன் பாசத்துடன் நடந்து கொள்ளும்.
அதுமட்டுமில்லாமல் நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் குணாதிசயங்களையும், அவற்றை சமாதானப்படுத்தும் வழிமுறைகளையும் நாம் கண்டிப்பாக தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும். அப்போது தான் அவைகளுடன் ஒரு சுமுகமான உறவுடன் தொடர்ந்து பயணிக்க முடியும். செல்லப்பிராணிகளுடன் தினமும் குறைந்தது 1 முதல் 2 மணிநேரமாவது செலவிடவேண்டும். அப்போது தான் அவை நம்முடன் பிணைப்புடன் நடந்து கொள்ளும்.
நம் வீட்டில் இருக்கும் சின்ன குழந்தைகளுக்கு நம்மை விட செல்லப்பிராணிகள் மீது அதிக பாசமும், ஆர்வமும் இருக்கும். நாய், பூனை போன்றவற்றை வாங்கி வளர்க்க ஆசைப்படுவார்கள். 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நாய் - பூனைகள் ஏற்றதாக இருக்கும். சிறு குழந்தைகளுக்கு நாய், பூனைகளின் குணாதிசயங்களின் படி நடந்து கொள்ள முடியாது என்பதால் பல பிரச்னைகள் ஏற்படலாம். எனவே சிறு குழந்தைகளை நம்பி நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, சுலபமாக பராமரிக்கக்கூடிய பறவைகள், மீன்கள் ஆகியவற்றை பரிசளிக்கலாம்.
வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்க்க, கண்டிப்பாக முறையான அனுமதி பெற வேண்டும். நாய், பூனை, பறவைகள், மற்ற உயிரினங்கள் எதுவாக இருந்தாலும், வளர்ப்பதற்கான உரிமம் பெற வேண்டும் என்றாலும், எக்ஸாட்டிக் வகை செல்லப்பிராணிகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் கொஞ்சம் அதிகம் என்றே சொல்ல வேண்டும். முறையான அனுமதி பொறாவிட்டால் கடுமையான தண்டனை மட்டுமின்றி அதிக அபராதமும் விதிக்கப்படும்.