

நமது வீடுகளில் சமையலறை சிங்க் தொடங்கி பிரிட்ஜ் வரை எங்கு பார்த்தாலும் இப்போது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. பார்ப்பதற்கு நன்றாகவும், பளபளப்பாகவும் இருக்கும் இந்த பொருட்களை பயன்படுத்துவது எவ்வளவு சுலபமோ அதே அளவு அதை பராமரிப்பதும் சற்று சவாலான காரியம் தான்.
தெரியாமல் ஏதாவது கடினமான பொருளை வைத்து தேய்த்துவிட்டால் உடனே அதில் பெரிய கீறல்கள் விழுந்து அதன் ஒட்டுமொத்த அழகையும் கெடுத்துவிடும். இப்படி உங்கள் வீட்டு ஸ்டீல் பொருட்களில் உள்ள தேவையற்ற கீறல்களை அதன் உண்மையான பளபளப்பு மாறாமல் எப்படி பாதுகாப்பாக நீக்குவது என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கீறலின் ஆழத்தைக் கண்டுபிடியுங்கள்!
எல்லா கீறல்களையும் நம்மால் முழுமையாக நீக்கிவிட முடியாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சின்ன டெஸ்ட் மூலம் இதை ஈஸியாக கண்டுபிடிக்கலாம். கீறல் விழுந்த இடத்தின் மீது உங்கள் நகத்தை வைத்து மெதுவாக தேய்த்து பாருங்கள்.
உங்கள் நகம் அந்த பள்ளத்தில் சிக்கினால் அந்த கீறல் ஆழமாக இருக்கிறது என்று அர்த்தம். அதை முழுமையாக அழிக்க முடியாது, ஓரளவு மறைக்க மட்டுமே முடியும். ஆனால் நகம் சிக்காமல் லேசாக இருந்தால் அதை நம்மால் சுலபமாக முற்றிலுமாக துடைத்து எடுத்துவிட முடியும்.
பேக்கிங் சோடா!
கடைகளில் விற்கும் கெமிக்கல்களை தேடிப் போவதை விட நமது கிச்சனில் இருக்கும் பேக்கிங் சோடா இதற்கு ஒரு சூப்பரான தீர்வாக அமையும். கொஞ்சம் பேக்கிங் சோடாவில் லேசாக தண்ணீர் கலந்து ஒரு மென்மையான பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டை ஒரு சாஃப்டான மைக்ரோஃபைபர் துணியில் தொட்டு, அந்த ஸ்டீல் பொருளின் கோடுகள் எந்த திசையில் செல்கிறதோ அதே திசையில் ரொம்ப மென்மையாக தேய்க்க வேண்டும். அவசரப்பட்டு அழுத்தம் கொடுத்து தேய்த்தால் அது வேறு சில புதிய கீறல்களை உருவாக்கிவிடும். எனவே பொறுமையாக பல முறை லேசாக துடைத்து எடுப்பது தான் சரியான முறை.
செய்யக்கூடாத மிக முக்கியமான தவறுகள்!
ஸ்டீல் பொருட்களை சுத்தம் செய்யும் போது நாம் செய்யும் மிகப்பெரிய தப்பு, இரும்பு நார்களை வைத்து அழுத்தி தேய்ப்பது தான். இது அதன் பளபளப்பை நிரந்தரமாக காலி செய்துவிடும். அதேபோல கோடுகள் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் தேய்ப்பதும் நிலைமையை இன்னும் மோசமாக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் உள்ள கீறலை போக்குவதற்காக அந்த இடத்தை மட்டும் தொடர்ந்து நீண்ட நேரம் தேய்த்துக் கொண்டே இருந்தால் அந்த இடம் மட்டும் தனியாக திட்டு திட்டாக மங்கியது போல மாறிவிடும்.
உங்கள் வீட்டு ஸ்டீல் பொருட்களில் உள்ள கீறல்களை சரி செய்ய இந்த சிம்பிளான ட்ரிக்ஸ் உதவியாக இருக்கும். ஆனால் ஆழமான பெரிய பெரிய கீறல்களாக இருந்தாலோ அல்லது அந்த பொருளின் மீது ஏதாவது ஸ்பெஷல் கோட்டிங் கொடுக்கப்பட்டிருந்தாலோ அதை நீங்களே சரி செய்ய முயற்சிப்பது மிகப்பெரிய ஆபத்து. அதை ஒரு ப்ரொபஷனலிடம் கொடுத்து சரி செய்வது தான் மிகச் சிறந்த முடிவாகும்.