சுத்தமான வெல்லத்தை கண்டுபிடிப்பது எப்படி?

How to find pure jaggery
How to find pure jaggery
Published on

வெல்லம் என்ற பெயரை கேட்டாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊரும். வீட்டு மாதாந்திர மளிகை லிஸ்டில் நிச்சயமாக வெல்லத்திற்கு முக்கிய இடமுண்டு. வெல்லம் வாங்குகிறோமே தவிர, அது சுத்தமான வெல்லம்தானா? என்பதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

இன்றைய தலைமுறையினருக்கு வெல்லம் என்ற பெயரில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கிடைக்கும் உருண்டை வெல்லம் பற்றித்தான் தெரியும். ஆனால், அது சுத்தமானதுதானா? அவற்றில் எத்தனை சதம் உடலுக்கு ஊறு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்திருக்கின்றன என்பதெல்லாம் தெரியாது. நல்ல மஞ்சள் நிறத்தில் மாசு மருவின்றி வழுவழுப்பான உருண்டைத் தன்மையுடன் ஒரு பாக்கெட்டுக்குள் அடைத்து விற்கப்படும் வெல்லத்தை தூய்மையான வெல்லம் என நம்புகிறோம். ஆனால், அது கண்மூடித்தனமான நம்பிக்கையே தவிர, நிஜமல்ல. வெல்லம் வாங்கும் முன்பு அது சுத்தமானதுதானா? என்பதை யோசிக்க வேண்டும்.

வெல்லம் கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவகை இனிப்பூட்டி. அதே கரும்பில் இருந்து தயாராகும் வெள்ளைச் சர்க்கரையைக் காட்டிலும் இதன் ஆரோக்கியப் பலன்கள் அதிகம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செரிமானத்தை அதிகரிக்கக்கூடிய தன்மை வெல்லத்துக்கு உண்டு. அதுமட்டுமல்ல, விட்டமின் C மற்றும் இரும்புச்சத்து என உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான இரு சத்துக்கள் வெல்லத்தில் அதீதமாக இருப்பதால் வெல்லம் எல்லா வயதினருக்கும் தவிர்க்க முடியாத ஒரு சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது.

உடலின் இரத்த சுத்திரிகரிப்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் விஷயத்திலும் வெல்லத்தின் பங்கு அதிகம். மேற்கண்ட பலன்கள் தவிர, உடலை சூடாகவும் வெதுவெதுப்பாகவும் வைத்துக்கொள்ளும் தன்மை கூட வெல்லத்துக்கு உண்டு என்பதால் வெயில் காலங்கள் தவிர்த்து, உணவில் தினமும் வெல்லம் சேர்த்துக்கொள்ள வேண்டிய பருவம் குளிர்காலம் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆகவே, வெல்லத்தை வெயில் காலத்தில் கூடுமானவரை தவிர்த்து, குளிர் காலங்களில் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

வெள்ளை கரும்பிலிருந்து சேகரிக்கப்படும் கரும்புச் சாறே வெல்லம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெல்லம் தயாரிக்க வெள்ளை கரும்புகளில் இருந்து அதிகப்படியாக சாறு பிழியப்பட்டு சேமிக்கப்படுகிறது. இந்தச் சாறு சுமார் 2000 லிட்டர் அளவு வரும்போது அதை வடிகட்டி மிக உயர்ந்த கொதிநிலையில் பிரம்மாண்ட வாணலிகளில் வைத்து காய்ச்சத் தொடங்குகிறார்கள். வெல்லம் காய்ச்சும்போது அதிலிருந்து தூசு, துரும்பு போன்ற பல தேவையற்ற கசடுகளை நீக்க மிகக் குறைந்த அளவில் சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றனவாம். அவற்றால் மனிதனின் உடல் நலனுக்குத் தீங்கு எதுவும் இல்லை என்கிறார்கள் தாவர ஊட்டச்சத்து நிபுணர்கள்.

இப்படிக் காய்ச்சப்படும் கரும்புச்சாறு உச்சபட்ச கொதிநிலையில் திரளத்தொடங்கி கெட்டியான பதத்துக்கு வரும். வாணலியில் ஒட்டாத பதத்தில் திரளத் தொடங்கும்போது அவற்றைச் சேகரித்து பெரிய பெரிய உருண்டைகளாகப் பிடித்து மண்டை வெல்லம் தயாரிக்கப்படுகிறது. அதையே அச்சுக்களில் ஊற்றி 15 நிமிடங்களுக்கு ஆற விட்டு எடுத்து பின் துண்டு போட்டால் அதற்குக் கட்டி வெல்லம் அல்லது அச்சு வெல்லம் என்று பெயர்.

அச்சு வெல்லம்
அச்சு வெல்லம்

பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் இத்தகைய வெல்லங்களில் மக்களை தீராத நோயில் தள்ளக்கூடிய எவ்வித ரசாயனமும் சேர்க்கப்படுவது இல்லை. கடைகளில் வெல்லம் வாங்கும்போது அதில் ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டுப் பாருங்கள். வெல்லம் இனிப்புச் சுவையுடன் இருந்தால் அது சுத்தமான வெல்லம். ஆனால், சற்றே உப்புத் தன்மையுடன் இருந்தால் அதில் அதிகளவிலான மினரல் உப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று அறிய வேண்டும். அதுமட்டுமல்ல, வெல்லத்தில் உப்புத் தன்மை இருந்தால் அது ஃப்ரெஷ்ஷாகத் தயாரிக்கப்பட்ட வெல்லம் இல்லை. நாட்பட்ட வெல்லம் என்பதையும் அறிந்து கொள்ளலாம். ஏனெனில், நாட்பட்ட வெல்லத்தில் உப்புச்சுவை அதிகமிருக்கும்.

வெல்லத்தை வாயில் இடுகையில் ஊன்றிக் கவனித்தால் மட்டுமே உணரும் அளவுக்கு வாய் கசக்கிறது எனில், அந்த வெல்லம் தயாரிக்கப்படும்போது உச்சபட்ச கொதிநிலையில் கேரமலைஸேஷனுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று பொருள். கேரமலைஸேஷன் என்பது வெல்லத்திற்கு இயற்கையாக அல்லாமல் செயற்கையாக பிரெளன் நிறம் ஏற்றப்படுதல் என்று பொருள். அதுமட்டுமல்ல, வெல்லத்தை வாயிலிடுகையில் கரையாத உப்புக்கள் ஏதேனும் தென்படுகின்றவனா என்றும் ஆராய வேண்டும். அப்படி உப்பு போன்ற பொருட்கள் நாக்கில் நெருடினால் அதிக இனிப்புத் தன்மையை உருவாக்கும் பொருட்டு செயற்கையாக இனிப்புச் சுவையூட்டும் உப்புகள் அதில் கலக்கப்பட்டுள்ளன என்று பொருள்.

வெல்லம் வாங்கும்போது அதன் நிறத்தையும் கவனிக்க வேண்டும். அடர் பிரெளன் நிற வெல்லமே தூய்மையான வெல்லத்திற்கு அறிகுறி. அப்படியல்லாது, மஞ்சள் நிறத்தில் வெல்லம் இருந்தால் அதை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். மஞ்சள் நிற வெல்லம் பொதுவாக வேதியியல் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதால்தான் அதற்கு அந்த நிறம் கிடைக்கிறது என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தத்தை அறவே நீக்கும் சில ஆரோக்கிய உணவுகள்!
How to find pure jaggery

வெல்லம் தயாரிக்க கரும்புச் சாற்றைக் காய்ச்சும்போது அதில் தடைசெய்யப்பட்ட அல்லது உடல் நலனுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய ரசாயனச் சேர்மானங்கள் ஏதேனும் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்து கொண்ட பிறகே வெல்லம் வாங்க வேண்டும். ஏனெனில், சில வியாபாரிகள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, வெல்லம் தயாரிக்கும்போது அதில் சுண்ணாம்புத் தூளை கலப்படம் செய்கின்றனர். நீங்கள் வாங்கும் வெல்லத்தில் சுண்ணாம்புத் தூள் கலப்படம் இருக்கிறதா என்பதை அறிய வெல்லத்தில் ஒரு சிறு துண்டை எடுத்து நீர் நிறைந்த கோப்பையில் இட்டால், வெல்லம் கரைந்ததும் சுண்ணாம்புத் தூள் கோப்பையின் அடியில் படிந்திருக்கும்.

சில நேரங்களில் வெல்லத் தயாரிப்பில் செயற்கை நிறமூட்டிகளும் கூட பயன்படுத்தப்படுகின்றன. ஒருவேளை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட வெல்லம் ஒரிஜினல் தூய்மையான வெல்லம் போலவே பார்வைக்குத் தட்டுப்படலாம். அம்மாதிரியான சூழலில் தூய வெல்லத்தைக் கண்டுபிடிக்க ஒரு நுட்பமான வழி இருக்கிறது. ஒரு டீஸ்பூன் வெல்லம் எடுத்துக்கொண்டு அதில் 6 மில்லி லிட்டர் ஆல்கஹால் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின் அதில் 20 துளிகள் அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (HCl) சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்க்கையில் வெல்லம் உடனே இளஞ்சிவப்பு நிறமாக மாறினால் அதில் செயற்கை நிறமூட்டிகள் அளவுக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்று பொருள். எனவே, மேற்கண்ட முறைகளைக் கையாண்டு சுத்தமான, கலப்படமில்லாத வெல்லத்தை வாங்கிப் பயன்படுத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com