
புலி பசித்தாலும் புல்லைத் திங்காது? இந்த பழமொழியை நாம் எல்லோருமே கேள்விப்பட்டிருப்போம்..
பொதுவாக வீட்டில் நாம் ஒரு உணவை செய்து அந்த உணவை வீட்டில் உள்ளவர்கள் யாராவது பிடிக்காமல் சாப்பிடாமல் போனால், இந்த பழமொழியைக் கூறி, மிகவும் திமிர் உனக்கு என்று கூறி அவர்களை கடிந்து கொள்வோம். வறட்டு கௌரவத்தோடும் பிடிவாதத் தோடும் இருப்பவர்களையும் இவ்வாறு கூறுவோம். சரி, இந்த பழமொழிக்கான அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?
புலி அசைவத்தை உண்ணும் ஒரு விலங்கு. அது மற்ற விலங்குகளை வேட்டையாடி தன் பசியை தீர்த்து கொள்ளும். அப்படி இருக்கையில் அது எப்படி புல்லை உணவாக உண்ணும்?
காட்டு விலங்குகளில் சில விலங்குகள் உணவு கிடைக்காமல் பசியால் வாடும் போது பசியை தாங்க முடியாமல் தான் பெற்ற குழந்தைகளையே கொன்று தின்றுவிடும். துருவக் கரடிகள், புல்வெளி நாய்கள், சிங்கம், சிம்பன்சி போன்ற விலங்குகள் இதற்கு எடுத்துக் காட்டாக திகழ்கின்றன. இது அவைகளின் இயல்பு. புலி பசித் தாங்காமல் புல்லை உண்ணுமா??
உண்மையில் நாம் கூறும் இந்த பழமொழியே தவறு. தவறான பழமொழியை கூறி அடுத்தவர்களை இழிவு படுத்துவது மட்டிமில்லாமல் புலியின் நற் குணத்திற்கும் நாம் கேடு விளைவித்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா...
உண்மையான பழமொழி என்ன என்று தெரியுமா??
“புலி பசித்தாலும் பிள்ளையை திங்காது” என்பதுதான் உண்மையான பழமொழி ஆகும். புலியின் அற்புதமான குணத்தை எடுத்து காட்டும் இந்த பழமொழி நாளடைவில் மருவி தவறான கருத்தோடு புலி பசித்தாலும் புல்லை திங்காது என்றாகிவிட்டது.
அதாவது என்னவே பசித்தாலும், பசியினால் உயிரேப் போனாலும் புலியானதுதான் பெற்ற குழந்தையை ஒருபோதும் உண்ணாது என்பதுதான் இந்த பழமொழியின் மிகச்சிறந்த கருத்தாகும்.
இந்த பழமொழி நமக்கு கற்பிக்கும் பாடம்:
இந்த பழமொழி நமக்கு என்ன அறிவுறுத்துகிறதென்றால், எப்படிபட்ட சூழ்நிலையிலும், இன்னல்களிலும், சந்தர்ப்பத்திலும், நாம் நம்முடைய ஒழுக்கமான நிலையிலிருந்தும் கொள்கையிலிருந்தும் தவறக் கூடாது; எக் காரணத்தை கொண்டும் நல் வழியிலிருந்து விலகி தீய வழிக்கு செல்லக் கூடாது மற்றும் யாருக்கும் தீங்கிழைக்கவும் கூடாது என்பதே ஆகும். மேலும் புலியின் நற்குணமானது, நம் சுய நலத்திற்காக அடுத்தவர்களை அழிக்கக்கூடாது என்கிற தத்துவத்தையும் நமக்கு சுட்டி காட்டுகிறது.
எத்தனை அழகான பழமொழியை நாம் மாற்றியது மட்டுமல்லாமல் அதன் மூலமாக அர்த்தத்தையும் மாற்றிவிட்டோம். இப்போது உங்களுக்கு இந்த பழமொழியின் உண்மையான விளக்கமும் கருத்தும் புரிந்திருக்கும் என நான் நம்புகிறேன்.