
எல்லா குடும்பங்களிலும் தாய்மார்கள் 'என் பிள்ளை அல்லது மகள் ஐ.ஏ.எஸ் ஆகணும். இல்லேன்னா ஐ.பி.எஸ் ஆகணும்'-ன்னு ஆசைப்படுவாங்க. ஆனா பிள்ளைகள் வேறு மாதிரி யோசிப்பாங்க.
சில பிள்ளைகள் அம்மாவின் ஆசைக்கேற்ப மத்திய அரசின் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுக்கு பல்வேறு சிரமங்களுக்கிடையே படிப்பார்கள்.
இந்த தேர்வுகளுக்கு வெறும் புத்தகப் படிப்பு மட்டும் போதாது. பொது அறிவும் கூடுதலாக பெறப்பட வேண்டும். அதற்காக நாளெல்லாம் நூலகத்தில் தவமிருந்து குறிப்புகள் சேகரிப்பார்கள். சக மாணவர்களிடையே கலந்துரையாடுவார்கள். பின்பு தேர்வு எழுதுவார்கள். இந்திய அளவில் இத்தேர்வு நடத்தப்படுவதால் கடுமையான போட்டி இருக்கும்.
அவற்றை கடந்து வெற்றி பெற்று விட்டால்… இந்திய ஆட்சி பணி அல்லது இந்திய காவல் பணியில் உயர் அலுவலர் பதவிதான். பதவி பெரியது என்றாலும் பொறுப்புகள் அதிகம் கொண்டவை இப்பதவிகள்.
இந்திய ஆட்சி பணிக்கும் இந்திய காவல் பணிக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. அவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்திய ஆட்சி பணி என்பது இந்தியாவின் முதன்மையான குடிமைப் பணி என கருதப்படுகிறது. இதில் மாவட்ட அளவில் நிர்வாக சேவை, மத்திய அமைச்சகத்தில் பதவி என வழங்கப்படும். மாநிலத்தின் பொது நல திட்டங்கள் மற்றும் கொள்கைகள் சீராக செயல்படுத்துவதற்கு பணியாற்றுகின்றனர்.
இந்திய ஆட்சி பணியாளர்கள் பணியானது நிர்வாகம், கொள்கை வகுத்தல் மற்றும் ஆளுமை ஆகும். அவர்கள் மாவட்ட ஆட்சியர் தேர்வில் வெற்றி பெற்று பதவி நியமனம் கிடைத்த பிறகு இவர்களுக்கு முறையான பயிற்சி முசோரியில் உள்ள பயிற்சி பள்ளியில் நிர்வாகம் மற்றும் பொதுக் கொள்கைகள், பணியாளர்கள் உடன் பழகுதல் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சில நேரங்களில் பவானிசாகர் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அவர்களின் கடமைகளும் பொறுப்பும் மாவட்ட நிர்வாகம் மாவட்ட ஆட்சியர்கள் அல்லது மாவட்ட நீதிபதிகளாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வளர்ச்சி திட்டங்கள் வருவாய் வசூல் மற்றும் பொது நலன் மேற்பார்வையிடுவது ஆகும். அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பு பணியாக செயல்படுகிறார்கள்.
இயற்கை பேரழிவுகள், பொது அமைதியின்மை அல்லது பொருளாதார சிக்கல்கள் ஆகிய நேரங்களில் நெருக்கடி மேலாண்மை கையாள்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு தக்க முறையில் கொள்கை மற்றும் செயல்படுத்துதல் குறித்து உரிய ஆலோசனைகளை வழங்குவார்கள்.
பெரும்பாலும் கல்வி சுகாதாரம் உள்கட்டமைப்பு மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி பணி புரிகிறார்கள்.
இந்திய காவல் பணி: சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரித்தல், பொது பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி அவற்றை நிலை நிறுத்துவதற்காக பணி புரிகின்றனர்.
இந்திய காவல் பணி - கடமைகள்:
சட்ட அமுலாக்கம் குற்றங்களை தடுத்தல் மற்றும் விசாரணை செய்தல் பொது பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் ஒழுங்கை பராமரித்தல்
பாதுகாப்பு மேலாண்மை - முக்கிய நிகழ்வுகளின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் விஐபி பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகிறார்கள்.
காவல் நிர்வாகம் – காவல் படைகளை நிர்வகித்தல், பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் சட்ட அமுலாக்க நுட்பங்களை நவீனப்படுத்துதல்
குற்ற விசாரணை – சைபர் குற்றம் மற்றும் பயங்கர வாதம் உள்ளிட்ட கடுமையான வழக்குகள் விசாரணை வழி நடத்துதல்.
பொது ஒழுங்கு – அமைதியை உறுதி செய்வதற்காக கலவரங்கள் போரட்டங்கள் அல்லது வகுப்புவாத பதட்டங்களை கையாளுதல்.
கூடுதல் அதிகாரம் யாருக்கு?
பொதுவாக ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வுகள் ஒரே மாதிரி எழுதி வெற்றி பெற்றாலும் சில தருணங்களில், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியருக்கு கூடுதல் அதிகாரம் உள்ளது. மாவட்ட ஆட்சியர் அந்த மாவட்டத்தின் ஆட்சியாளராக கருதப்படுகிறார்.
பொதுவாக ஒரு மாவட்டத்தில் பதட்டமான சூழல் ஏற்படும் பொழுது அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தன்னிச்சையாக பதற்றத்தைத் தணிக்க துப்பாக்கி சூடு நடத்துவது என்பது கிடையாது. முறையாக மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற பிறகே அவ்வாறு செய்ய இயலும்.
இதில் யார் பெரியவர் யார் சிறியவர் என்ற வேறுபாடு கிடையாது. பொறுப்பில் அவரவர் பெரியவர். பொது நலத்தில் கலந்து ஆலோசித்து முடிவுகள் மேற்கொள்வார்கள்.
இவற்றுள் எதை தேர்ந்தெடுப்பது என்பது படிப்பவர்களின் ஆர்வம் பொருத்தது. அவர்கள் நிர்வாகம் மற்றும் கொள்கைகள் மீது பிடிப்புள்ளவர்களாக இருந்தால் இந்திய ஆட்சி பணி தேர்வு செய்யலாம் அல்லது இந்திய காவல் பணியின் மீது ஈர்ப்பு அதிகமாயிருந்தால், காவல் பணியை தேர்ந்தெடுக்கலாம்.
இதில் எந்த பணியாக இருந்தாலும், பொறுப்புள்ள பணியாகும். இதில் அவ்வப்போது இடமாற்றங்கள் நிச்சயம் உண்டு. அதை எதிர்கொள்ளும் மனநிலை தயாராக இருத்தல் அவசியமான ஒன்றாகும்.
உங்கள் சாய்ஸ் உங்கள் கையில் என்பது மட்டும் நினைவிருக்கட்டும்!