இண்டக்ஷன் ஸ்டவ் சமையல்: சரியான பாத்திரங்களை தேர்ந்தெடுப்பது எப்படி?

இண்டக்ஷன் ஸ்டவ் பயன்படுத்த எந்த மாதிரியான பாத்திரங்கள் சிறந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இண்டக்ஷன் ஸ்டவ் - Induction Stove
இண்டக்ஷன் ஸ்டவ் - Induction Stove
இந்திராணி தங்கவேல்

தஞ்சாவூரைச் சேர்ந்த இந்திராணி தங்கவேல், மங்கையர் மலரில் வெளியான முதல் கட்டுரை மூலம் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர், இன்று கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார். அருமையான சிறுகதைகளும் பயனுள்ள பல கட்டுரைகளும் எழுத வல்லவர்.

Updated on: 

இண்டக்ஷன் ஸ்டவ் வாங்கும்பொழுது அதில் வைத்து சமைக்க தகுந்த மாதிரியான சில பத்திரங்களை வாங்கி வருவது நல்லது. வீட்டில் இருப்பதை வைத்து அட்ஜஸ்ட் செய்யலாம் என்றால் அது முடியாமல் போகும். அதற்காகவே வடிவமைக்கப்பட்ட பாத்திரங்களில் சமைப்பதுதான் பாதுகாப்பானது. அதில் பொருந்தி எளிதாக சமையலை முடிக்க வல்லதும் கூட.

இண்டக்ஷன் ஸ்டவ் (Induction Stove) என்பது மின்காந்த அலைகள் (Electromagnetic Waves) மூலம் இயங்குவதால், காந்தப்புலத்தை ஏற்கும் திறன் கொண்ட பாத்திரங்களை மட்டுமே இதில் பயன்படுத்த முடியும்.

இந்த ஸ்டவ்வில் பயன்படுத்தக்கூடிய மற்றும் பயன்படுத்தக்கூடாத பாத்திரங்களின் விவரங்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

பயன்படுத்தக்கூடிய பாத்திரங்கள்

இண்டக்ஷன் ஸ்டவ்வில் சமைக்க பாத்திரத்தின் அடிப்புறம் தட்டையாகவும், காந்தம் ஒட்டும் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும். பாத்திரத்தின் அடியில் தடிமனான துருப்பிடிக்காத இரும்பு தகடு (Induction Base Plate) பொருத்தப்பட்ட ஸ்டீல், அலுமினியம் அல்லது காப்பர் பாத்திரங்கள். (இவற்றின் அடியில் "Induction Friendly" என்ற குறியீடு இருக்கும்). அவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சமையல் எண்ணெயில் தீப் பிடித்தால் உடனே தண்ணீரை ஊற்றலாமா? விபரீதத்தின் உண்மை!
இண்டக்ஷன் ஸ்டவ் - Induction Stove

இரும்பு பாத்திரங்கள்: தூய இரும்பு கடாய்கள், தோசைக் கடாய்கள் (Cast Iron Skillets & Tawas) இண்டக்ஷன் ஸ்டவ்வில் மிகச் சிறப்பாகவும் விரைவாகவும் சூடாகும்.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்: அடியில் காந்தம் ஒட்டக்கூடிய காந்தத்தன்மை கொண்ட ஸ்டீல் பாத்திரங்கள் (Flat-bottomed Stainless Steel) உகந்தது.

இனாமல் பூசப்பட்ட இரும்பு: இரும்பின் மீது இனாமல் கோட்டிங் செய்யப்பட்ட பாத்திரங்கள் உகந்தது.

எளிய பரிசோதனை: ஒரு பாத்திரத்தின் அடிப்பகுதியில் சிறிய காந்தத்தை வைத்துப் பார்க்கவேண்டும். காந்தம் பாத்திரத்தின் அடியில் வலுவாக ஒட்டிக்கொண்டால், அந்த பாத்திரத்தை இண்டக்ஷன் ஸ்டவ்வில் தாராளமாகப் பயன்படுத்தலாம். அதுபோல் ஒட்டும் பாத்திரங்களை பயன்படுத்தி எளிதில் சமையலை முடிக்கலாம்.

பயன்படுத்தக்கூடாத பாத்திரங்கள்: அடிப்புறம் காந்தம் ஒட்டாத மற்றும் தட்டையாக இல்லாத பாத்திரங்கள் இண்டக்ஷன் ஸ்டவ்வில் சூடாகாது.

சாதாரண அலுமினியப் பாத்திரங்கள்: அடியில் இண்டக்ஷன் பிளேட் இல்லாத சாதாரண அலுமினியக் கடாய், குக்கர் போன்றவையும் வேலை செய்யாது. அதனால் அது போன்றவற்றையும் ஒதுக்கிவிட வேண்டும்.

செம்பு / தாமிரப் பாத்திரங்கள்: அடியில் ஸ்டீல்/இரும்பு பிளேட் இல்லாத தூய தாமிரப் பாத்திரங்கள் வேலைக்கு ஆகாது.

பாரம்பரிய பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள் காந்த ஈர்ப்பு இல்லாததால் சூடாகாது.

கண்ணாடி மற்றும் பீங்கான் பாத்திரங்கள்: மைக்ரோவேவ் ஓவனில் பயன்படுத்தப்படும் கண்ணாடிக் பாத்திரங்களை இண்டக்ஷன் ஸ்டவ்வில் வைக்கக் கூடாது.

மண்பாண்டங்கள் (Clay Pots): பாரம்பரிய மண் சட்டிகள் இண்டக்ஷனில் வேலை செய்யாது.

குழிவான அல்லது வளைந்த அடிப்பாகம் கொண்ட பாத்திரங்கள்: பாத்திரத்தின் அடியில் காந்தத்தன்மை இருந்தாலும், அடிப்புறம் தட்டையாக (Flat Base) இல்லாமல் வளைந்து (Round/Convex Bottom) இருந்தால் இண்டக்ஷன் ஸ்டவ்வுடன் சரியான தொடர்பு கிடைக்காமல் சூடாகாது. ஆதலால் இது போன்றவற்றையும் தவிர்த்து விடவேண்டும்.

இண்டக்ஷன் ஸ்டவ் - Induction Stove
இண்டக்ஷன் ஸ்டவ் - Induction Stove

முக்கிய குறிப்புகள்:

பாத்திரத்தின் அளவு: இண்டக்ஷன் ஸ்டவ்வில் வரையறுக்கப்பட்டுள்ள வட்டத்திற்கு (Heating Zone) மிகச் சிறியதாகவோ அல்லது மிகவும் பெரியதாகவோ இருக்கும் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாம்.

தட்டையான மேற்பரப்பு: இண்டக்ஷன் ஸ்டவ்வின் கிளாஸ் டாப் சேதமடையாமல் இருக்கவும், வெப்பம் சீராகப் பரவவும் பாத்திரத்தின் அடிப்பாகம் எந்த மேடு பள்ளமும் இல்லாமல் முற்றிலும் தட்டையாக இருப்பது அவசியம்.

தட்டையான அடிப்பாகம் கொண்ட சிறிய பாத்திரங்களை வைக்க வேண்டும் என்றால் 20 சென்டிமீட்டரில் இருக்கும் இண்டக்ஷன் அடாப்டரை வாங்கி வைத்துக்கொள்ளலாம். தோசை கல் போன்ற வடிவத்தில் இருக்கும் கைப்பிடி கொண்ட அதில் வைத்து சூடு படுத்தினால் எடுக்க எளிதாக இருக்கும். எந்தவித அச்சமும் இல்லாமலும் சமையலை முடிக்கலாம்.

இதை விடுத்து நாம் நம் இஷ்டப்படி எந்த பாத்திரத்தை வைத்தாலும் அதில் பொருந்தாது, சூடாகாது என்பது நிதர்சனம். இதைப் படிப்பதால் இண்டக்ஷன் ஸ்டவ்வில் சமைக்கும்பொழுது முன்னெச்சரிக்கையாக எப்படிப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவை பெறுவர்.

இதையும் படியுங்கள்:
இனி சமைக்கும் போது முகத்தில் எண்ணெய் தெறிக்காது... ரகசியத்தை படிங்க!
இண்டக்ஷன் ஸ்டவ் - Induction Stove