அபிப்பிராயம் கேட்கலாம்... ஆனால் முடிவுகள் உங்களுடையதாக இருக்கட்டும்!

self-decision
self-decision
Updated on

ம் அனைவருக்கும் ஒரு விஷயம் அல்லது ஒரு பொருள் சார்ந்து வெவ்வேறு எண்ணம், நோக்கம் இருக்கும். இதையே அபிப்பிராயம் என்கிறோம். அவரவர் எண்ண ஓட்டங்கள், வாழ்க்கை முறை, வளரும் சூழல், சுற்றியிருப்போர் மனநிலை என இவை அனைத்தையும் சார்ந்து அபிப்பிராயம் மாறுபடலாம்.

ஒரு திரைப்படம், ஒரு நாவல், ஒரு பாடல் இப்படி எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இவை பற்றி அனைவரின் அபிப்பிராயமும் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஒருவருக்குப் பிடித்தது இன்னொருவருக்குப் பிடிக்காததாக இருக்கலாம். ரசனைகளும், விருப்பங்களும் கண்டிப்பாக அனைவருக்கும் ஒன்றுபோல இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இது தெரிந்த விஷயம்தானே, இதில் பேச பெரிதாக என்ன இருக்கிறது என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. இருக்கிறது, இதில் சிந்திக்க நிறைய இருக்கிறது. ஏதாவதொரு பொதுவான விஷயம் சார்ந்து அபிப்பிராய பேதம் இருப்பதை நாம் இயல்பாகக் கடந்துவிடலாம்.

ஆனால் நம் வாழ்வின் முக்கியமான முடிவுகள் எடுக்கும் கட்டத்தில், பிறரின் அபிப்பிராயம் கேட்டு எடுப்பது ஒருவிதத்தில் நல்லது எனினும், எப்போதும் பிறர் அபிப்பிராயம் கேட்டுத்தான் முடிவெடுப்போம் என்ற மனநிலையோடு நாம் இருந்தால், அது நம்மை சிக்கலில்தான் கொண்டு நிறுத்தும்.

நம் முடிவுகளில் நாம் தீர்மானமாக இல்லாவிட்டால், பிறரின் அபிப்பிராயத்தால் மனம் தடுமாறிகொண்டே இருக்கும். உதாரணத்தோடு சொல்கிறேன், அப்போது எளிதாகப் புரிந்துவிடும். உங்கள் குழந்தையை ஒரு பள்ளியில் சேர்க்க விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த பள்ளி சார்ந்து உங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள நாலைந்து பேரிடம் விசாரிப்பதில் தவறில்லை.

நீங்கள் விசாரிக்கும் அந்த நாலைந்து பேரும் கண்டிப்பாக ஒரே அபிப்பிராயத்தைச் சொல்லமாட்டார்கள். ஐந்து பேரிடமிருந்து குறைந்தது மூன்று அல்லது நான்கு வேறுவேறு விதமான அபிப்பிராயங்கள் வரும். இவற்றை அலசி, ஆராய்ந்து உங்கள் முடிவுக்கு நியாயமான அல்லது ஒத்துவராத விஷயங்களை ஆராய்ந்து, உங்கள் தீர்மானமான முடிவை எட்டலாம். ஆனால் ஒவ்வொருவர் சொல்வதற்கும் ஏற்ப உங்கள் முடிவுகளை மாற்றிக்கொண்டே இருந்தால் எப்போதும் குழப்பம்தான் மிஞ்சும். தீர்மானமான முடிவை எட்டவே முடியாது.

இதையும் படியுங்கள்:
வீட்டுப் பெரியவர்கள் 'சுமை' அல்ல; நம் வாழ்வின் 'சுயசரிதை'! உதாசீனப்படுத்தலாமா?
self-decision

ஒரு வீடு வாங்கும் தேடலில் இருக்கிறீர்கள். கண்டிப்பாக உங்களுகென்று ஒரு ஆசை, எதிர்பார்ப்பு, இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு கற்பனை எல்லாம் இருக்கும். அது சார்ந்த தேடலில் சிலரிடம் கண்டிப்பாக அபிப்பிராயம் கேட்கவேண்டும். ஆனால் அந்த அபிப்பிராயம் நம் முடிவை, கற்பனையை, ஆசையைத் திசைதிருப்புவதாக இருக்ககூடாது. அப்படிப்பட்ட அபிப்பிராயங்கள் சொல்பவர்கள்தான் ஏராளம். அவற்றை நம் மனதுக்குள் எடுத்துக்கொண்டு, நம் இலக்கை மாற்றிகொண்டே இருந்தால், நம் தேவைகளை, ஆசைகளை, தேடல்களை எட்டிப்பிடிக்கவே முடியாது.

அபிப்பிராயம் சொன்னவர்கள் முன்னேறிப் போய்க்கொண்டே இருப்பார்கள். நீங்கள் அதே இடத்தில் தேங்கிவிடுவீர்கள். தீர்மானமான முடிவை எடுக்க முடியாமல், உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல், குரங்குபோல் தாவும் மனநிலையிலேயே வாழ்க்கை நகரும். பிறரின் அபிப்பிராயம் கேட்காமல் எதுவுமே சுயமாக உங்களால் முடிவெடுக்க முடியாது.

ஆகையால், அபிப்பிராயம் கேட்கலாம். ஆனால் அதுவே உங்கள் முடிவாக இருக்கக்கூடாது. அது உங்கள் சுயசிந்தனையை மழுங்கச் செய்துவிடும். அதற்காக தான்தோன்றித்தனமாக அனைத்து முடிவுகளையும் எடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை. அபிப்பிராயம் கேட்கலாம், ஆனால் உங்கள் முடிவில் குழப்பத்தைக் கொண்டுவரக் கூடாது.

கவனமாக இருங்கள், இங்கே குழப்புபவர்கள் அதிகம், வழிநடத்துபவர்கள் குறைவு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com