
சின்ன வயதில் ஆரோக்கியம் பற்றிய பெரிதாக விழிப்புணர்வு இருந்ததில்லை. உடல் ஒத்துழைத்ததால் விடாது ஓடிய பரபரப்பான வாழ்க்கையில் அதற்கான முக்கியத்துவம் கொடுத்ததில்லை. நேரத்திற்கு உண்டதில்லை. சரியான உடற்பயிற்சி இல்லை. குதிரை முன் நீட்டப்படும் கேரட் போல. குடும்பத்தின் கடமைகள் மட்டுமே முன்னிற்க உடல் நலத்தை பேணுவதற்கு தனியாக கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மை. வயதான பிற்பாடு அது எவ்வளவு தவறு என்று இப்போது புரிகிறது.
நம் உடல் நலத்தை பேணுதல் மிகவும் முக்கியம் என்பது சற்று தாமதமாகவே புரிந்தது. "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்பது திருமூலர் வாக்கு. அதன் அர்த்தம் நாம் உயிருடன் இருப்பதற்கு உடல் நலம் பேணுதல் மிகவும் அவசியம். உடலைப் பேணி உயிரை தக்கவைத்துக் கொண்டாலே பேரருளாம் இறைவனை நாம் அடைய வழி அமையும் என்பதே அதன் தத்துவம்.
ஆரம்ப காலகட்டத்தில் ஆரோக்கியம் பற்றிய பெரிதாக விழிப்புணர்வு இல்லை. சிறுவயது என்பதால் உடல் நலம் பேணுதல் எளிதாக இருந்தது. பெரிதாக பிரச்னைகள் கிடையாது. நாணல்போல் எந்த சூழலுக்கும் வளைந்து கொடுக்கும் ஆரோக்கியம் உடலுக்கும் இருந்தது.
பொதுவாகவே எல்லோருக்குமே வயதாகும்போதுதான் பிரச்னைகள் தலைகாட்டும். அழையா விருந்தாளியாக உடல் உபாதைகள் வரும். இருந்தாலும் அவையெல்லாம் சமாளித்துக் கொண்டுபோக மன தைரியம் மிகவும் அவசியம். மனம் தளர்ந்துவிட்டால் உடலும் தளர்ந்துவிடும் என்பது என் வலுவான எண்ணம். இளம் பருவத்தில் இன்னும் கொஞ்சம் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அப்போது குடும்ப தேவைகளின் ஓட்டத்தில் நேரத்திற்கு சரியான நேரத்துக்கு உணவு. முறையான உடற்பயிற்சிகள் எதுவும் இன்றி வேலை வேலை வேலை என்று இருந்தது சற்று தவறாக தோன்றுகிறது.
சத்துணவு பற்றிய விழிப்புணர்வு இப்போது அதிகமாக வந்துவிட்டது. முன் ஒரு காலத்தில் காய்கறி, சத்துள்ள பழங்கள், என்றால் வீட்டில் இருக்கும் ஆண்களுக்கும், குழந்தைகளுக்கு மட்டுமே. பெண்கள் அனேகமாக சாதாரண சாப்பாடுதான். முதலில் விழிப்புணர்வை கொண்டு வந்தது தூர்தர்ஷன்.. அதில் வரும் பெண் காய்கறி, கீரை எல்லாவற்றையும் கணவனுக்கும், குழந்தைகளுக்கும், போட்டுவிட்டுதான் வெறும் சாதத்தை மோர் விட்டு சாப்பிடுவார். அவள் கணவர் அந்த தட்டையகற்றி விட்டு சத்துள்ள காய்கறிகள், முட்டை, பருப்பு, கீரை, நிறைந்த ஒரு தட்டை அவர் முன் வைப்பார். பெண்களுக்கும் சத்துணவு அவசியம் என்று கூறிய முதல் விளம்பரம் அது.
எங்கள் காலத்திலும் அதுதான் நடந்தது. பின்னர்தான் சத்துணவு சாப்பிடுவதன் அவசியமும், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, அவசியமும் உணர்த்தப்பட்டது.
இப்பொழுதெல்லாம் என் மெனுவில் ஒன்று அல்லது இரண்டு காய்கறிகள், பருப்பு வகைகள், சத்துள்ள கீரை மற்றும் சுண்டல், சூப் என சத்து நிரம்பியதாக இருக்கும். அத்துடன் முடிந்த அளவு நடைப்பயிற்சி… முறையான மருத்துவ பரிசோதனை… பரிசோதனையில் சரியான அளவில் இல்லாத விஷயத்தை சரி பண்ணுவது… என ஆரோக்கியம் பேணுவதை கடமையாக நினைக்கிறேன். என் ஆரோக்கியம் குறைந்தால் அது மொத்த குடும்பத்தையும் பாதிக்கும் என்பதை உணர்கிறேன்.
எனவே தோழிகளே… உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் உங்கள் குடும்பம் நிம்மதியாக பாதுகாப்பாக இருக்கும்.