புத்தாண்டுத் தீர்மானம் எடுத்துக் கொள்ளுங்கள்!

New Year's Resolution
New Year's Resolution
தேனி மு.சுப்பிரமணி

தேனி மு. சுப்பிரமணி தேனியில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிருவாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிய தேனி மு. சுப்பிரமணி, கல்லூரி நிருவாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறிய பின்பு, தமிழில் வெளியாகும் பல்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். ஆன்மிகம், கணினி, இணையம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். இதுவரை இவர் எழுதிய பத்தொன்பது நூல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் எழுதிய ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நடைமுறை வாழ்க்கையில் தூயதமிழைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும் இவரைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் 2022 ஆம் ஆண்டுக்கான ‘தூயதமிழ்ப் பற்றாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையினால் நடத்தப்பெற்று வரும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை, ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பெறும் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ‘இணையத்தமிழ்’ தொடர்பாகப் பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இவர், தற்போது தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், சென்னை, சங்கம் தமிழ் அறக்கட்டளையின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். முத்துக்கமலம் (www.muthukamalam.com) எனும் பெயரில் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454 - 1990) ஒன்றினை 2006 ஆம் ஆண்டில் தொடங்கி, அதன் ஆசிரியராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் குறித்து ஆய்வு செய்து இருவர் எம்.பில் பட்டங்களைப் பெற்றிருக்கின்றனர். ‘முத்துக்கமலம் இணைய இதழின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களின் பட்டியலில் முத்துக்கமலம் இதழ் ஒரு ஆண்டு காலம் இடம் பெற்றிருந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

Updated on

புத்தாண்டின் போது, புதிய ஆண்டில் ஒருவர் ஏதாவது ஒன்றைச் செய்வதாகவோ அல்லது கடைப்பிடிப்பதாகவோ உறுதி எடுத்துக் கொள்வதை, ‘புத்தாண்டுத் தீர்மானம்’ (New Year's Resolution) என்று சொல்கின்றனர்.

முன்பு, மேற்கு நாடுகளில் ஒரு மரபாக இருந்து வந்த இவ்வழக்கம், தற்காலத்தில் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவி இருக்கிறது.

புத்தாண்டுத் தீர்மானங்கள் என்பது, பொதுவாக உறுதி எடுத்துக் கொள்பவர் தனது பழக்க வழக்கங்களையோ இயல்புகளையோ மேம்படுத்திக் கொள்வது, ஏதாவது நல்ல செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றோடு தொடர்புடையனவாகவே அமைகின்றன.

புத்தாண்டுத் தீர்மானங்களை எடுக்கும் வழக்கம் எப்போது தோன்றியது? என்பது குறித்த உறுதியான தகவல்கள் எதுவுமில்லை. இருப்பினும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பாபிலோனியாவில் தமது கடவுளுக்கு முன் இவ்வாறான உறுதிமொழிகளை எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது. அவர்களுடைய தீர்மானங்கள், இரவலாக வாங்கிய பொருட்களைத் திரும்பக் கொடுப்பது, வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்துவது போன்றவைகளாக அமைந்திருந்தன.

ரோமர்கள், புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரிக்கு உரிய கடவுளான, ‘சானுசு’ என்னும் கடவுளுக்கு இது போன்ற உறுதிமொழிகளைக் கொடுத்திருக்கின்றனர்.

ஐரோப்பாவின் நடுக்காலத்தில், பிரபுக்கள் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் விழாவிற்குப் பின்னரும் பிரபுகளுக்கு உரிய நெறிமுறைகளின் படி நடப்பதாக உறுதி எடுத்துக் கொள்வது வழக்கமாக இருந்திருக்கிறது என்கிற தகவல்களை மட்டுமே நம்மால் அறிய முடிகிறது.

தற்கால புத்தாண்டுத் தீர்மானங்கள் சில:

1. உடல் நலத்துக்கு உகந்த உணவு வகைகளை உட்கொள்ளல், உடல் எடையைக் குறைத்தல், உடற்பயிற்சியில் ஈடுபடல், மதுப்பழக்கத்தைக் குறைத்தல், புகைபிடிப்பதை நிறுத்துதல் போன்ற உடல் நலம் பேணும் வழக்கங்கள்.

2. ஆக்க வழியில் சிந்தித்தல், கூடுதலாகச் சிரித்தல், வாழ்க்கையைச் சிறப்பாக அனுபவித்தல் என்பது போன்ற உள நலத்தை மேம்படுத்தல்

3. கடன்களில் இருந்து மீளுதல், சேமித்தல், சிறிய முதலீடுகளைச் செய்தல் போன்ற நிதி நிலைமையை மேம்படுத்தல்

4. தற்போதைய வேலையை மேலும் திறம்படச் செய்தல், மேம்பட்ட புதிய வேலையில் சேருதல், சொந்தமாகத் தொழில் தொடங்குதல் உள்ளிட்ட தொழில் மேம்பாடு

5. அதிக மதிப்பெண்கள் பெறுதல், புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ளல், அடிக்கடி படித்தல், நூல்கள் வாசித்தல், திறன்களை வளர்த்துக் கொள்ளல் என்பது போன்ற கல்வி மேம்பாடு

இதையும் படியுங்கள்:
2025 புத்தாண்டு வாழ்த்துகள்!
New Year's Resolution

6. தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ளல், நேர மேலாண்மை, கூடிய அளவு பிறரில் தங்கியிருப்பதைத் தவிர்த்தல், தொலைக்காட்சி பார்ப்பதைக் குறைத்தல் போன்ற தனிப்பட்ட மேம்பாடு

7. தேவையானவர்களுக்கு வேண்டியவற்றை ஈதல், சமூகத் தொண்டில் ஈடுபடல் போன்ற பிறருக்கு உதவுதல்

8. பிறருடன் சிறந்த முறையில் பழகுதல், சமுதாய அறிவாண்மையை மேம்படுத்துதல் உள்ளிட்ட சமுதாயத் திறன்களை வளர்த்துக் கொள்ளல்

9. புதிய நண்பர்களைப் பெற்றுக் கொள்ளல், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவு செய்தல், சொந்த வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொள்ளல், புதிய பண்பாடுகளை அறிதல், கூடுதலாக இறைவனை வணங்குதல்

இதையும் படியுங்கள்:
வாட்ஸ்அப்பில் புத்தாண்டு வாழ்த்துகள் வந்தால் உஷார் மக்களே!
New Year's Resolution

என்பது போன்று அவரவரவர் விருப்பங்களுக்கும் தேவைகளுக்குமேற்றபடி ‘புத்தாண்டுத் தீர்மானம்’ எடுத்துக் கொள்கின்றனர்.

10. ***(இது உங்கள் தீர்மானத்துக்கான இடம்)***

வருகிற 2025 ஆம் புத்தாண்டில் நீங்களும் உங்கள் தேவைக்கேற்ற, உங்கள் வாழ்வை வளப்படுத்தும் அல்லது நல்வழிப்படுத்தும் தீர்மானங்களை எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

logo
Kalki Online
kalkionline.com