.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
‘தினசரி அன்றாட வேலைகளைப் பார்க்கவே நேரம் சரியாக இருக்கு. இதில் எங்கிருந்து உடற்பயிற்சிக்கு நேரமிருக்கு’ என்று அலுத்துக்கொள்பவர் அதிகம். அதிலும் குடும்பப் பெண்களுக்கு என்றால் கேட்கவே வேண்டாம். அதைத் தாண்டி வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை உடற்பயிற்சிக்கு என்று நேரம் ஒதுக்குவது மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனாலும், உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு உடற்பயிற்சிக்கு என்று நேரம் ஒதுக்குங்கள்.
வொர்க்-அவுட்டுக்குப் பின் என்ன செய்யக் கூடாது?
கார்போஹைட்ரேட் உணவுகள் வேண்டாம். வொர்க்-அவுட் முடிந்ததும் கார்போஹைட்ரேட் உணவுகளை உண்ணக் கூடாது. இவை உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். மாறாக, அதிக புரோட்டீன் சத்துள்ள உணவுகளை உண்பதால் அவை உடலின் தசை வளர்ச்சிக்கு உதவும். வொர்க்-அவுட் செய்து முடித்த பிறகு மறந்தும் கூட கீழ்கண்ட 9 விஷயங்களில் கண்டிப்பாக கவனம் செலுத்தியாக வேண்டும். அதுதான் நல்ல பலனைத் தரும்.
1. ரன்னிங், சைக்கிளிங் கூடாது: ட்ரெட்மில்லில் ஓடுதல், சைக்கிளிங் போன்ற கார்டியோ (Cardio) வார்ம்-அப் வகைப் பயிற்சிகளை வொர்க்-அவுட் செய்த பிறகு, கண்டிப்பாகச் செய்யக் கூடாது. ஏற்கெனவே கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்துவிட்டு மீண்டும் வாம்-அப் பயிற்சிகளைச் செய்வதால், அது மூட்டுகளையும் தசைகளையும் பாதிக்கும். உடற்பயிற்சி செய்வதற்கு முன்புதான் இவற்றைச் செய்ய வேண்டும். உடற்பயிற்சி முடித்த பிறகு, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைத்தான் செய்ய வேண்டும்.
2. தண்ணீர் வேண்டும் ஆனால்... வேண்டாம்: உடற்பயிற்சி செய்து முடித்ததும் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் குறைந்தபட்சம் 5 நிமிட இடைவெளிக்குப் பிறகே குடிக்க வேண்டும். ஏனெனில்,கடுமையான உடற்பயிற்சியின்போது அதிகமாக இருந்த இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பு சாதாரண நிலைக்கு வர சிறிது நேரம் எடுத்துக்கொள் ளும். எனவே, உடனே தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.
3. குளிர்பானங்கள் வேண்டாம்: வொர்க்-அவுட் முடித்தவுடன் உடல் களைப்பாக இருப்பதாக உணர்ந்தால் உடனே அதிகம் சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர் பானங்களையோ, சோடா போன்றவற்றையோ குடிக்கக்கூடாது. அதிகமான சர்க்கரை மீண்டும் உடலின் கலோரிகளை அதிகரித்துவிடும். எனவே, தண்ணீர் குடிப்பதே சிறந்தது.
4. உடையை மாற்றிவிடுங்கள்: வொர்க்-அவுட் முடித்ததும் நேராக வீட்டுக்குச் சென்று, உடையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனெனில், உடற்பயிற்சியின்போது ஏற்பட்ட வியர்வையால், உடையில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளின் தொற்று ஏற்பட்டிருக்கலாம். வொர்க்-அவுட்டின்போது உடுத்திய உடையை நீண்ட நேரம் உடுத்தினால், சருமத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம்.
5. சீஸ் வேண்டாம்: உடற்பயிற்சி செய்து முடித்ததும் சீஸ், பதப்படுத்தப்பட்ட சிக்கன் சேர்க்கப்பட்ட பர்கர் போன்ற உணவுகளை உண்ணக்கூடாது. ஏனெனில், அவற்றில் கொழுப்பு மற்றும் உப்பு அதிகளவில் நிறைந்துள்ளன. இவை உடல் எடையை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பாதிக்கும்.
6. வெள்ளை பிரெட் சாப்பிடாதீர்கள்: பிரெட்டில் உள்ள ஸ்டார்ச் வேகமாகச் சர்க்கரையாக மாறக்கூடியது. எனவே, இதை அதிகளவில் சாப்பிடாமல், குறைந்த அளவில் சாண்ட்விச்சாக உண்ணலாம். முக்கியமாக வெள்ளை நிற பிரெட் உண்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
7. ஷவர் குளியலுக்கு நோ: வொர்க்-அவுட் முடித்ததும் வியர்வைப் படலம் ஏற்பட்டு, பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே, உடற்பயிற்சிக்குப் பிறகு, குளித்துவிடுவது நல்லது. ஆனால், ஷவரில் குளிப்பது ஏற்றதல்ல. குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்.
8. ஜூஸ், மில்க் ஷேக் வேண்டாம்: ஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றை உடற்பயிற்சிக்குப் பின் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவற்றில் சர்க்கரை அதிகம் இருப்பதால். அவையும் உடல் எடையை அதிகரிக்கக் காரணமாகி விடும்.
9. ஆம்லெட்டுக்கு நோ சொல்லுங்கள்: உடற்பயிற்சிக்குப் பின் முட்டை சாப்பிடுவது நல்லதுதான். முட்டையில் புரோட்டீன் மற்றும் கோலைன் அதிகம் உள்ளது. ஆனால், முட்டையைப் பொரித்தோ வறுத்தோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வேகவைத்து உண்ணலாம்.