சமையலறையின் புதிய அவதாரம்… இன்டக்ஷன் அடுப்பிற்கு மாறுவது புத்திசாலித்தனமா?

Induction Stove
Induction Stove
Published on

விறகு அடுப்பில் தொடங்கி, மண்ணெண்ணெய் ஸ்டவ், கேஸ் அடுப்பு என்று நமது சமையல் முறை காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே வந்துள்ளது. இப்போது பல நவீன வீடுகளில் காஸ் சிலிண்டருக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் இன்டக்ஷன் (Induction Stove) அடுப்புகள் இடம்பிடிக்கத் தொடங்கியுள்ளன. 

பார்ப்பதற்குச் சாதாரணக் கண்ணாடிப் பலகை போலத் தெரியும் இந்த அடுப்புகள், உண்மையில் ஒரு அறிவியல் அற்புதம் என்றே சொல்லலாம். வழக்கமான மின்சார அடுப்புகளைப் போலச் செயல்படாமல், முற்றிலும் மாறுபட்ட தொழில்நுட்பத்தில் இவை இயங்குகின்றன. இந்த ஆண்டு உங்கள் சமையலறையை நவீனப்படுத்த நீங்கள் திட்டமிட்டிருந்தால், இன்டக்ஷன் அடுப்புகளைப் பற்றிய முழுமையான புரிதல் உங்களுக்கு அவசியம்.

காந்தப் புலம்!

வழக்கமான எலக்ட்ரிக் அடுப்புகளில் மின்சாரம் பாய்ந்து, அங்குள்ள கம்பிச் சுருளைச் சூடாக்கும். அந்த வெப்பம் பாத்திரத்திற்குக் கடத்தப்படும். ஆனால் இன்டக்ஷன் அடுப்பில் நடப்பதே வேறு. இதில் மின்சாரம் பாயும்போது, கண்ணாடியின் அடியில் ஒரு மின்காந்தப் புலம் உருவாகிறது. நாம் அதன் மேல் ஒரு இரும்பு அல்லது எஃகு பாத்திரத்தை வைக்கும்போது, அந்தக் காந்த சக்தி நேரடியாகப் பாத்திரத்தை மட்டுமே சூடாக்குகிறது. இங்கு அடுப்பு சூடாவதில்லை, பாத்திரம் மட்டுமே சூாகிறது. அடுப்பைத் தொட்டால் ஜில்லென்று இருக்கும், ஆனால் உள்ளே இருக்கும் பால் கொதிக்கும் விந்தையை இங்குதான் பார்க்க முடியும்.

எந்தப் பாத்திரம் சிறந்தது!

இந்த அடுப்பில் சமைப்பதற்கு எல்லா வகையான பாத்திரங்களையும் பயன்படுத்த முடியாது. காந்தத்தால் ஈர்க்கப்படக்கூடிய பாத்திரங்கள் மட்டுமே இதில் வேலை செய்யும். அலுமினியம், செம்பு, மண் பாண்டம் அல்லது கண்ணாடிப் பாத்திரங்களை இதில் பயன்படுத்தினால் சூடாகாது. உங்கள் வீட்டில் உள்ள பாத்திரங்கள் இதற்குச் சரியாக வருமா என்று சோதிக்க, ஒரு சிறிய காந்தத்தை எடுத்துப் பாத்திரத்தின் அடியில் ஒட்டிப் பார்க்கவேண்டும். காந்தம் ஒட்டிக்கொண்டால், அந்தப் பாத்திரம் இன்டக்ஷன் அடுப்பிற்கு ஏற்றது என்று அர்த்தம். இப்போது சந்தையில் இதற்கெனத் தனியாக வடிவமைக்கப்பட்ட பாத்திரங்களும் கிடைக்கின்றன.

இதையும் படியுங்கள்:
சமையல் எரிவாயு பயன்பாடு - அத்தியாவசிய பாதுகாப்பு குறிப்புகள்!
Induction Stove

பாதுகாப்பு!

இன்டக்ஷன் அடுப்பின் மிகப்பெரிய பலமே அதன் பாதுகாப்புத் தன்மைதான். காஸ் அடுப்பில் உள்ளதைப் போல இதில் தீச்சுடர் வெளியே வராது. மேலும் அடுப்பின் மேற்பரப்பு சூடாகாது என்பதால், சமைத்து முடித்தவுடன் தவறுதலாகக் கையை வைத்தாலும் சுடாது. வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் இது மிகவும் பாதுகாப்பானது. அதுமட்டுமல்லாமல், இது மிக வேகமாகச் சூடாவதால் சமையல் நேரம் மிச்சமாகும். பால் பொங்கி வழிந்தாலும், அது தீயில் கருகி அடுப்பில் ஒட்டிக்கொள்ளாது. எனவே இதைச் சுத்தம் செய்வது மிகவும் எளிது. எரிசக்தி விரயமாவதில்லை என்பதால் மின்சாரக் கட்டணமும் குறைவாகவே வரும்.

சில குறைபாடுகள்!

நன்மைகள் இருந்தாலும் இதில் சில குறைகளும் உள்ளன. முதலாவதாக, இதன் விலை மற்ற அடுப்புகளை விட அதிகம். இரண்டாவதாக, இதற்கு ஏற்ற பாத்திரங்களை வாங்கத் தனியாகச் செலவு செய்ய வேண்டியிருக்கும். காஸ் அடுப்பில் நெருப்பைப் பார்த்துச் சமைத்துப் பழகியவர்களுக்கு, நெருப்பே இல்லாமல் சமைப்பது ஆரம்பத்தில் சற்று விசித்திரமாகத் தோன்றலாம். மேலும், காஸ் அடுப்பில் தீயை ஏற்றி இறக்குவதுபோல, இதில் வெப்பத்தை உடனடியாகக் கட்டுப்படுத்துவது சிலருக்குக் கடினமாக இருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
குழாய் மூலம் இயற்கை எரிவாயு! 20 ஆயிரம் வீடுகளுக்கு வழங்க திட்டம்..!
Induction Stove

எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இன்டக்ஷன் அடுப்பிற்கு மாறுவது ஒரு சிறந்த முடிவாகவே இருக்கும். ஆரம்பத்தில் முதலீடு அதிகமாக இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் இது பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com