புதிய ஷூக்கள், கைப்பைகள் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கும்போது உள்ளே ஒரு சிறிய வெள்ளைப் பாக்கெட் இருக்கும். பலரும் அதைத் தேவையில்லாத குப்பை என நினைத்து உடனே தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், சிலிகா ஜெல் (Silica Gel) கொண்ட இந்தச் சிறிய பாக்கெட்டுகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி பொருட்களைப் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டவை. இவற்றை வீணாக்காமல் அன்றாட வாழ்வில் பல வழிகளில் மீண்டும் பயன்படுத்தலாம்.
ஷூ மற்றும் பயணப் பைகளில்!
வியர்வை மற்றும் ஈரப்பதத்தால் ஷூக்களில் ஏற்படும் துர்நாற்றம், பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்க இரவில் ஷூக்களுக்குள் தலா 1 பாக்கெட்டைப் போட்டு வைக்கலாம். அதேபோல், ஜிம் பை அல்லது பயணப் பைகளில் சில பாக்கெட்டுகளைப் போட்டு வைத்தால் துணிகள் ஈரமாகாமலும், கெட்ட வாடை வீசாமலும் இருக்கும்.
கேமரா மற்றும் மின்னணு சாதனங்களில்!
மழைக்காலம், ஈரப்பதமான காலநிலையில் கேமரா லென்ஸ்களில் பூஞ்சை பிடிப்பதைத் தடுக்க, கேமரா பை அல்லது பெட்டிக்குள் 3 முதல் 4 பாக்கெட்டுகளை வைக்க வேண்டும். பழைய செல்போன்கள், ஹெட்போன்கள், சார்ஜர்கள் வைக்கும் பெட்டியிலும் இவற்றைப் போட்டு வைக்கலாம்.
எதிர்பாராத விதமாகச் செல்போன் தண்ணீரில் விழுந்துவிட்டால், உடனே அதை அணைத்துவிட்டு, பேட்டரி மற்றும் சிம் கார்டை அகற்ற வேண்டும். பின்னர் ஒரு காற்றுப்புகாத டப்பாவில் நிறைய பாக்கெட்டுகளுடன் போட்டு மூடி வைத்தால், அரிசியை விட வேகமாக ஈரப்பதத்தை இது உறிஞ்சும்.
அலமாரிளில்!
பட்டுப் புடவைகள், விலை உயர்ந்த ஆடைகள் வைக்கும் அலமாரியில் ஈரப்பதத்தால் பூஞ்சை பிடிக்காமல் இருக்க இவற்றை வைக்கலாம். பாஸ்போர்ட், சொத்துப் பத்திரங்கள் மற்றும் பழைய புகைப்படங்கள் வைக்கும் கோப்புகளில் சில பாக்கெட்டுகளைப் போட்டு வைத்தால், காகிதங்கள் மக்குவதையும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்வதையும் தடுக்கலாம்.
வெள்ளி நகைகளில்!
வெள்ளி நகைகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தால் விரைவில் கருத்துப் போகும். நகைப் பெட்டிக்குள் 1 பாக்கெட்டை வைத்தால் வெள்ளி நகைகள் பளபளப்பாக இருக்கும். அதேபோல், ஷேவிங் ரேசர்களை ஈரப்பதம் இல்லாத டப்பாவில் இவற்றுடன் வைத்தால், பிளேடுகள் துருப்பிடிக்காமல் நீண்ட நாட்கள் உழைக்கும்.
பாதுகாப்பு விதிககள்!
இவை விஷத்தன்மை கொண்டவை அல்ல என்றாலும், விழுங்கினால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குழந்தைகள், செல்லப்பிராணிகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும். உணவுப் பொருட்களுடன் நேரடியாகப் படும்படி இவற்றை வைக்க வேண்டாம்.
சில மாதங்களுக்குப் பிறகு ஈரப்பதத்தை முழுமையாக உறிஞ்சிய பாக்கெட்டுகளை 100°C வெப்பநிலையில் அவனில் சுமார் 1 மணி நேரம் வைத்தால், அவை மீண்டும் புதியது போல ஈரப்பதத்தை உறிஞ்சும் திறனைப் பெறும்.
அடுத்த முறை புதிய பொருட்களுடன் சிலிகா ஜெல் பாக்கெட் வந்தால் அதைத் தூக்கி எறியாமல் சேமித்து வையுங்கள். உங்கள் வீட்டுப் பொருட்களைப் பாதுகாக்க அது மிகவும் உதவியாக இருக்கும்.