
கூழாங்கற்கள் பதிக்கப்பட்ட பங்களாக்களின் நடைபாதைகளை காணும்போது நாமும் அதன் மேல் சற்று நடந்தால் என்னவென்று தோன்றும். ஏனெனில், எளிதில் நம்மை வசீகரித்து விடும் அழகு கொண்டது கூழாங்கற்கள். விதவிதமான வடிவங்களில் மொழுமொழுவென்று நம்மை கைகளில் எடுத்து உருட்டச் சொல்லும் கூழாங்கற்கள் எப்படி உருவாகின்றன தெரியுமா?
கூழாங்கற்கள் பெரும்பாலும் கடற்கரை மற்றும் ஆற்றுப்படுகையில் காணப்படும் பாறை வகையைச் சேர்ந்தது. பல நூற்றாண்டுகளாக நீர் அரிப்பு மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கனிமங்களின் கரடுமுரடான அசைவுகள் காரணமாக வட்டமான விளிம்புகளுடன் வெள்ளை, கருப்பு, பழுப்பு, சாம்பல் வண்ணங்களின் கலவையில் பல்வேறு வடிவங்கள், அளவுகளில் இயற்கையாக உருவாகிறது. பழைய கற்கால நாகரிகத்தில் கருவிகளாக இவை பயன்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இவற்றின் இயற்கையான கவர்ச்சி காரணமாக அவை கட்டடக்கலையின் உட்புறம் மற்றும் வெளிப்புறப் பயன்பாட்டிற்கு ஏற்றதாகக் கருதப்படுகின்றன. வீடுகளில் அலங்காரப் பொருளான இதன் பயன்பாடு குறித்து இப்பதிவில் காண்போம்.
வீடுகளில் கூழாங்கற்களைப் பயன்படுத்துவதற்கு பல தேர்வு செய்த இடங்கள் உள்ளன. மொட்டை மாடி, தோட்டம், முன்புறம், நீரூற்றுகள் மற்றும் வீட்டுக்குள் பூந்தொட்டிகளில் கூழாங்கற்களைப் பயன்படுத்தலாம். இவை வீட்டின் அழகை அதிகரிப்பதோடு, இயற்கையான தோற்றத்தையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.
தோட்டத்தை அலங்கரிப்பதில் பொதுவான தேர்வுகளில் ஒன்றாகிறது இது. அவற்றின் மென்மையான தன்மை, நேர்த்தி மற்றும் எளிமை ஆகியவை தோட்டத்திற்கு அழகியலை அளிக்கின்றன. மேலும், களைகளை கட்டுப்படுத்தவும், வடிகால் வசதியை மேம்படுத்தவும் இவை உதவுகின்றன. வட்ட வடிவத்துடன் பல்வேறு அளவுகள் மற்றும் வண்ணங்களில் கிடைக்கும் ஆற்று கூழாங்கற்களை நீர்நிலைகள், பாதைகள் மற்றும் தோட்டப் படுகைகளில் பதித்தால் அழகு. சிறிய, மென்மையான கூழாங்கற்களைப் பயன்படுத்தி பல்வேறு வடிவங்கள், உருவங்கள் அல்லது சிற்பங்களை உருவாக்கி வீட்டில் வரவேற்பறையில் வைப்பது காண்பவரை மகிழ்ச்சிப்படுத்தும்.
இயற்கையாகக் கிடைக்கும் கற்கள், செயற்கையாக மெருகூட்டப்பட்டு பளபளப்பான பளிங்குக் கற்களாக தற்போது கிடைக்கிறது. வெள்ளை மற்றும் பிற வெளிர் வண்ணங்களில் இருக்கும் இவை வீடுகளின் உட்புறம் பயன்படுத்தப்படுவதால் நேர்த்தியான உணர்வு பெறலாம். தற்போது வீட்டிலேயே நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு பயனுள்ளதாக இது அமைகிறது. மொட்டை மாடி அல்லது வீட்டின் முன் பாகத்தில் வடிவமைக்கப்பட்ட கூழாங்கற்களால் ஆன இடம், கூழாங்கல் மீதான நடைப்பயிற்சி கால் பாதங்களுக்கு புத்துணர்வைத் தரும். காலில் உள்ள நரம்புப் புள்ளிகள் தூண்டப்பட்டு உடல் செயல்பாடு சீராகி, ஆரோக்கியம் மேம்பட கூழாங்கற்கள் பாதை அமைக்கலாம்.
குறிப்பாக, தற்போது வீட்டில் பெரியவர்கள் உள்ள அறைகளில் வழுக்காத வகையில் சிறு சிறு கற்கள் பதித்த தரைகளை வடிவமைக்கலாம். ஆனால், இது அவர்களை பாதிக்காத வகையில் இருப்பது நல்லது. வண்ண வண்ண மீன்கள் இருக்கும் தொட்டிகளில் அழகுக்காகவும் மீன்கள் உற்சாகத்துடன் நீந்தவும் வண்ண வண்ண கூழாங்கற்களைப் போடுவது தற்போது அதிகரித்து வருகிறது. கூழாங்கற்கள் வீட்டுக்குள் வைக்கப்படும் பூந்தொட்டிகளில் பயன்படுத்தப்படுவது சிறப்பு. காரணம், அவை மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது.
கூழாங்கற்களுக்கு செல்வத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது என நம்பப்படுவதால் வீட்டில் உள்ள பணப்பெட்டியிலும் வைக்கலாம் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். கூழாங்கற்கள் மூலம் உருவாக்கப்படும் மொசைக் தரைகள், விலங்குகள், மனிதர்கள் மற்றும் இயற்கை அடிப்படை சிற்பங்கள், சுவரில் பதிக்கப்பட்ட வடிவமைப்புகள் இப்படி நாம் விரும்பும் வகையில் கூழாங்கற்களைப் பயன்படுத்தி பெருமையும் மனநிறைவும் பெறலாம்.
எனினும், கூழாங்கற்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான பண்புகள் மற்றும் அழகியலை வழங்கும் பல வகைகள் உள்ளன. அத்துடன் பல அளவுகளில் இருக்கும் இதை கவனமுடன் கட்டட வடிவமைப்பாளர் உதவியுடன் பொருத்துவது நல்லது. குறிப்பாக, கூழாங்கல் நடைபாதையை அமைக்கும்போது, கூழாங்கற்களின் அளவை கவனத்தில் கொள்வது கால்களுக்கு நல்லது.