
தீபாவளியன்று வட இந்தியாவில் வீட்டு வாசல்களில் ரங்கோலி கோலமிட்டு கொண்டாடுகின்றனர். குறிப்பாக, வெள்ளை, மஞ்சள், பழுப்பு நிறத்தில் கோலமிடுகிறார்கள். மகாலட்சுமி தேவியை தத்தமது இல்லங்களுக்கு வரவேற்பதாகவும், ஏற்கெனவே வீட்டில் நிலைத்திருக்கும் ஐஸ்வர்யம் வெளியே போய்விடாதிருக்கவும் இவ்வாறு வண்ணக் கோலமிடுவது அங்கே ஐதீகமாக உள்ளது.
தீபாவளி என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ‘விளக்குகளின் வரிசை’ என்று பொருள். அன்றைய தினம் நம்முடைய இல்லத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். நம் வீட்டு பூஜை அறையில் 5, 9 என்ற எண்ணிக்கையில் விளக்கு ஏற்ற வேண்டும். இதன் மூலம் கடவுளின் ஆசி கிடைக்கும். தீபாவளி அன்று, மாலை வீட்டின் முன் குறைந்தபட்சம் இரண்டு அகல் விளக்குகளாவது ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம்.
தீபாவளி அன்று தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் நம்மிடமுள்ள தீய விஷயங்கள் அனைத்தும் அழிந்து, நல்ல விஷயங்கள் நடக்கும் என்பது ஐதீகம். அப்படி குளிக்கும் நீரில் சிறிதளவு பசும்பால் கலந்து குளித்தால் மகாலட்சுமியின் அருள் கிடைத்து உங்கள் தரித்திரம் மற்றும் பீடைகள் விலகும் என்பது ஐதீகம்.
தீபாவளி அன்று வீடுகளிலும், ஆலயங்களிலும் நிறைய நெய் தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும். இதனால் ‘அகால மிருத்யு தோஷம்’ ஏற்படாதிருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். தொடர்ந்து மூன்று நாட்கள் தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம்.
தீபாவளி அன்று வீட்டிலேயே லட்சுமி குபேர பூஜை செய்தால் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம். இந்த பூஜையில் ஐந்து பழங்கள் மற்றும் மூன்று பூக்கள் இடம் பெற வேண்டும் என்பதும், அதில் குறிப்பாக செவ்வாழை, பெருநெல்லி மற்றும் மாதுளை அவசியம் இடம் பெற வேண்டும் என்பதும் பூக்களில் மல்லிகை, தாமரை மற்றும் வாழைப்பூ கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பதும் ஐதீகம். வீட்டில் செல்வம் வாழையடி வாழையாக நிலைக்க வேண்டும் என்பதற்காகவே வாழைப்பூ அவசியம் இடம் பெற வேண்டும் என்கிறார்கள்.
தீபாவளி அன்று புத்தாடைகள் அணிந்து நம் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி பெற வேண்டும். இதனால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் பின்னர் கோயிலுக்குச் சென்று வர வேண்டும்.
தீபாவளி அன்று நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்துவது முக்கியமான விஷயம். காரணம், தீபாவளி திருநாளன்று நீங்கள் செய்யும் பூஜையும், படையல்களையும் நம் முன்னோர்கள் (பித்ருக்கள்) சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டு நம்மை ஆசீர்வதித்து பின்னர் அவர்களது உலகிற்கு திரும்புகின்றனர் என்பது ஐதீகம்.
நம் ஊரில் அட்சய திரிதியை சமயத்தில் வீட்டிற்கு நகைகள் வாங்கி வந்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் என்பதால் வாங்குகிறோம். அதேபோல், வடநாட்டில் தீபாவளி அன்று நகைகள் வாங்கி அதை தனலட்சுமி படத்தின் முன்பு வைத்து பூஜிப்பார்கள். அன்றைய தினம் தங்கம் வாங்க முடியாதவர்கள் சிறு வெள்ளியாவது வாங்குவார்கள். இது எதையும் வாங்க முடியாதவர்கள் தீபாவளி அன்று கல் உப்பை வாங்கி வீட்டில் வைத்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறையும் என்பது ஐதீகம்.
தீபாவளி நாளில் வீட்டில் மங்கல ஓசை எழுப்புவது நல்ல வளங்களைக் கொண்டு வரும் என்பது ஐதீகம். அந்த வகையில், வீட்டில் சங்கு வைத்திருப்பதே சிறந்த பலனைத் தரும். அந்த சங்கை தீபாவளி நாளில் அதிக ஒலியுடன் ஊத செய்வது வீட்டிற்கு நல்வளத்தையும் செல்வத்தையும் அழைத்து வரும் என்பது ஐதீகம். அப்படி வீட்டில் சங்கு இல்லாதவர்கள் தீபாவளி நாளில் புதியதாக வாங்கி வந்து பூஜையறையில் வைத்து வழிபட்டு வரலாம். அப்படியில்லையெனில் சங்கு பூஜை செய்து வழிபாடு நடத்தலாம்.
விநாயகர் மற்றும் லட்சுமி பூஜை செய்யும் நபர்கள் அதனுடன் வேருடன் கூடிய கரும்பை வைத்தும் வழிபாடு செய்வர். தீபாவளி நாளில் கரும்பை வைத்து பூஜை செய்து வழிபடுவதன் மூலம் இல்லத்தில் நல்ல பலன்கள் அதிகரிப்பதுடன், செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.
தீபாவளி அன்று வீட்டை மலர்கள் கொண்டு அலங்கரித்தால் வீட்டில் அதிர்ஷ்டம் தங்கும் என்பது ஐதீகம். அதுவும் சாமந்தி பூக்களை கொண்டு வீட்டை அலங்கரித்துக் கொண்டால் அதன் பலன்கள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
தீமைகளை அழிக்கப் புறப்படுகின்ற போர் வீரர்களின் நெற்றியில் வீரத்திலகம் இடுவது மரபு. தீபாவளி எண்ணெய் குளியல், நம் உள்ளத்தில் உள்ள தீமைகளைக் கொன்று நன்மைகளை நிலை நிறுத்துவதற்காகத்தான். எனவே, நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்ட பிறகே தலையில் எண்ணெய் தேய்த்துக்கொள்ள வேண்டும். இதை தாய், மனைவி, சகோதரி, அண்ணி ஆகியோர் கையால் இட்டுக் கொள்வது சிறந்தது.