
வாழ்க்கையில் முன்னேறிய நபர்களின் வளர்ச்சிக்கு, பணம், அறிவு, உழைப்பு, அதிர்ஷ்டம் இவைதான் காரணம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனில் நீங்கள் முக்கியமான ஒன்றைத் தவற விடுகிறீர்கள் என்றுதான் அர்த்தம். அந்த முக்கியமான ஒன்றைப் பற்றித்தான் இந்தப் பதிவில் காண்போம்.
இந்தக் காலகட்டத்தில் ஒருவர் முன்னேறுவதற்கு பணம், உழைப்பு, அதிர்ஷ்டம், அறிவு முக்கியம்தான். ஆனால், இவற்றை விட முக்கியமான ஒன்று அந்த நபரின் ‘வட்டம்.’ ஒருவர் தன்னுடைய வாழ்க்கை வட்டத்தில் எத்தகைய நபர்களை வைத்திருக்கிறார் என்பதுதான் இன்றைய காலகட்டத்தில் அவரின் வெற்றியினை வளர்ச்சியினைத் தீர்மானிக்கிறது. பணம், அறிவு, அதிர்ஷ்டம், உழைப்பு சாதித்துக் கொடுக்காததை தொடர்புகள் சாதித்துக் கொடுக்கலாம்.
வாழ்க்கையில் முன்னேற விரும்பும் நபராக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் உங்களது வாழ்க்கை வட்டத்தில் பின்வரும் மூன்று நிலைகளில் நபர்களைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள்.
முதலாவது செயல்பாட்டு நிலை: நீங்கள் நினைப்பதை, சொல்வதை, உங்களின் ஐடியாக்களைச் செயல்படுத்தித் தரக்கூடிய நபர்களை உங்களின் முதல் நிலை வாழ்க்கை வட்டத்தில் சேகரித்துக் கொள்ளுங்கள்.
இரண்டாவது செயல் தந்திர நிலை: முறையாக திட்டம் வகுக்க, செயல் தந்திரமாக (Strategic) யோசிக்க உங்களைத் தூண்டும் அல்லது வழிநடத்தும் நபர்களை இரண்டாம் நிலை வட்டத்தில் வைத்துக்கொள்ளத் தவற விடாதீர்கள்.
மூன்றாவது பேரார்வ நிலை: நீங்கள் வகுத்துக்கொண்ட எல்லைகளைத் தாண்டி உங்களைத் தள்ளி விட, போதுமென்று நிற்கும்போது இன்னும் போவென்று விரட்ட, நீங்கள் நிர்ணயித்த இலக்கின் உயரத்தை இன்னும் கொஞ்சம் ஏற்றி விட, பேரார்வத்தைத் தூண்டக்கூடிய, நீங்கள் வளர்வதற்கு உதவ முடிகிற நபர்களை மூன்றாம் நிலை வட்டத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
‘பெரிதாக வளர முடியவில்லையே’ என்று பலரும் நினைப்பதற்கு முக்கியக் காரணம், அவர்களுடைய வட்டம் முதல் நிலையோடு பெரும்பாலும் நின்றுபோவதுதான். நீங்கள் நினைப்பதை மட்டும், உங்களின் ஐடியாக்களை மட்டும், நீங்கள் சொல்வதை மட்டும், செய்து தரக்கூடிய நபர்களோடு உங்களது வாழ்க்கை வட்டம் முடிந்துவிட்டால் பெரிதாக வளர உங்களால் முடியாது. Strategic மற்றும் Aspiratonal நிலை வரை உங்களின் வாழ்க்கை வட்டத்தினை விரிவுபடுத்திக் கொண்டால் மட்டுமே நீங்கள் நினைக்கிற அளவுக்குப் பெரிதாக வளர்ச்சி அடைய முடியும். எனவே, உங்கள் வாழ்க்கை வட்டத்தின் விட்டத்தினை நீங்களே நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.